Sunday, January 28, 2024

75வது குடியரசு தின விழா - பண்பாட்டு விழாவாக சிறப்பாக நிறைவேறியது


வணக்கம்.  நமது சொசைட்டி 75வது குடியரசு தின விழா - பண்பாட்டு விழாவாக  இன்று ஜூம் கூட்டம் வழியாக சிறப்பாக நிறைவேறியது.

 

குடியரசு தினம் என்றால், இந்தியா சுதந்திரம் பெற்று, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிற்கென அரசியலைப்பு சட்டம் ஒன்றை தொகுத்து, அந்த சட்டம் செயலாக்கத்திற்கு வந்த நாளாகும்.

 


”மூன்றாவது ஆண்டாக இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம்.  வேலை, வேலை என  தொடர்ந்து கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறோம். நாமும், நமது குழந்தைகளும் கொண்டாட்டங்களிலும் ஈடுபடவேண்டும் என்பதற்காக தான் தொடர்ந்து ஏற்பாடு செய்கிறோம். கடந்த ஆண்டை விட, இந்த முறை புதிதாக நிறைய பேர் பங்குபெற்றிருக்கிறார்கள். கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்க இருக்கிறோம். அனைவருக்கும் வாழ்த்துகள்” என கூட்டத்தை  தலைவர் துவங்கிவைத்தார்.

 


நிறைய பாடல்கள், ஒரு ஆடல், சிலம்பாட்டம், யோகா, ஸ்கேட்டிங், கவிதை வாசிப்பு, மாறுவேடம், குறும்படம் என அடுத்தடுத்து நமது உறுப்பினர்களும், பெரும்பாலும் குழந்தைகளும் என அடுத்தடுத்து அசத்தினார்கள். ஒரு செயலை குழந்தைகள் செய்யும் பொழுது, அதன் அழகு பல மடங்கு கூடிவிடுகிறது. பங்குபெற்ற எல்லோருக்கும் வாழ்த்துகள்.

 

துவக்கத்தில் குறைவாக தான் காணொளிகள் வந்தன. ஆனால், நாட்கள் நெருங்க நெருங்க நிறைய காணொளிகள் வரிசையாக வந்து சேர்ந்து இருக்கின்றன.  கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நிகழ்ச்சியாய் இருந்தது. பாலாஜி அருணாச்சலம் அவர்கள் சொன்னது போல அடுத்த வருடம் எல்லாம் மூன்று மணி நேரம், நான்குமணி நேரம் என நீடிக்கவேண்டும் என தன் விருப்பத்தை தெரிவித்தார்.

 


யோகா செய்த குழந்தைகள் எல்லாம் இருப்பதிலேயே சிரமமான ஆசனங்களை எல்லாம் மிக எளிதாய் செய்தார்கள்.   ஆச்சர்யமாக இருந்தது.  யோகா என்பது எல்லா வயதினருக்குமானது.  ஆயிரக்கணக்கான ஆசனங்கள் இருக்கின்றன.  ஆனால் பொது நிகழ்வுகளில் சிரமமான ஆசனங்களை செய்து காட்டுவதால், யோகா என்றாலே பெரியவர்களுக்கானது இல்லை என்று பலர் நினைத்துவிடுகிறார்கள். ஆகையால் உடற்பயிற்சியிலேயே எளிமையானது யோகா தான். அதிக பலன்கள் தருவதும் யோகா தான்.

 

கைலாசமூர்த்தி அவர்கள் மண்ணை நேசித்து அவர்கள் வாசித்தார். முத்து அவர்கள் ஜி.எஸ்.டி படுத்தும் பாடுகளை கவிதையாய் வாசித்த பொழுது, கோவையில் இருந்து கலந்துகொண்ட மூத்த வரி ஆலோசகர் நஜூமுதீன் அய்யா அவர்கள் ஜி.எஸ்.டி குறித்து சொன்ன வரிகள் தான் நினைவுக்கு வந்தன

 


சந்திரசேகர் அவர்கள் தன் பிள்ளைகள் விளையாட்டில் சாதிக்கவேண்டும் என்பதற்காகவே தான் வரி ஆலோசகராக மாறினேன் என சொன்ன பொழுது, அவருடைய அக்கறை புரிந்தது.  தன் பெண்ணை ஒரு பிரபல கல்லூரியில் சேர்க்கும் பொழுது, பெரிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதங்கள் பயன்படவில்லை.  விளையாட்டு தான் பெரிய உதவி செய்தது என்றார். அதே போல விளையாட்டு, பிள்ளைகளிடம் ஒரு ஒழுங்கை கொண்டு வந்துவிடுகிறது. ஆகையால், விளையாட்டில் ஈடுபட்டால், படிப்பில் டல்லாகிவிடுவார்கள் என்பது கிடையாது. அது சமூகத்தில் நிலவும் ஒரு கற்பிதம் (Myth) என்றார்.

 

ஒரு மாணவரின் குறும்படம் அருமை. அதன் கருவிலும், வடிவத்திலும் செய்நேர்த்தியுடன் இருந்தது.  அவர் இயல்பில் அதிகம் பேசாதவர் என்றார்கள். ஆனால், அவருடைய படைப்பு அவரைப் பற்றி பேச வைத்திருக்கிறது.  குழந்தைகளை புரிந்துகொண்டு, அனுசரணையாக கையாளுங்கள் என்பது தான் சாரமாக இருந்தது.  காலம் மாறுகிறது. பெற்றோர்கள் தங்கள் விரும்பும்படி தங்கள் பிள்ளைகளிடம் மாற்றம் கொண்டுவரவேண்டுமென்றால் கூட தங்களுடைய பழைய அணுகுமுறையை மாற்றியே ஆகவேண்டும்.

 

ஒவ்வொரு குழந்தையையும் அறிமுகப்படுத்தி, சிறப்புகளைப் பாராட்டி, இறுதிவரை நிகழ்ச்சியை தொய்வில்லாமல் கொண்டு சென்றார் பொருளாளர் செல்வராஜ்.

 

இரண்டு மணி நேர நிகழ்ச்சி என்றாலும் இந்த நிகழ்ச்சிக்காக காணொளிகளை வாங்கி, அதன் தொழில்நுட்ப சிக்கல்களை களைந்து, அதை வரிசைப்படுத்தி, தில்லியில் குடியரசு தின விழா நடத்துவதற்கு முன்பு ஒரு சோதனை ஓட்டம் பார்ப்பார்கள். அது போல இரண்டு நாட்கள் நடத்தி சரிப்பார்த்தது என நிர்வாகிகள் இதற்காக நிறைய நிறைய உழைத்திருக்கிறார்கள்.

 

கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி.

 

-     -   GSTPS

 

 தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety/

 

 

 

1 comment:

  1. நிகழ்ச்சிகள் அனைத்தும் அருமை. நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்த "GST Professional Group" ற்கு நன்றி.

    ReplyDelete