Sunday, October 29, 2023

GSTPS : "GSTR9 & GSTR9C Filing Practical Demo With Q/A Session" - S. Balaji & Balaji Arunachalam


வணக்கம்.  GSTPS சார்பாக உறுப்பினர்களுக்காக நடத்தப்பட்டும்  நேரடிக் கூட்டம் கடந்த சனிக்கிழமையன்று 28/10/2023 அன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு அரங்கில், நிறைந்த உறுப்பினர்களுடன் தமிழ்த்தாய்க்கு வணக்கம் தெரிவித்து கூட்டம் துவங்கியது.

 


நமது பொருளாளர் செல்வராஜ் அவர்கள் வந்திருந்த அனைத்து உறுப்பினர்களையும்  வரவேற்று, வருமான வரித்தாக்கல் செய்யும் இறுதி நாட்களில் கூட இத்தனை பேர் கலந்துகொண்டது மகிழ்ச்சி என தெரிவித்துக்கொண்டார்.

 


GSTR9 – ஆண்டு ரிட்டன்

 

செயலர் பாலாஜி அவர்கள் GSTR 9 ஆண்டு ரிட்டன் குறித்து  விளக்குவதற்கு முன்பு, ரிட்டனில் ஒவ்வொரு அட்டவணை குறித்தும் என்ன வரும்? எப்படி பூர்த்தி செய்யவேண்டும் என விளக்கமாக ஒரு கையேடு போல தயாரித்து, பிரதி எடுத்து அனைத்து உறுப்பினர்களுக்கும் சொசைட்டி சார்பில் விநியோகித்தார்.

 


அட்டவணையில் ஒவ்வொரு வரிக்கு வரியாக  விளக்கி செல்லாமல்,   கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக ஜி.எஸ்.டி தணிக்கையை அவர் எதிர்கொள்வதால், அதன் அனுபவத்தில் இருந்து. கடந்த காலத்தில் என்ன செய்தோம், அது எப்படிப்பட்ட சிரமங்களை தந்தது.  இனி அப்படிப்பட்ட தவறுகளை செய்யாமல் பூர்த்தி செய்வது எப்படி என விளக்கியது உண்மையிலேயெ நல்ல புரிதலை தந்தது.

 


இடையிடையே உறுப்பினர்களிடம் கேள்வி கேட்டு, கேட்க அனுமதித்து, அதற்கும் உடனடியாக பதில் தெரிவித்தார்.  உறுப்பினர்களுடைய அனுபவத்தையும் அவ்வப்பொழுது கேட்டுக்கொண்டார்.

 


இடையிடையே கேள்வி கேட்பது, பதிலளிப்பது என்பது கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டாலும், அது பலருக்கும் நல்ல தெளிவைத் தருகிறது.  இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இந்த உரை நீண்டு சென்றது. கலந்துகொண்ட அனைவருக்கும் நல்ல புரிதலை தந்தது என உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டனர்.

 

GST9C-ஆண்டு ரிட்டன்

 

இந்தத் தலைப்பில் பேசுவதற்கு நமது துணைத்தலைவர் பாலாஜி அருணாச்சலம் அவர்கள் பொறுப்பேற்றிருந்தார். அவருக்கு உடல்நிலை சரியில்லாததால், அவரால் கலந்துகொள்ள முடியவில்லை. 

 


இருப்பினும் நிலைமையை சமாளிக்க,  இணைச்செயலர்   செண்பகம் அவர்கள்  விளக்க முன்வந்தார்.  முதல் தலைப்பே  திட்டமிட்ட நேரத்தை விட கூடுதலான நேரம் எடுத்துக்கொண்டதால்,  இந்த தலைப்பை வரும் வாரத்தில் ஜூம் வழியாக எடுப்பது என என உறுப்பினர்களோடு கலந்து பேசி முடிவு செய்யப்பட்டது.

 

காபி, பலகாரம்

 


சொன்ன நேரத்தை விட கொஞ்சம் நேரம் கடந்து வந்தாலும், வடை, பஜ்ஜி, காபி எல்லாம் சுவையாக இருந்தது.  இதற்கான செலவை திரு. வில்லியப்பன் ஏற்றுக்கொண்டதாய் நிர்வாகிகள் தெரிவித்தார்கள்.  சமீபத்தில் வில்லியப்பன் அவர்களுடைய இளைய மகள் திருமணம் நடைபெற்றது. அந்த மகிழ்ச்சியை உறுப்பினர்களுடன் இப்படி பகிர்ந்துகொண்டார். இப்படி செய்வது உண்மையிலேயே அருமையானது.  இப்படி பகிர்ந்துகொள்வது நமது சொசைட்டியில் இயல்பாகவே நடக்கிறது என்பது ஆரோக்கியமானது.

 

புதிய தலைப்புகள். புதிய ஆசிரியர்கள்

 


பொதுவாக நமது கூட்டங்களில் பேசுவதற்கு வெளியில் இருந்து  பேச்சாளர்களை அழைப்பதை விட, நமது உறுப்பினர்களே ஆசிரியர்களாக மாறி வகுப்பு எடுப்பது தான் சரியானது. ஆரோக்கியமானது.  ஒரு உரையை ஒருவர் தயாரித்து பேசுவது மூலம் அவர் அந்த தலைப்பில் நல்ல தெளிவைப் பெற்றுவிடமுடியும். துவக்க காலத்தில் பேசுவதற்கு நாம் தயாராய் இருந்தால் கூட  மேடை கிடைப்பது என்பது அபூர்வமாக இருக்கும்.  இப்பொழுது நமக்கான மேடை இங்கு தயாராய் இருக்கிறது. அதை பயன்படுத்துவது தான் வளர்ச்சிக்குரியதாக இருக்கும். சமீபமாக உங்களில் புதியவர்கள் முன்வந்து பேசினீர்கள். நன்றாகவும் பேசினீர்கள்.  நல்ல முன்னேற்றம் தான். இன்னும் புதிய தலைப்புகளில் பேச புதிய ஆசிரியர்கள் முன்வாருங்கள்.  அது அவரவர் தொழில் வாழ்க்கைக்கு ஆரோக்கியமானது என உற்சாகப்படுத்தி பேசினார்.

 

வரும் மாதத்திற்கான திட்ட,ம்

 


வரும் மாதத்தில் என்னென்ன தலைப்புகளில் விவாதிக்கவேண்டும் என உறுப்பினர்களிடம் தலைவர் ஆலோசனை கேட்டார். திரு. வில்லியப்பன் நாம் ஜி.எஸ்.டி வரி ஆலோசகர்களாக இருக்கிறோம்  ஆகையால், செக்சன்களை தலைப்பு வாரியாக எடுத்தால் நல்லது என முன்வைத்தார். மற்ற உறுப்பினர்களும் அது குறித்து ஆலோசனைகளைப் பகிர்ந்துகொண்டார்கள். அதற்கு ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.

 


காலண்டர், டைரி

 

இந்த ஆண்டு நிறைவு பெறும் இறுதி மாதங்களில் இருக்கிறோம்.  சொசைட்டி சார்பாக நாம் ஆண்டு தோறும்  மாதக்காலண்டரும், பெரிய டைரியும் உறுப்பினர்களுக்கு தருகிறோம். இந்த ஆண்டு மாதக் காலண்டரில் ஏதும் மாற்றம் இல்லை.  ஆனால் டைரியின் அளவு மிகப்பெரிதாக இருப்பதால், தயாரிப்பு செலவு, அதைப் பயன்படுத்துவது, அனுப்புவதற்கான செலவு - என்பதை பரிசீலித்ததில், கொஞ்சம் அளவை குறைக்கலாம் என யோசித்துள்ளோம். மாற்று ஏற்பாடாக டைரி போல மாதம், தேதி என போடாமல் டைரி வடிவத்தில் கொடுத்தால்அதை ஆண்டு முடிந்ததும், ஆயுள் முடியாமல், தொடர்ந்து பயன்படுத்தலாம்.

 


ஒவ்வொரு ஆண்டும், இப்படி, டைரியில் நமது வாடிக்கையாளர்களிடமிருந்து விளம்பரங்கள் பெற்றுத்தான் செலவில் பாதியை குறைக்கிறோம். தொடர்ந்து அதே வாடிக்கையாளர்களிடம் வாங்குவது என்பது சரியாக இருக்காது. ஆகையால், உறுப்பினர்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் விளம்பரம் பெற்றுத்தாருங்கள் என கேட்டுக்கொள்கிறோம்.

 


கூட்ட ஏற்பாடுகளை திட்டமிட்டு சரியாக செயவதற்கு, கூட்டத்தில் கலந்துகொள்வது குறித்து வாக்கெடுப்பு நடத்தும் பொழுது, உறுப்பினர்கள் அவசியம் வாக்களித்து தெரிவிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார். உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டனர்.

 


ஒவ்வொரு கூட்டமும் பல்வேறு முன் தயாரிப்பு வேலைகள் செய்து தான் நடத்தப்படுகிறது. இன்றைய கூட்டம் முடிந்துவிட்டது என நாம் நினைக்கும் பொழுது, இன்று இரவில் இருந்து தலைவர் அடுத்தக் கூட்டத்தை யோசிக்க ஆரம்பித்துவிடுவார். அடுத்த மூன்று நாட்கள் தலைப்பை கலந்து பேசி, யாரை பேச வைக்கலாம் என விவாதித்து, புதன், வியாழனில் உறுதிப்படுத்தி நமக்கு பேனர் மூலம் அறிவிக்கிறார்கள். பேச ஏற்றுக்கொண்ட பேச்சாளர் தங்கள் அலுவல்,  குடும்ப வேலைகளை எல்லாம் தள்ளி வைத்து, அந்த தலைப்பை ஒட்டி படிக்க ஆரம்பித்து, ஆலோசித்து, பிபிடி தயாரிக்க ஆரம்பித்து. பேசி முடிக்கும் வரை மனதில் சின்ன பதட்டத்தை சுமந்துகொண்டே இருக்கவேண்டியிருக்கும். இத்தனை மெனக்கெடல்களுடன் தான் ஒவ்வொரு கூட்டமும் நடக்கிறது.  அப்படி இருக்கும் பொழுது, கூட்டத்திற்கு வருவேன், வரமாட்டேன் என சொல்வதில் நாம் கவனமில்லாமல் இருப்பதை என்னவென்பது? அது நமது கடமை என அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் .

 


வந்து கலந்துகொண்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் தலைவர் நன்றி சொல்லகூட்டம் இனிதே நிறைவுற்றது.


GSTPS


தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/groups/792542932366102

No comments:

Post a Comment