Saturday, July 1, 2023

GSTPS : நான்காம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம்



மூன்றாம் ஆண்டு விழாவை  திருபெரும்புதூரில் ஒரு ரிசார்ட்டில் கடந்த ஆண்டு உறுப்பினர்களுடன் கொண்டாடி வீடு திரும்பும்  பொழுது, ஒவ்வொரு ஆண்டும் இப்படி சிறப்பாக கொண்டாடவேண்டும் என நிர்வாகிகளை  உறுப்பினர்கள் உற்சாகமாய் கேட்டுக்கொண்டனர்.

அதனடிப்படையில் சொசைட்டியின் நான்காம் ஆண்டு நிறைவை கொண்டாடுவதற்காக இந்த முறை நிர்வாகிகள் ஒரு மாதத்திற்கு முன்பாக விசாரித்து, மூன்று ரிசார்ட்டுகளுக்கு போய் பார்த்ததில், மாமல்லபுரம் அருகே கடற்கரையை ஒட்டி இருந்த கோரல் ரிசார்ட் (Coral Resort) நன்றாக இருக்கிறது என தேர்வு செய்தோம்.

சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் எல்லா ரிசார்ட்டுகளும் மக்கள் கூட்டம் அலை மோதுவதால், வார நாட்களில் ஒரு நாள் செல்லலாம் என செவ்வாய்கிழமை முடிவு செய்தோம்.

 

திட்டமிட்ட படி,  உறுப்பினர்களை சென்னையில் முக்கிய இரண்டு இடங்களில் வரச் சொல்லி பேருந்தில் கிளம்பினோம். போகும் வழியிலேயே உறுப்பினர்கள் அனைவருக்கும்  தரமான, சுவையான காலை உணவை இணைச் செயலர் செண்பகம் அவர்களின் மூலம் ஏற்பாடு செய்திருந்தோம். அனைவரும் சாப்பிட்டு முடித்தோம்.

 கோரல் ரிசார்ட்டை அடைந்ததும், ரிசார்ட் நிர்வாகத்தினர் நம்மை குட்டி குட்டி சிப்பிகளால் செய்த அழகான மாலை அணிவித்து அனைவரையும் இனிதே வரவேற்றனர்.

ஒரு குளிர்ச்சியான அறையை நமக்கு தந்தார்கள். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் உடனே செய்து முடித்தோம்.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி முறையாக துவங்கியது. உறுப்பினர்கள் அனைவரையும் செயலர் பாலாஜி வரவேற்று பேசினார்.


தலைவர் செந்தமிழ்ச்செல்வன் அவர்கள்பேசும் பொழுது  இந்த சொசைட்டியை  இந்த துறை சார்ந்த பலருக்கும்  ஜி.எஸ்.டி சட்டம் குறித்த அறிவையும், நடைமுறையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு உதவும் விதமாக தான் துவங்கினோம்.  நான்கு ஆண்டுகளில் எங்கள் எண்ணம் நிறைவேறியிருக்கிறது.  ஆனால் இன்னும் பரவலாக பலரிடம் சென்று சேரவேண்டும். பலனடையவேண்டும்.   உறுப்பினர்கள் ஒவ்வொவரும் தங்களது தொழில்முறை நண்பர்களிடம் பேசி, இதில் இணைக்கும் பொழுது தான் இன்னும் விரிவடையும்.  இதில் கவனம் கொள்ளுங்கள்என பேசி முடித்தார்.

 


கடந்த ஓராண்டில் மாதத்திற்கு மூன்று ஜூம் கூட்டங்களையும், நாலாவது வாரம் நேரடிக் கூட்டம் ஒன்றையும் உற்சாகமாக நடத்தியிருந்தோம்.  ஒவ்வொரு கூட்டத்திற்கும் நாம் தயாரித்த பேனர்களை எல்லாம் தேதி வாரியாக தொகுத்து பிபிடியாக நிர்வாகிகள் தயாரித்திருந்தனர்.

 அந்த கூட்டங்களில் யார் பேசினார்கள், கூட்டம் எப்படி நடந்தது என்பதை சுருக்கமாக நிர்வாகிகள் செயலர் பாலாஜி, இணைச் செயலர் செண்பகம், நிர்வாக குழு உறுப்பினர்களான பாலாஜி அருணாச்சலம், சிவக்குமார், முத்தரசன், என ஒவ்வொருவரும் சிறப்பாக விளக்கினார்கள்.  சுந்தர்ராம் கல்யாண் நிகழ்வுகளை எல்லாம் அழகாக புகைப்படம் எடுத்து தந்தார்.

 


கடந்த ஆண்டு குடியரசு தினத்தை  கொண்டாடியதை போலவே, இந்த முறையும் சொசைட்டி சார்பாக ஒரு பண்பாட்டு நிகழ்வை ஜூம் வழிக் கூட்டமாக நடத்தினோம். உறுப்பினர்களும், உறுப்பினர்களின் குழந்தைகளும் கவிதை, ஆடல், பாடல், இசை என பலவிதமான திறன்களை அழகாக நிகழ்த்தினார்கள். யார் யார் என்ன ஆற்றலை வெளிப்படுத்தினார்கள் என அனைத்தையும் பொருளாளர் செல்வராஜ் அவர்கள் தொகுத்து  வழங்கினார்.

 ”GSTPS சொசைட்டிக்காக ஒரு வலைத் தளத்தை உருவாக்கி இருக்கிறோம். இனி எங்களது செயல்பாடுகள் குறித்த அறிவிப்புகள், பேச்சாளர்கள் தயாரிக்கும் பிபிடி போன்றவற்றை இனி தொடர்ச்சியாக வெளியிடலாம் என முடிவெடுத்துள்ளோம். தளத்தை  இப்பொழுது  வெளியிடுகிறோம். இந்த தளத்தை நமது உறுப்பினர் முனியசாமி அவர்கள் முன்முயற்சியுடன் உருவாக்கி தந்தார். அவரைப் பாராட்டி சொசைட்டி சார்பாக உறுப்பினர் சந்திரசேகர் அவர்கள் ஆடை அணிவிப்பார் என தலைவர் தெரிவித்தார்.  சந்திரசேகர் அவர்கள் பொன்னிறத்தில் ஒரு ஆடையை அணிவித்து மரியாதை செய்தார்.

தளத்தை உருவாகுவதற்கான யோசனை, தலைவர் நிர்வாகிகளுடன் பரிசீலித்து அனுமதி தந்தது, தளத்தில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன, சொசைட்டியின் ஆவணக் காப்பகமாக செயல்படும். இந்த தளத்தை நமது உறுப்பினர்கள் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு பகிர்வதின் மூலம் சொசைட்டிக்கு  புதிய உறுப்பினர்களை ஈர்ப்பதற்கு உதவும்.  சொசைட்டி தனிப்பட்ட முறையில் தொழில் அறிவை வளர்த்துக்கொள்ள உதவுகிறது. ஒரு உறுப்பினராக சொசைட்டியின் வளர்ச்சிக்கு உதவுவது கடமை என முனியசாமி பேசினார்.

 சமீபத்தில் நம்முடன் இணைந்த புதிய உறுப்பினர்கள் நீலகண்டன் அவர்களும், செந்தில் முத்து அவர்களும் தங்களை அறிமுகப்படுத்தி, சொசைட்டி தனக்கு எப்படி அறிமுகமானது என்கிற அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டனர். அனைத்து உறுப்பினர்களும் ஒரு சில நிமிடங்கள் சொசைட்டியுடனான தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்கள்.

 கூட்டங்களை கேட்பதின் வழியாக நிறைய கற்றுக்கொள்கிறோம். சந்தேகங்கள் எழுப்புகிறோம். நிர்வாகிகளும், சிறப்புரையாளர்களும் தெளிவுப்படுத்துகிறார்கள். இதன் மூலம் தொழில் அறிவை விரிவு செய்துகொள்கிறோம். நம்பிக்கை பெறுகிறோம். குழப்பிக்கொள்ளாமல், மன உளைச்சல் அடையாமல் வேலை செய்கிறோம்,.  புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்கிறோம்.  அதனால், பலன்களை அடைகிறோம். 

 அதிகப்பட்சமாக நாங்கள் சம்பாதித்து சொந்த வீடு கட்டியிருக்கிறோம் என சில உறுப்பினர்கள் சொன்னது மகிழ்ச்சியை தந்தது.

 பிறகு அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்ட  ஒரு விளையாட்டு நிகழ்ச்சி துவங்கியது. எல்லோரும் சுற்றி அமர்ந்திருக்க, ஒரு பெரிய பிளாஸ்டிக் பந்தை கொடுத்து, இசை துவங்கியதும், ஒருவர் மற்றவருக்கு பந்தை கை மாற்றவேண்டும்.  இசை நின்றதும் தான் சொல்வதை கேட்கவேண்டும் என விளையாட்டை ஒருங்கிணைத்த செல்வராஜ் அவர்கள் தெரிவித்தார்.  பந்து கையில் இருப்பவர்களை பாடச் சொல்வார், ஆடச் சொல்வார் என பந்தை வேக வேகமாக கை மாற்றினார்கள்.   ஆனால், அவர் வித்தியாசமாக வாட்ச் கட்டின ஆட்கள், ஜீன்ஸ் போட்டவர்கள் வெளியேறுங்கள். பெல்ட் போடாதவர்கள் வெளியேறுங்கள் என ஒவ்வொரு முறையும் விதவிதமாய் சொல்லி, அந்த மிகப்பெரிய குழுவில் இறுதி கட்டத்திற்கு வந்து சேர்ந்தவர்கள் உறுப்பினர் செல்வராணி அவர்களும், அவரது மகள் குட்டி பாப்பா நிம்மியும் தான். அதற்கு பிறகும் போட்டி நடந்து நிம்மி ஜெயித்து, பரிசையும் தட்டி சென்றுவிட்டார். அனைவரும் வாழ்த்து தெரிவித்தார்கள். நிர்வாகிகள் ஒரு பரிசையும் வழங்கினர்.

 

விதவிதமான வகைகளில் மதிய உணவு. காரட் அல்வா, ஐஸ்கிரீம் ஏற்பாடு செய்திருந்தார்கள். எல்லோரும் சாப்பிட்டு முடித்த பொழுது, கொஞ்சம் சோர்வு வந்தது. உறுப்பினர்கள் அனைவரும் விளையாட கிளம்பிவிட்டனர்.

 இரண்டு குழுக்களாக பிரிந்து, கிரிக்கெட் விளையாட துவங்கினார்கள். வெயில், அதனால் புழுக்கம் என இருந்தாலும், வியர்க்க, விறுவிறுக்க உற்சாகமாய் விளையாடினார்கள். விளையாடிய அனைவருக்குமே  கிரிக்கெட் மீது அத்தனை காதல் இருந்தது.  சிலர் ஓடி ஓடி டேபிள் டென்னிஸ் விளையாடினார்கள். சிலர் சுவாரசியமாய் கேரம்போர்டு விளையாடினார்கள்.

 


தலைவருடன் சிலர் கடற்கரைக்கு போனோம்.  அழகான பரந்த கடல். கடற்கரை சுத்தமாக இருந்தது. பெரிய பெரிய அலைகள் கரையை தொட்டப்படி இருந்தது. குட்டி பாப்பா நிம்மி அலைகளோடு விளையாடியது.

விளையாட ஆரம்பித்ததும், நேரம் போனதே தெரியவில்லை. மாலை 5.30 ஆகிவிட்டது.  கொஞ்சம் வெங்காய பக்கோடா, தேநீர், காபி தந்தார்கள். ஆசுவாசமாய் இருந்தது. ஒருவழியாய் பேருந்து ஏறி கிளம்பினோம். 




 பேருந்தில் தலைவர் இன்றைய நிகழ்வு குறித்து கருத்து சொல்லுங்கள் என கருத்துக்கேட்டார்.   உறுப்பினர்கள் ஆர்வமாய் முன்வந்து கருத்து தெரிவித்தார்கள்.

 நல்ல சந்திப்பு. குடும்ப உறுப்பினர்களோடு ஒருநாள் பிக்னிக் வந்தது போல அருமையாக இருந்தது.  கூட்டங்களில் அவ்வப்பொழுது சந்தித்தாலும், இப்படி வருவது நல்ல நெருக்கத்தை கொடுக்கிறது.  இடைவெளி குறைந்திருக்கிறது. இனி சகஜமாக ஒருவருக்கொருவர் பேசுவதற்கான சூழல் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இப்படி ஒரு ஏற்பாட்டை அவசியம் செய்யுங்கள் என கேட்டுக்கொண்டார்கள்.  மேலும், ”சொசைட்டியில் எங்கள் செயல்பாடுகளை அதிகரிக்க ஆசைப்படுகிறோம். என்ன வேலை என்பதை பிரித்து கொடுங்கள் செய்கிறோம்.” என உற்சாகமாய் தெரிவித்தனர்.


இவ்வளவு உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஒருநாள் கொண்டாட்டமாக போய்வந்துவிட்டோம். ஒவ்வொருவருக்கும் மகிழ்வான தருணங்கள் இருக்கின்றனஆனால், இதற்கு பின்னால், கடும் உழைப்பு இருக்கிறது. இடத்தேர்வு, பேருந்து ஏற்பாடு, உணவு ஏற்பாடு, பிரஜக்டரை எடுத்து வருவது என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்யாமல் இப்படி ஒரு நிகழ்வு வெற்றி பெறுவது சாத்தியமில்லை. இதற்காக உழைத்த அத்தனை நிர்வாகிகளுக்கும்  நன்றியையும் தெரிவித்தனர்.

 இந்த நான்காண்டு நிகழ்வு குறித்தும், நமது செயல்பாடுகள் குறித்தும், உங்கள் கருத்துக்களை, ஆலோசனைகளை நமது வாட்சப் குழுவில் தெரியப்படுத்துங்கள்.  எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு முன்னேறிச் செல்வோம் என தலைவர் சொல்லி முடித்தார்.

 

-              GSTPS

No comments:

Post a Comment