Wednesday, August 27, 2025

GSTPS : பட்டிமன்றம் - ஜி.எஸ்.டி. சட்டம் 8 ஆண்டுகள் நிறைவு - சாதனையா? சோதனையா? - சிறப்பாக நிறைவேறியது!

வணக்கம்.  வெள்ளிக்கிழமையன்று சென்னையில் வெளுத்த வெயில் நேற்று நமது நேரடிக் கூட்டம் என்பதால், நன்றாக தணிந்திருந்தது.

 

உள்ளே நுழையும் பொழுதே, நிறைய பேர் அரங்கில் குழுமியிருந்தார்கள்.  இனிய தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் துவங்கியது.

 

தலைவரும் பட்டிமன்ற நடுவருமான திரு. செந்தமிழ்ச்செல்வன் நடுவில் அமர்ந்திருக்க, சாதனை அணியில் இருந்து நால்வரும், சோதனை அணியில் இருந்து நால்வரும் வரிசையாக அமர்ந்திருந்தனர்.

 


கடந்த ஆறாம் ஆண்டு நிறைவு விழா Blue Bay பயணத்தின் பொழுது, உள்ளீட்டு வரி வரவு (Input Tax Credit) குறித்து ஒரு பட்டிமன்றம் நடத்திய பொழுது, நமது உறுப்பினர்களான இரண்டு தரப்பு பேச்சாளர்களும் ஆர்வத்துடன் பேசினார்கள். பார்வையாளர்களும் உற்சாகத்துடன் கேட்டனர்.  இந்த வடிவம் பலரையும் ஈர்த்ததால், இப்பொழுது இரண்டாவது முறை முயற்சி செய்கிறோம் என துவங்கி வைத்தார்.

 

ஜி.எஸ்.டி சட்டம் எப்படி உருவானது? அதன் வரலாறு, எத்தனை நாடுகளில் அமுலாகியிருக்கிறது> இந்தியாவில் அமுல்படுத்த துவங்கி, எட்டு ஆண்டுகளை கடந்துவிட்டோம். அதைப் பற்றிய ஒரு புரிதலை உருவாக்குவதின் வழியே உறுப்பினர்களுக்கு பயிற்றுவிக்கலாம் என இந்த தலைப்பை தீர்மானத்தோம் என துவங்கி வைத்தார்.

 


ஒவ்வொரு பேச்சாளருக்கும் பேசுவதற்கு நான்கு நிமிடங்கள். எல்லோரும் இரண்டு சுற்று பேசி முடித்தார்கள்.  இரண்டு தரப்பிலும் தங்கள் அணிக்கு வலு சேர்த்தார்கள். இறுதியில் அணித்தலைவருக்கு தொகுத்து பேசுவதற்கு ஒரு வாய்ப்பு தரப்பட்டது.  தலைவர் தனது தீர்ப்புரையை நிதானமாக, சாதனைகளும், சோதனைகளும் இரண்டும் கொண்டது தான் ஜி.எஸ்.டி சட்டம் என தொகுத்து சொன்னார். (வாழ்க்கைன்னா சந்தோசம் மட்டுமல்ல! துக்கமும் சேர்ந்ததும் தான் என நினைவுக்கு வந்தது)

 

இரண்டு அணிகளின் வாதங்களையும் கவனித்து கேட்டதில், சோதனை அணியின் வாதம் கொஞ்சம் வலுவாக இருந்ததாக எனக்கு பட்டது.  வசூலில் சாதனை செய்தோம். முந்தாநாள் பீகாரில் கங்கை நதிக்கு மேலே திறக்கப்பட்ட 2000 கோடி பாலம் இதன் வெற்றியில் தான் கட்டினோம் என பெரிய பட்டியலிடுவார்கள் என எதிர்ப்பார்த்தேன். பெரிதாக எதுவும் சொல்லவில்லை. (அவர்களும் வரி ஆலோசகர்கள் தானே! எப்படி பிழிந்து வணிகர்களிடம் வசூல் செய்தோம் என அவர்களுக்கும் தெரியுமல்லவா!)

 

தணிக்கையாளர் சந்திரமெளலி அவர்கள் ஒரு வாட்சப் குழுவில் தன் அணியினரை இணைத்து என்ன பேசப்போகிறோம் என அவர் ஒரு பட்டியலை பகிர்ந்தார். மற்றவர்களும் பகிர்ந்தார்கள். தலைவரோடு பேசினார்கள். 2.30க்கு அரங்கிற்கு வந்து சேர்ந்து, கொஞ்சம் பேசுவதை பரிமாறிக்கொண்டார்கள். இப்படி ஒரு ஒருங்கிணைப்பு சாதனை அணி செய்ததா என தெரியவில்லை. வருங்காலத்தில் பட்டிமன்றம் திட்டமிடுகிற பொழுது, இப்படி ஒரு குழுவாக இணைத்து விவாதித்தால் நலம் என இந்த அனுபவத்தில் தோன்றியது.

 

என்ன பேசினார்கள் என்பதை எழுதினால், நீண்டு விடும். நேற்று ஒரு நல்ல செய்தி.  நிகழ்வை காணொளியாகவும், புகைப்படங்களாகவும் தொழில்முறை கலைஞர்களை வைத்து பதிவு செய்தோம்.  ஐம்பதுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள். நமது உறுப்பினர்கள் அல்லாதவர்களும் ஆர்வத்தில், வெளியூரில் இருந்தும் சென்னையில் இருந்தும் 15 பேர் கலந்துகொண்டார்கள். 

 

மற்றபடி, இடைவேளையின் பொழுது, தலைவருடைய ”ஜி.எஸ்.டி பற்றி அதிகம் அறிந்து கொள்ளுங்கள்” மேம்படுத்தப்பட்ட பதிப்பாகவும், இரண்டாவது பதிப்பாகவும் வெளிவந்ததை ஒட்டி, வெளியிடப்பட்டது. நமது உறுப்பினர் வழக்கறிஞர் சங்கர் கணேஷ் வெளியிட, உறுப்பினர் வழக்கறிஞர் நீலகண்டன் பெற்றுக்கொண்டார்.  முதல் பதிப்பு 1000 புத்தகங்களும் விற்றதற்கு உதவிய அனைவருக்கும் தலைவர் நன்றி தெரிவித்தார்.  அவருடைய சார்பில், விளம்பரத்திற்கும், விற்பனைக்கும் துணையாக நின்ற உறுப்பினர் இரா. முனியசாமி அவர்களுக்கு சால்வையை தலைவர் அணிவித்தார்.

 

நமது உறுப்பினர் திரு.நீலகண்டன் அவர்கள் சமீபத்தில் வழக்கறிஞராக உயர்வு பெற்றார். (அடுத்து தணிக்கையாளராவதற்கான இறுதி தேர்விலும் வெற்றி பெற வாழ்த்தி) அதற்காக சொசைட்டி சார்பில் தலைவர் சால்வை அணிவித்தார்.

 

பாண்டிச்சேரியில் இருந்து வந்து கலந்துகொண்டு, நமது சொசைட்டியின் செயல்பாடுகளை வாழ்த்தி பேசினார் வழக்கறிஞர் இளஞ்செழியன். அவருக்கும் மரியாதை செய்வதற்காக சால்வை அணிவிக்கப்பட்டது.

 

தலைவரின் நண்பரும், ஆலயப்பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவரான திரு. கணேசன் இரண்டாவது பதிப்பை வெளியிடுவதை அறிந்து, மகிழ்ந்து கலந்துகொண்டார். அவருக்கு சால்வை அணிவிக்கப்பட்டது.

 

இரண்டாவது பதிப்பு புத்தகங்கள் அரங்கில் இருந்தன. சில உறுப்பினர்கள் புத்தகத்தில் தலைவருடைய கையெழுத்து கேட்டு வாங்கிப் பெற்றுக்கொண்டார்கள்.

 

இந்தப் பட்டிமன்றம் ஒரு சுழன்று செல்லும் மாடிப்படிகள் உயர்ந்து செல்வது போல, கடந்த பட்டிமன்றத்தின் அடுத்தக் கட்டமாக இருந்தது.  வளர்ச்சி என்பது அப்படித்தான். ஆகையால், அடுத்தடுத்த பட்டிமன்றங்கள் நடத்தப்படவேண்டும் என உறுப்பினர்கள் சார்பாக நான் கேட்டுக்கொள்கிறோம். இதில் சுழற்சி முறையில் ஆர்வமுள்ள உறுப்பினர்கள் கலந்துகொள்ள முன்வரவேண்டும் என நமது உறுப்பினர்களை கேட்டுக்கொள்கிறோம்.

 

நன்றி.


- GSTPS


தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety

No comments:

Post a Comment