Tuesday, December 26, 2023

GSTPS : ஜி.எஸ்.டி குறித்த இரண்டாம் வகுப்பு நடைபெற்றது! காலண்டர்களும், டைரியும் வழங்கப்பட்டன!


ஜி.எஸ்.டி குறித்த இரண்டாம் வகுப்பு சிறப்பாக நடைபெற்றது!

உற்சாகமாக பிறக்கப்போகும் புதிய ஆண்டுக்கான காலண்டர்களும், டைரியும் வழங்கப்பட்டன!

அனைவருக்கும் வணக்கம்.

கடந்த சனிக்கிழமையன்று இந்துஸ்தான் சேம்பரில் (23/12/2023) GSTPS சொசைட்டியின்  நேரடிக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.   நாம் நடத்தும் நேரடி கூட்டங்களில் இந்த கூட்டம் 25வது என்பது சிறப்பானது.

 


இனிய தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் துவங்கியது.  செயலர் பாலாஜி கலந்துகொண்ட அனைத்து உறுப்பினர்களையும் வரவேற்று பேசினார்.

 

ஜி.எஸ்.டி செக்சன் 2ல் உப பிரிவு 120 பிரிவுகளில் முதல் 40 ஐ GSTPS தலைவர் செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் ஒவ்வொரு அம்சத்தை விளக்க வந்தார்.

 


கடந்த மாதம் முதல் வகுப்பு  எடுத்ததில் இருந்து உறுப்பினர்களிடம் சில கேள்விகளை கேட்டார்.  ஒரு நல்ல ஆசியருக்கு இருக்கும் வழக்கமான பழக்கமிது. ஆசிரியர் விளக்குவார் கேட்டுவிட்டு போய்விடலாம் என நினைக்கும் மாணவர்களை கொஞ்சம் உலுக்கி, சுறுசுறுப்பாக வைத்திருக்கும் கேள்வி அது.  நமக்கு நன்றாகவே தெரிந்தாலும், ஆசிரியர் கேட்கும் பொழுது  சொல்ல வார்த்தைகள் கோர்வையாக வராது. அப்படித்தான் நேற்றும் நடந்தது.

 


இனிமேல் வகுப்புக்கு போகும் பொழுது, கடந்த வகுப்பு சம்பந்தப்பட்ட அம்சங்களை படித்துக்கொண்டு போகவேண்டும் என பலரும் நினைத்திருப்பார்கள் என்பது நிச்சயம்.

 

இரண்டாம் வகுப்பை துவங்கினார்.  ஒவ்வொன்றிற்கும் ஒரு உதாரணம் கொடுத்து, உறுப்பினர்களிடம் கேள்வி எழுப்பி, பதில் சொல்ல வைத்து விளக்கி முடித்தார். சந்தேகங்களுக்கும் பதிலளித்தார்.

 


எப்பொழுதும் அடிப்படை அம்சங்கள் கற்றுக்கொள்வது மிகவும் அவசியம்.  அடிப்படை இல்லாமல், மேலே மேலே கட்டிடம் எழுப்பிக்கொண்டு போவது, ”பேஸ்மட்டம் வீக், கட்டடம் ஸ்டிராங்க்” என வடிவேல் நகைச்சுவை போல ஆகிவிடும்.  அதனடிப்படையில் தான் சொசைட்டி முடிவு செய்து வகுப்புகளை நடத்துகிறது.

 


இடைவேளையில், அந்த குளிருக்கு இதமாக, சிறுபசிக்கும் தோதாக இனிப்பு, பப்ஸ், சமோசா சூடான காபி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.  இன்றைக்கான செலவுகளை அம்பத்தூரில் வசிக்கும் சந்திரசேகர் அவர்கள் ஏற்றுக்கொண்டார்.

 


நமது உறுப்பினர்கள் தங்களது குடும்ப நிகழ்வுகளின் மகிழ்ச்சியை நமது உறுப்பினர்களோடு பகிர்ந்துகொள்வது வழக்கம்.  அதன் தொடர்ச்சியில் சந்திரசேகர் அவர்களுடைய இரண்டு பிள்ளைகள், ஒருவர் ஹர்ஷா  கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பிபிஏ படிக்கிறார்.  இளையவர் தர்மேஷ்  ஏழாவது படிக்கிறார். *இருவரும் காலில் சக்கரம் (Scating) கட்டிக்கொண்டு ஹாக்கியை தேசிய அளவில் விளையாடும் விளையாட்டு வீரர்கள்.*   கடந்த வாரம் சண்டிகாரில் நடைபெற்ற தேசிய விளையாட்டு போட்டிகளில் இருவரும் உற்சாகமாக கலந்துகொண்டார்கள்.  கடும் மழையென்றாலும், கொட்டும் பனி என்றாலும், (சண்டிகாரில் இரவானால் 8 டிகிரிக்கும் கீழே)  பிள்ளைகளோடு எந்த மாநிலம், நாடு என்றாலும் போய்விடுகிறார்.  தனது பிசியான அலுவலக நெருக்கடியிலும், பிள்ளைகளின் வளர்ச்சியில் கவனம் கொடுக்கிறார். *இப்பொழுது விளையாடியதற்கான ரிசல்ட்டை எதிர்பார்த்து நகத்தை கடித்துக்கொண்டு காத்துக்கொண்டிருக்கிறார். அவர்கள் மேலும் மேலும் சாதிக்கவேண்டும் என வாழ்த்துவோம்.*

 


அடுத்து, நாம் நமது சொசைட்டியை 2019ல் வசந்த காலத்தில் துவங்கினோம். 2020ல் இருந்து தொடர்ந்து மாதக்காலண்டர்களும், டைரியும் வழங்கி வருகிறோம்.  அதன் தொடர்ச்சியில் ஐந்தாவது ஆண்டாக இந்த ஆண்டும் சொசைட்டி  தனது உறுப்பினர்களுக்கு கொடுத்து மகிழ்கிறது.

 


முதல் மாத காலாண்டரை நமது மூத்த உறுப்பினர் கருப்பையா அவர்கள் வெளியிட இளைய உறுப்பினர் ரோசன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.  

 


முதல் டைரியை நமது உறுப்பினர் தணிக்கையாளர் சந்திரமெளலி அவர்கள் வெளியிட, உறுப்பினர் முகமது அவர்கள் பெற்றுக்கொண்டார்.

 

நமது உறுப்பினர் ”ஜி.எஸ்.டி வினாடி வினா”  (Quiz) புகழ் நீலகண்டன் அவர்கள் தனது நிறுனத்தின் பெயரில் வெளியிட்ட தினசரி காலண்டர்களை பிரியத்தின் பெயரில் நமது உறுப்பினர்கள் அனைவருக்கும் தினசரி காலண்டர்களை கொடுப்பதற்காக அனுப்பியிருந்தார்.  அதன் முதல் காலண்டரை  Dr. வில்லியப்பன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

 


வந்திருந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் காலாண்டர்களும் டைரியும் வழங்கப்பட்டன.  கலந்துகொள்ள இயலாத உறுப்பினர்களின் சார்பாக தெரிந்தவர்கள் வாங்கிக்கொள்ளலாம் என தெரிவித்ததன் அடிப்படையிலும் சில உறுப்பினர்கள் பெற்றுக்கொண்டார்கள்.  மற்ற  உறுப்பினர்கள் நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டால், பெற்றுக்கொள்ளலாம்.

 


நமது நிர்வாகிகள் நாம் தொடர்ந்து செல்லும் ஜி.எஸ்.டி அலுவலகங்களுக்கும் மாதக் காலண்டர்களை வழங்குவது வழக்கம். ஆகையால், அப்படி தேவைப்படுவர்களும் வாங்கி கொடுங்கள் என கேட்டுக்கொண்டார்கள்.

 

பிறகு, உறுப்பினர்கள் சார்பாக யாராவது பேசலாம் என தெரிவித்த பொழுது,  முனியசாமி அவர்கள் பேசினார்.

 


“ஜி.எஸ்.டி குறித்த இந்த வகுப்பு சிறப்பான ஏற்பாடு. உறுப்பினர்களின் அறிவை வலுப்படுத்துவதற்காக  நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.  அவர்களுக்கு  நன்றி.   அடுத்து வணிகவியல் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கவேண்டும் என தலைவர் யோசிக்கிறார். புதிது புதிதாக சிந்திப்பதில் நமது தலைவர் 30+ல் இருக்கிறார்.  அவர் வேகத்துக்கு நாம் ஈடுகொடுத்து சென்றால், நாம் ஆற்றல்மிக்கவர்களாகிவிடுவோம்.

 


தங்கள் சொந்த வேலை நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஆண்டுக்கு ஒருமுறை காலண்டரும், டைரியும் சரியாக வழங்கிவிடுகிறார்கள்.  நிர்வாகிகளுக்கு நன்றி.

 


ஆயிரம் பேரை கொண்ட ஒரு அமைப்பாக இருந்தாலும், 40% தான் வந்து கலந்துகொள்கிறார்கள் என தலைவர் செய்தியை பகிர்ந்துகொண்டார்.  எல்லோருக்குமானது தான் நமக்கும்.  ஆகையால், உறுப்பினர்கள் தங்களுக்கு தெரிந்தவர்களை அறிமுகப்படுத்துங்கள்.  புதிய உறுப்பினர்களால் நமக்கு புதிய ஆசிரியர்கள் கிடைப்பார்கள்.  புதிய செயல்பாட்டாளர்கள் கிடைப்பார்கள். நாம் வேலை கூட செய்துவிடுவோம். நிதியும் ஒரு அமைப்புக்கு முக்கியமானது.  ஆகையால் புதிய உறுப்பினர்கள் மூலம் கிடைக்கும் நிதியும் சொசைட்டியை வலுப்படுத்தும்.

 


இப்பொழுது, நாம் வலைத்தளம் நடத்துகிறோம். யூடியூப்பில் நாம் நடத்தும் கூட்டங்களை பகிர்கிறோம்.  புதிதாக பேஸ்புக்கிலும் நமது செய்திகளை பகிர்ந்துகொள்கிறோம். சமீபத்தில் நமது பதிவை பார்த்துவிட்டு, மின்னிதழை ஒருவர் அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். நமது செயல்பாடுகள், நமது தொடர்ச்சியான வலைத்தள செயல்பாடு நிச்சயம் புதிய உறுப்பினர்களை ஈர்க்கும். நாம் மேலும் மேலும் வளர்ச்சியடைவோம். உற்சாகமாக செயல்படுவோம்.

 


நமது உறுப்பினர்கள் சிலர் நேரடிக் கூட்டங்களில் வேலை காரணமாக,  சொந்த வேலை காரணமாக கலந்துகொள்வதில்லை. தொடர்ச்சியாய் கலந்துகொள்ளும் உறுப்பினர்களோடு நமக்கு நெருக்கம் உருவாவதை நாம் உணரமுடியும். இதை வராத உறுப்பினர்கள் உணரவேண்டும்.

 


அதே போல ஒரு தொழிலில் நாம் இருக்கும் பொழுது, ஒவ்வொரு நாளும் நாம் ஒவ்வொரு வேளையும் உணவை எடுத்துக்கொள்வது போல, சுவாசிப்பது போல, தொழில் ரீதியான அப்டேட்டுகளை நாம் கற்கவேண்டும். இல்லையெனில் பின் தங்கிப்போய்விடுவோம். இப்பொழுது ஜி.எஸ்.டியில் AIயை முழுமூச்சாய் பயன்படுத்துகிறார்கள். அதையெல்லாம் நாம் எதிர்கொள்ள தயாராகவேண்டும்” என்றார்.

 


Dr. வில்லியப்பன் அவர்களும் உற்சாகமாக பேசினார்.  “*சொசைட்டியில் இணைவதற்கு முன்பு நம்முடைய நிலைமையும், நான்கு ஆண்டுகளில் நமது வளர்ச்சியையும் நம்மால் நன்றாக உணரமுடிகிறது.*

 

தமிழ்நாடு தழுவிய அளவில் அமைப்பிலும், சில வாட்சப் குழுக்களிலும்  வரும் கேள்விகளை பார்க்கும் பொழுது, நமது உறுப்பினர்கள் எந்த அளவிற்கு வளர்ந்து  இருக்கிறோம் என்பதை நன்றாக உணரமுடிகிறது. 


 

அதே போல  நாம் மழை போல நிறைய நோட்டிஸ்களை எதிர்கொள்கிறோம். சமீபத்தில் அப்படி என்னுடைய வாடிக்கையாளர் ஒருவருக்கு 2 கோடிக்கு ஒரு நோட்டிஸ் வந்து, அதை எதிர்கொண்டேன். 

 


அதில் நிறுவனத்தின் பெயர், முகவரியை மறைத்துவிட்டு, நமது வாட்சப் குழுவில் பகிர்ந்து, அதை எப்படி எதிர்கொண்டோம். அதில் இருந்து எப்படி வெளிவந்தோம் என்பதையும் பகிர்ந்தால், எல்லா உறுப்பினர்களும் கற்றுக்கொள்ள முடியும். தலைவரிடம் இது குறித்து பேசும் பொழுது செய்யலாம் என ஏற்றுக்கொண்டார்.

 


அனைத்து உறுப்பினர்களும் இந்த புதிய ஆண்டில், ஒரு உறுப்பினரை அறிமுகப்படுத்துவோம் என மனதில் உறுதிக்கொள்வோம்*.” என வாழ்த்துகளோடு விடைபெற்றார்.

 


இறுதியில் கலந்துகொண்ட அனைவருக்கும் துணைத்தலைவர் பாலாஜி அருணாச்சலம் அவர்கள் நன்றியுரை தெரிவித்தார்.  நாம் மின்னிதழை கொண்டு வருகிறோம். அதில் வினாடி வினா கேள்விகளை நீலகண்டவர்கள் அவர்கள் தருகிறார்.  உறுப்பினர்களின் ஜி.எஸ்.டி குறித்த அறிவை வளர்ப்பதற்காகத் தான்  மின்னிதழில் தருகிறோம்.  ஆகையால் அனைவரும் கலந்துகொள்ளுங்கள் என உறுப்பினர்களை உற்சாகப்படுத்தினார்.

 


நமது உறுப்பினர் சண்முகப்பிரியா அவர்களை குறிப்பிட்டு சொல்லவேண்டும். இரண்டு நாட்களுக்கு முன்பு கூட்டம் குறித்து அவரே கேட்டறிந்தார்.  குழுவில் வாக்கெடுப்பு நடத்தவில்லையா என நினைவுப்படுத்தியதும் அவர் தான்.  அவருடைய கைக்குழந்தையான மகனுக்கு லேசாக சளி பிடித்திருந்த‌து. அது இன்னும் அதிகமானால், வருவது சிரமம் என தெரிவித்தார்.

 

ஆச்சர்யம். கூட்டத்திற்கு வந்துவிட்டார்.  அவர் செங்குன்றத்தில் இருந்து வடக்கப்பக்கமாக‌ ஐந்து கிமீ தூரத்தில் இருந்து வருகிறார். குறிப்பிட்ட தொலைவு ஆட்டோ. பிறகு மெட்ரோ என பிடித்து வருகிறார். 12 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பியதாக தெரிவித்தார். உதவிக்கு அம்மாவையும் கடந்த முறை போலவே இந்த முறையும் அழைத்து வந்திருந்தார்.

 


பிரியா இப்பொழுது கணக்காளராக ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறார். இப்பொழுது பிரசவ விடுப்பில் இருக்கிறார். கைக்குழந்தை கொஞ்சம் வளர்ந்து, அடுத்து வேலைக்கு போவதற்குள், அவர் தொடர்ந்து கற்பதின்  வழியாக தெளிவான கணக்காளராக மாறிவிடுவார் என நம்புகிறேன். அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வோம்.

 

வந்திருந்த அனைவரும் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டு விடைபெற்றோம்.  கூட்டம் இனிதே நிறைவுற்றது.

 


நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றி. நிகழ்வின் அருமையான தருணங்களை, மகிழ்ச்சியை புகைப்படங்களாக சளைக்காமல் எடுத்து, பகிர்ந்துகொண்ட கல்யாண் அவர்களுக்கும் நன்றி.

 

-         -  GSTPS


தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety/

 

No comments:

Post a Comment