Saturday, September 5, 2026

GSTPS சொசைட்டியின் இணைய வழிக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது

 


நாங்கள் GSTPS  சொசைட்டி மூலம்  வாரந்தோறும் இணையவழியில் கூடி, வரி தொடர்பான தலைப்புகளில் ஒருவர் தயாராகி விளக்கமளிப்பது வழக்கம். ஆனால் பெரும்பாலான உறுப்பினர்கள் பேசத் தயங்குவதுண்டு.

 

கடந்த வாரம், தலைவர் *"இந்த வாரம் யார் பேசத் தயார்?"* எனக் கேட்டதும், ஒரே மணி நேரத்தில் இரண்டு பேர் முன்வந்தார்கள். அவர்களில் ஒருவர் திரு. மகேஷ்குமார்.

 

அவர் அந்த நேரத்தில் வருமான வரித்தாக்கல் இறுதி நாளின் பரபரப்பில் இருந்தார். இத்தனை நெருக்கடியிலும் நேரம் ஒதுக்கி தலைவரிடம் பேசி, தலைப்பை ஒன்றை பெற்றுக்கொண்டார். திங்கட்கிழமைக்குள் விளக்கக்காட்சி (presentation) தயார் செய்து அனுப்ப வேண்டும் என நிபந்தனையும் விதித்தார்.

 

முதல் வரைவை என்னிடம் நேரில் கொண்டு வந்தார்.  நமக்கு தெரிந்த சில ஆலோசனைகள் தந்தேன்ஒரு உரை எப்படி அமையவேண்டும், என்னென்ன இருக்கவேண்டும் என்பது பற்றி. அதை வாங்கிக்கொண்டு, இரவு முழுக்க யோசித்து, மறுநாள் முதல் பிபிடியை விட பல மடங்கு மேம்பட்ட ஒன்றை அனுப்பினார். அதைப் பார்த்ததும் தலைவருக்கு நம்பிக்கை வந்து, கூட்டத்திற்கான அறிவிப்பு பேனரை வெளியிட்டார்.

 

அந்த நாளிலிருந்து இன்றுவரை, பலமுறை திருத்தி, மெருகேற்றி, இறுதியில் இன்று அழகாக விளக்கி முடித்தார். தலைவரும், சீனியர் Dr. வில்லியப்பன், திரு. பாலாஜி, திரு. பாலாஜி அருணாச்சலம் ஆகியோரும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து, சந்தேகங்களுக்கு பதிலளித்து கூட்டத்தை முழுமையாக்கினர். திரு. செல்வராஜ் அவர்களின் நன்றியுரையுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.

 

திரு. மகேஷ்குமார் இன்று முதன்முறையாக கூட்டத்தில் பேசுவதாக தன் வீட்டில் சொல்லியிருந்தார். அவருடைய தாயார், மகன் பேசுவதைக் காண வேண்டும் என பக்கத்து வீட்டு பொறியாளர் ஒருவரிடம் உதவி கேட்டு, இணையக் கூட்டத்தில் நுழைய முயன்றார்கள். ஆனால் தொழில்நுட்பக் குழப்பத்தால் நுழைய முடியவில்லை. மதியம் அவர் வீட்டிற்குச் சென்றதும், தாயார் சோர்வுடன் "இன்றைக்கு நீ பேசலையா தம்பி?" எனக் கேட்டார்கள். நடந்ததை விளக்கிச் சொன்னதும், மகன் பேசியதை அறிந்து மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.

 

நன்றி.

 

  • இரா. முனியசாமி,
  • வரி ஆலோசகர்,
  • GSTPS உறுப்பினர்,
  • 9551291721

No comments:

Post a Comment