வருங்கால
வைப்பு நிதி திட்டம்: நிறுவனமும் தொழிலாளர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் -
அத்தியாயம் 6
“UAN
என்ற அடையாள எண் ஒவ்வொரு தொழிலாளிக்கு கொடுத்த பிறகும், இன்னும் பழைய முறையான உரிய
விண்ணப்பத்தை பி.எப் தளத்தில் கொடுத்து பழைய கணக்குகளை புதிய/கடைசி கணக்கிற்கு மாற்றிக்கொள்ளவேண்டும்
(Transfer) என்கிற நடைமுறை தொடர்கிறது. விரைவில் பி.எப். இந்த முறையை மாற்றி எளிமைப்படுத்தும்
என நம்புவோம்.”
என கடந்த மாதம், ஐந்தாவது அத்தியாயம் முடிவுரையோடு,
ஏப்ரல் இதழில் 1ந் தேதி நமது கட்டுரை வெளியானது.
நாம் கட்டுரையில் இறுதியில் தெரிவித்திருந்தபடி பி.எப். கணக்குகளை மாற்றும்
முறையை எளிமைப்படுத்தி அமுல்படுத்துகிற செய்தி ஏப்ரல் 3ந் தேதி பத்திரிக்கைகளில் செய்தி வெளியானது. பி.எப். சந்தாதாரர்களின் குரலை நாம் பிரதிபலிக்கிறோம்
என்பது மகிழ்ச்சி.
பொது
வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund) என்றால் என்ன?
எவ்வளவு சேமிக்கமுடியும்?
இந்த திட்டத்தில் ஆண்டுக்கு குறைந்தப்பட்சமாக ரூ. 500யும், அதிகப்பட்சமாக ஒன்றரை லட்சம் வரை செலுத்தமுடியும். இதற்கு இடைப்பட்ட தொகை எவ்வளவு வேண்டுமென்றாலும் நம்மால் செலுத்த முடியும். இந்த கணக்கு என்பது மிகவும் நெகிழ்வானது (Flexible). முன்பு மாதம் ஒருமுறை தான் இந்த கணக்கில் செலுத்தமுடியும் என்ற விதி இருந்தது. இப்பொழுது அந்த விதியை மாற்றிவிட்டார்கள். ஆகையால், மாதம் மாதம் இவ்வளவு தான், இத்தனை முறை தான் செலுத்தவேண்டும் என்ற கட்டாயமில்லை. நம்மால் எவ்வளவு செலுத்தமுடியுமோ, எப்பொழுது நம்மால் முடிகிறதோ அதை செலுத்தலாம்.
ஒரு
வருடத்தில் குறைந்தப்பட்சம் ரூ. 500 செலுத்துவது அவசியமானது. அப்பொழுது தான் அந்த கணக்கை உயிர்ப்புடன்
வைத்துக்கொள்ள முடியும். இல்லையெனில் நமது கணக்கு செயலிழந்து போகும். மீண்டும் கணக்கை உயிர்ப்பிக்க, விடுபட்ட
ஒவ்வொரு ஆண்டுக்கும் குறைந்தப்பட்ச தொகையான ரூ. 500 செலுத்தி, கூடுதலாக ஆண்டுக்கு
ரூ. 50யும் அபராதமாக செலுத்தினால் போதுமானது.
கணக்கு எப்பொழுதும் போல இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.
கணக்கைத்
துவங்குவது எப்படி?
இந்த திட்டத்தை ”தேசிய சிறு சேமிப்பு நிதி” (NSSF) என்ற திட்டத்தின் கீழ் தான் அமுல்படுத்தி வருகிறது. இந்தக் கணக்கை அஞ்சலகங்களிலும், வங்கிகளிலும் எளிதாக துவங்க முடியும். நமது அடிப்படை ஆவணங்களான புகைப்படம், ஆதார் எண், பான் எண், மொபைல் எண், வாரிசுதாரர் விவரங்களை கொடுத்து கணக்கை துவங்கிவிடமுடியும். குறிப்பாக ஒருவருவருக்கு ஒரு கணக்கைத் தான் துவங்கி சேமிக்க முடியும். பதினெட்டு வயதுக்கு கீழே குழந்தைகள் இருந்தால், அவர்கள் பெயரில் துவங்கி, பெற்றோர்கள் அதன் பாதுகாவலராக (Guardian) போட்டு கணக்கைத் துவங்க முடியும். உதாரணமாக, குடும்ப தலைவர் தன் பெயரில் ஒரு கணக்கும், இரு குழந்தைகள் இருந்தால் அவர்கள் பெயரிலும் தனிக் கணக்காக துவங்கமுடியும். மூவர் கணக்கிலும் அதிகப்பட்சம் 1.5 லட்சம் தான் சேமிக்கமுடியும் என்பது ஒரு விதியாக இருக்கிறது.
இந்தக்
கணக்கை துவங்க இந்திய குடிமகனாக இருக்கவேண்டும்
என்பது அவசியமானது. ஒருவேளை இந்திய குடிமகனாக இருந்து, இந்த திட்டத்தில் இணைந்த
பிறகு, வெளிநாட்டு வாழ் இந்தியராக மாறினால், திட்டம் முடியும்வரை நீடிக்கலாம்.
தனிநபருக்கு தான் இந்த திட்டம் என்பதால், இந்து கூட்டுக் குடும்பம் (HUF)யும் இந்த
திட்டத்தில் இணையமுடியாது.
இந்தக் கணக்கில் சேமிப்பதன் மூலம் வருமான வரித் தாக்கல் செய்யும் பொழுது, பிரிவு 80 சி கீழ் 1.5 லட்சம் வரை வரி விலக்கு உண்டு. இந்தத் திட்டத்தின் கீழ் கிடைக்கும் வட்டிக்கும் வரிவிலக்கு உண்டு. (பழைய வருமான வரித் திட்டத்தை (Old Regime) தேர்ந்தெடுக்கும் பொழுது தான் இந்த சலுகை உண்டு. புதிய வருமான வரித் திட்டத்தில் (New Regime) இந்த வரி விலக்கு பொருந்தாது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.) இந்தத் திட்டத்தின் கீழ் இறுதியாக பெறும் பொழுதும் இதற்கு வரிவிலக்கு உண்டு. ஆகையால் வரிச்சுமையில் இருந்து நம்மை பாதுகாக்கும். இந்தத் திட்டம் என்பது 15 ஆண்டுகளுக்கானது. கூடுதலாக ஐந்து ஆண்டுகள், ஐந்து ஆண்டுகள் என நம் தேவைக்கேற்ப நீட்டித்துக்கொள்ள முடியும்.
வட்டி விகிதம் என்ன?
இந்தத்
திட்டத்திற்கான வட்டி என்பது நிலையானது இல்லை.
ஒவ்வொரு காலாண்டிற்கும்
ஒருமுறை மத்திய அரசு
தீர்மானிக்கிறது. இந்த ஆண்டில் ஏப்ரல் –
ஜூன் 2024 நடப்பு காலாண்டிற்கான வட்டி விகிதம் 7.1% என அறிவிக்கப்பட்டுள்ளது..
ஒவ்வொரு மாதமும் நம்முடைய சேமிப்பிற்கான
பணத்திற்கு வட்டி கணக்கிடப்பட்டு, ஆண்டின் இறுதியில் வட்டியை நம்முடைய கணக்கில்
வரவு வைப்பார்கள்.
வட்டி எவ்வாறு கணக்கிடுகிறார்கள்?
15 ஆண்டுகளுக்கு பிறகு
முன்பே
சொன்னது போல இந்தக் கணக்கில் 15 ஆண்டுகளுக்கு பணம் செலுத்தலாம். கணக்கை
முடித்துக்கொண்டு முதிர்வு தொகையை பெற்றுக்கொள்ளலாம். நீட்டிக்க விரும்பினால்
அதற்கு பிறகு ஐந்து ஆண்டுகள், ஐந்து ஆண்டுகள் என நீட்டித்து, தொடர்ந்து
செலுத்தவும் செய்யலாம். பதினைந்து
ஆண்டுகளுக்கு பிறகு பணம் கட்ட வேண்டாம்.
அப்படியே இருக்கட்டும் என நாம் அனுமதிக்கவும் செய்யலாம். எத்தனை ஆண்டுகளுக்கு அப்படி நாம் விட்டு
வைக்கிறோமோ அத்தனை ஆண்டுகளுக்கும் அவர்கள் இந்தத் திட்டத்திற்கு தீர்மானிக்கிற வட்டியும்
கிடைக்கும்.
பகுதியளவு பெறுதல் (Partial Withdrawal)
15 ஆண்டுகள் வரை கணக்கை நாம் பராமரிக்கவேண்டும் என ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். நமது கணக்கில் இருந்து நமக்கு ஒரு நெருக்கடி என்றால், பகுதியளவு பெறமுடியுமா? என்றால் பெற முடியும். நாம் செலுத்திய பணத்தில் 50% பெறமுடியும். ஆனால், ஆறு வருடங்கள் கழித்து தான் பெறமுடியும். இப்படி ஒரு விதி எதற்காக இருக்கிறது என்றால், நமது வருமான வரியில் இருந்து இப்படி சேமிக்கப்படும் தொகைக்கு வரி விலக்கு தருகிறார்கள் அல்லவா! அதற்காக தான்.
பாதியிலேயே திட்டத்தில் இருந்து வெளியேறுதல் சாத்தியமா? (Premature closure)
நெருக்கடியான
சமயங்களில் இந்த திட்டத்தில் இருந்து வெளியேறி, கட்டிய பணத்தை பெறமுடியுமா?
என்றால் பெறமுடியும் ஆனால் அந்த நெருக்கடிக்கான ஆதாரத்தை, உதாரணமாக
மருத்துவ செலவு, குழந்தைகளுக்கு கல்வி
கட்டணம் என்பதற்கான உரிய ஆவணங்களுடன்
விண்ணப்பிக்கவேண்டும். அதற்கும் கணக்கு
துவங்கிய ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தான் விண்ணப்பிக்கமுடியும்.
கடன் பெறுவது சாத்தியமா? (Loan)
முடியும். நாம் கணக்கைத் துவங்கி மூன்று வருட முடிவில் இருந்து ஆறு வருடங்கள் வரைக்குமான காலத்திற்குள் நாம் கடன் பெறமுடியும். அதுவும், நாம் செலுத்திய பணத்தில் இருந்து 25% பெறமுடியும். அதற்கான வட்டி விகிதம் என்பது 12%ஆக இருக்கும். இப்படி பெறப்பட்ட கடனையும் 36 மாதங்களுக்குள் முழுமையாக அடைத்துவிடவேண்டும். அடைக்கவில்லை என்றால், அதற்கு பிறகான வட்டி விகிதம் இன்னும் கூடுதலாக 6% செலுத்தவேண்டியிருக்கும். இதே போல இரண்டாவதாக கடன் பெற முடியுமா? என்றால் முடியும். ஆனால், முதலில் பெற்ற கடனை முழுமையாக செலுத்தியிருக்கும் பட்சத்தில் இரண்டாவது கடனை பெறமுடியும்.
பணவீக்கமும், வட்டி விகிதமும்
பணவீக்கம் என்பது பணத்தின் மதிப்பு சரிவது என்பதாக பொருள் கொள்ளலாம். இந்த ஆண்டு நீங்கள் ஒரு பொருளை ரூ.100க்கு வாங்கினால், அடுத்த ஆண்டு விலைவாசி உயர்வால், அதே பொருளை ரூ. 105க்கு வாங்க நேர்ந்தால், பணத்தின் மதிப்பு 5% என சரிந்ததாக புரிந்துகொள்ளலாம். இதைத்தான் பொருளாதாரத்தில் பணவீக்கம் என்கிறார்கள்.
ஒவ்வொரு
ஆண்டும் இந்தியாவில் விலைவாசி உயர்வால் பணத்தின் மதிப்பு சரிந்துகொண்டே இருக்கிறது. 2024ல் பணவீக்கத்தின் மதிப்பை கடந்த
பிப்ரவரியில் 5.09% என கணித்திருக்கிறார்கள்.
ஆக நம்முடைய சேமிப்புக்கு கிடைக்கும் வட்டி என்பது 5.09%க்கு மேல்
இருந்தால் தான் பாதிப்பு இல்லை என புரிந்துகொள்ளலாம். ஏப்ரல் 24 நிலவரப்படி
வங்கிகளில் நம்முடைய சேமிப்பான நிலையான வைப்புக்கே (Fixed Deposit)க்கு
7.5% வரைக்கும் வட்டி தருகிறார்கள்.
இந்த ”பொதுவருங்கால வைப்புநிதி திட்டம்” என்பது சேமிப்பதற்கு எளிமையானது. மற்ற முதலீடு திட்டங்கள் கூடுதல் சதவிகித லாபம் தந்தாலும், அதில் அபாயங்களும் இருக்கத்தான் செய்கின்றன. இந்தத் திட்டத்தை மத்திய அரசு கையாள்வதால், பாதுகாப்பானது. இந்தத் திட்டத்தைப் போலவே மத்திய அரசு அமுல்படுத்துகிற திட்டங்களும் உண்டு. அதையும் தெரிந்துகொண்டு இந்த திட்டத்தில் உள்ள மேற்கண்ட அம்சங்களை புரிந்துகொண்டு, எது உங்களுக்கு வசதியாக இருக்கிறதோ, அந்த வழிகளில் சேமிக்கத் துவங்குங்கள்.
ஓய்வும், சேமிப்பின் அவசிய தேவையும்
சமகாலத்தில் பெரும்பாலோர் வருவாயை விட, செலவுகளை அதிகமாக எதிர்கொள்கிறோம். ஒருபக்கம் அடிப்படையான செலவுகளே விலை அதிகரித்துகொண்டே செல்வதால், பற்றாக்குறையுடனே வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். இன்னொரு பக்கம் சிலர் ஆடம்பரமாகவும், வீண் செலவுகளிலும் ஈடுபடுகிறார்கள். ஆரோக்கியமாக வேலை செய்து கொண்டு இருக்கும் பொழுதே சேமிப்பது என்பது அவசியமானது. முன்பெல்லாம் சமூகத்தில் ஒரு பகுதி மக்களையாவது ஓய்வூதியம் என்ற திட்டம் காப்பாற்றிக்கொண்டு இருந்தது. இப்பொழுது பெரும்பாலோருக்கு ஓய்வூதியம் திட்டம் இல்லாமல் ஒருவித பாதுகாப்பின்மை (Insecurity) உணர்வுடன் வாழ்ந்து வருகிறார்கள். பணி ஓய்வு பெறும் பொழுது, எல்லாவற்றிக்கும் பிறர் கையை எதிர்பார்த்து நிற்பது என்பது பெரிய துயரமாகிவிடும். ஆகையால் இதுவரை சேமிக்காவிட்டாலும் பரவாயில்லை. இனி சேமிக்கப் பழகுங்கள். அது நம்முடைய எதிர்காலத்திற்கு, நம் குடும்ப நலனுக்கு, நம் நாட்டிற்கு எல்லாருக்குமே நல்லது.
இன்னும் வளரும்.
இரா. முனியசாமி,
பி.எப்., இ.எஸ்.ஐ, ஜி.எஸ்.டி ஆலோசகர்.
GSTPS உறுப்பினர்
9551291721
குறிப்பு : இந்தக் கட்டுரை “தொழில் உலகம்” வணிகப் பத்திரிக்கையில் மே மாத 2024 இதழில் வெளியானது.
No comments:
Post a Comment