Monday, February 5, 2024

EPF : நிறுவனமும் தொழிலாளர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் - அத்தியாயம் 3

வருங்கால வைப்பு நிதி திட்டம் : 

நிறுவனமும் தொழிலாளர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்


-         அத்தியாயம் 3



தொழிலாளர்களும் நிறுவனமும் செலுத்தும் நிதியை பி.எப் – எந்தெந்த கணக்கு வகைகளில் பராமரிக்கிறார்கள்? 

 

இந்த விசயத்தில் நிறைய தொழிலாளர்களுக்கு சந்தேகம் இருக்கிறது.  பலரும் சந்தேகம் கேட்கிறார்கள். தொழிலாளர்களின் மாதச் சம்பளத்தில் இருந்து, அடிப்படை சம்பளத்தில் இருந்தும், பஞ்சப்படியிலிருந்தும் பிடித்தம் செய்யும் 12%யும், நிறுவனம் அதே அளவு 12%யும் பி.எப்க்கு செலுத்துகிறார்கள்.

 

உதாரணம் : ஒரு தொழிலாளியின் சம்பளம் ரூ. 15000 என எடுத்துக்கொள்வோம்.

இதில் அடிப்படை சம்பளம் +  பஞ்சப்படி ரூ. 12500 என்கிற தொகையில் பிடித்தம் செய்யப்படும் தொகை 12% - ரூ. 1500.  நிறுவனம் செலுத்தும் அதே அளவு தொகை ரூ. 12% ரூ. 1500.  மொத்தம் 24% தொகையான ரூ. 3000 த்தை பி.எப் நிறுவனம் கீழ்க்கண்ட வகைகளில் வரவு வைத்துக்கொள்கிறது.

 


தொழிலாளியின் வருங்கால வைப்பு நிதியில்

செலுத்தப்படும் தொகை  (12%) A/c No: 1 – ரூ. 1500

அதே கணக்கில் நிறுவனம் செலுத்தும் தொகை  (3.67%) A/c No: 1 –ரூ. 459

ஓய்வூதிய கணக்கில் செலுத்தும் தொகை (8.33%) – A/c No: 10 – 1041

 

தொழிலாளியின் பி.எப் இருப்பு கையேட்டில் (Passbook)ல் மூன்று கணக்குகளாய் காட்டுவதற்கு காரணம் இது தான்.


இதில் முக்கியமான செய்தி ஒன்று இருக்கிறது. இதில் A/c No:1 ல் செலுத்தப்படும் தொகைக்கு தான் பி.எப் வட்டி தருகிறது. ஓய்வு நிதி திட்டத்தில் செலுத்தப்படும் நிதிக்கு பி.எப் வட்டித்தருவதில்லை.

 


மேலும், 24% தவிர்த்து, கூடுதலாக நிறுவனம் 1%  நிதி செலுத்துகிறது.  அதில் 0.50%த்தை நிறுவனத்தின் பி.எப் கணக்குகளை பராமரிப்பதற்காக, நிர்வாக செலவுகளுக்கென  வசூலித்துக்கொள்கிறது. இன்னொரு 0.50% என்பது தொழிலாளர்களுக்கு காப்பீடு கட்டணமாக  பெற்றுக்கொள்கிறது. அந்தத் திட்டத்தின் பெயர் EDLI (Employee Deposit Linked Insurance Scheme). இந்த திட்டத்தைப் பற்றி பிறகு விரிவாக பார்க்கலாம்.

 

தொழிலாளியின் கணக்கில் சேமிக்கப்படும் நிதியை எந்தெந்த சமயங்களில் பெறலாம்?

 


வருங்கால வைப்பு நிதி என்பது, தொழிலாளர்களின் பணி ஓய்வுகால நலன் கருதித்தான் , நிறுவனமோ, தொழிலாளர்களோ விருப்பம் சார்ந்து இந்த திட்டத்தில் இணைந்துகொள்ள சொல்லாமல், அரசு  ஒரு சட்டத்தை உருவாக்கி நிதியை செலுத்தியே ஆகவேண்டும் என்ற விதியை உருவாக்கி சேமிக்க வைக்கிறது.

 

சில நிறுவனங்களில் சில தொழிலாளர்கள் பி.எப் திட்டத்தில் தன்னை இணைக்கவேண்டாம் என கருத்து தெரிவிப்பார்கள். ஒன்று அவர்கள் பெறும் சம்பளம் என்பது அவர்களுடைய குடும்பத்தின் பொருளாதார  தேவைகளுக்கு போதுமானதாக இருக்காது.  இன்னொரு காரணம் பி.எப் திட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதும் ஒரு காரணம். பணத்தை இப்பொழுது செலுத்திவிட்டு, அதை வாங்க அலையவேண்டியிருக்கும். கிடைக்காமல் போய்விடுமோ என்ற தேவையில்லாத பயமும் ஒரு காரணம்.  எதிர்காலம் குறித்தப் பார்வை இல்லாமல் இருப்பதும் ஒரு காரணம்.

 

புதிதாக பி.எப் திட்டத்தில் இணையும் நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு இந்தத் திட்டம் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் விரிவாக விளக்கவேண்டியது அவசியம் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். 

 

ஆக, இப்படி பல ஆண்டுகளாக சேமிக்கும் பணத்தை பணி ஓய்வு பெறும் பொழுது காலத்தில் தொழிலாளி நிதியை பெற்றுக்கொள்ளலாம். 

 


அவசரகால கடன்

 

நாம் செலுத்திய பி.எப். பணத்தில் இருந்து, திருமணம், வீடு கட்டுவது, மருத்துவ செலவு என  நெருக்கடியான காலக்கட்டங்களில் முன்பணம், கடன் பெறுவதற்கு பி.எப்பில் வசதிகள் இருக்கின்றன.  அதற்கான நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களையும், விதிகளையும் பி.எப் விதிகளை விதித்திருக்கிறது.

 

கீழே ஒரு படத்தை உதாரணத்திற்கு தந்துள்ளேன். பாருங்கள்.  இந்த நிபந்தனைகள் அவசியமானவை. எந்த தலைப்பின் கீழ் விண்ணப்பிக்கிறோமோ அதற்குரிய பொருத்தமான ஆவணங்களையும் சமர்ப்பிக்கவேண்டியது மிக அவசியம். 

 

கொரானா காலத்தில் அரசு  ஊரடங்கு அறிவித்த பொழுது பலருக்கும் வேலை இல்லை. சம்பளமும் இல்லை. யாரிடமும் கடனும் பெற முடியாத நிலை என்னும் பொழுது, நாடு முழுவதும் மக்களிடமிருந்து கோரிக்கைகள் எழுந்த பிறகு, பி.எப்.  எந்தவித ஆவணமும் நிர்பந்தம் செய்யாமல் கடன் வழங்கியது. மூன்று மாத சம்பளம் (Basic + DA) அல்லது தொழிலாளி செலுத்திய பி.எப் பணத்தில் 75% இதில் எது குறைவோ அவ்வளவு பெற்றுக்கொள்ளலாம் என்ற நிபந்தனையுடன் அடிப்படையில் கடன் வழங்கியது. இந்தப் பணத்தை திரும்ப செலுத்த தேவையில்லை. நாம் கட்டிய மொத்தப் பணத்தில் இருந்து கழித்துக்கொள்வோம் என்றும் அறிவித்தது.

 

இன்னும் வளரும்!

 

- இரா. முனியசாமி,

பி.எப்., இ.எஸ்.ஐ,  ஜி.எஸ்.டி ஆலோசகர்.

9551291721

GSTPS உறுப்பினர்.


(இந்த கட்டுரை ”தொழில் உலகம் ”  பிப்ரவரி 2023 இதழில்  வெளிவந்தது.)


No comments:

Post a Comment