வணக்கம். கடந்த சனிக்கிழமையன்று (24/02/24) எழும்பூர் இக்சா மையத்தில் அக்குபஞ்சர் மருத்துவ முகாமில் நமது உறுப்பினர்களும், குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் திரளாக கலந்துகொள்ள சிறப்பாக நிறைவேறியது.
இனிய தமிழ்த்தாய் வாழ்த்துடன் மருத்துவ முகாம் துவங்கியது. நமது துணைத்தலைவர் பாலாஜி அருணாச்சலம் அவர்கள் கலந்துகொண்ட அனைவரையும் வரவேற்று பேசினார்.
தலைவர் செந்தமிழ்ச்செல்வன் தனது உரையில்… “அக்குபஞ்சர் மருத்துவம் சீனாவில் புகழ்பெற்று இருந்தாலும், இந்தியாவில் வர்ம புள்ளிகள் என இருந்தது தான் அங்கு பரவியது என்றும் சொல்கிறார்கள். என் அனுபவத்தில் இடது கை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் தூக்க முடியாது சிரமப்பட்டேன். ஒருநாள் மருத்துவம் செய்த பிறகு முழுவதும் தூக்க முடிந்தது. அது ஒரு மேஜிக் போல இருந்தது. அதன்பிறகு தான், இந்த மருத்துவத்தை கற்றுக்கொள்ள துவங்கினேன். நமது உறுப்பினர்களுக்கும் அறிமுகப்படுத்தலாம் என முடிவு செய்தோம்.” என பேசினார்.
ஒவ்வொருவருக்கும் மருத்துவம் பார்க்க ஆரம்பித்தார். எல்லோருக்கும் பார்த்து முடிக்க மாலை 6.30ஆகிவிட்டது. சிலருக்கு உடனடியாகவே நல்ல விளைவு ஏற்படுத்தியதை தெரிவித்தார்கள். சிலர் தொடர்ந்து பார்த்தால் சரியாகிவிடும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்கள்.
மருத்துவர் ஆற்றிய சேவையைப் பாராட்டி, மருத்துவருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.
தங்களுடைய அனுபவங்களை பகிரும் பொழுது, பொருளாளர் செல்வராஜ் அவர்களின் துணைவியார் பேசும் பொழுது, ”மருத்துவருடைய அணுகுமுறை ஒரு மருத்துவராக இல்லை. எங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவருடன் உரையாடுவது போல இருந்தது. “ என பாராட்டி பேசினார்.
சந்திரசேகர் அவர்கள் “தினமும் பகலில் எவ்வளவு அலைந்தாலும், நின்றுகொண்டிருந்தாலும், இரவானால், கடுமையான கால் வலி இருக்கும். என் குடும்பத்தினரை கால் அமுக்க சொல்லி சிரமப்படுத்துவேன். இன்று இரவு வலி இல்லாமல் தூங்கினால், மருத்துவத்திற்கு நன்றி கடன்பட்டுள்ளேன்” என்றார். இன்று காலையில், வலி இல்லாமல் தூங்கினேன் என்பதை நமது வாட்சப் குழுவில் பதிவு செய்தார்.
முனியசாமி அவர்கள் பேசும் பொழுது “ நமது வாட்சப் குழுவில் தொடர்ந்து அக்குபஞ்சர் மருத்துவம் குறித்த செய்திகளைப் பகிர்ந்துகொண்டேன் என தலைவர் குறிப்பிட்டு பேசினார். மற்றவர்களும் அதை தெரிவித்தார்கள். தலைவர் நல்லது செய்யவேண்டும் என நினைத்து நிர்வாகிகளுடன் பேசி ஒன்றை அறிவிக்கிறார். அதற்கு உறுதுணையாக இருப்பது நமது கடமை. அதைத் தான் செய்தேன்.
அலோபதி மருத்துவம் இங்கு நோய்களில் இருந்து குணப்படுத்துவதில் செல்வாக்கு செலுத்தினாலும், அதனாலும் குணப்படுத்தவே முடியாத, சாந்தப்படுத்துகிற நோய்களின் பட்டியல் அதிகம். இந்தியாவில் மாற்று மருத்துவ முறைகள் என ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதா, யுனானி, வர்மம், இயற்கை மருத்துவம் என நிறைய இருக்கின்றன. அவற்றில் உள்ள நல்ல அம்சங்களை பயன்படுத்திக்கொள்வது சரியானது. நடைமுறையில் சில அலோபதி மருத்துவர்கள் அப்படி பயன்படுத்துவதையும் பார்த்திருக்கிறேன்.
அதே போல அலோபதி மருத்துவத்தில் இருக்கும் இன்னொரு பெரிய பிரச்சனை சேவை என்கிற எண்ணம் போய், வணிகம் என்பது பெரிதாக கலந்துவிட்டது. பல சமயங்களில் உண்மையை சொல்கிறார்களா, பொய் சொல்கிறார்களா என பிரித்து பார்ப்பது பெரிய சவாலாக இருக்கிறது. கடைசி எளிய மனிதன் வரைக்கும் மருத்துவம் என்பது கிடைக்கவேண்டும் என்பது தான் வளர்ந்த, நாகரிக சமூகத்தின் இலக்காக இருக்கமுடியும். மாற்று மருத்துவ முறைகளை இந்திய அரசு உற்சாகப்படுத்தவேண்டும்.” என பகிர்ந்துகொண்டார்.
”உடல் வளர்த்தேன். உயிர் வளர்த்தேனே” என்கிறார் திருமூலர். பொதுவாக நம் மக்கள் உடல்நலம் குறித்து வந்த பின் காப்பவர்களாக தான் இருக்கிறோம். தினசரி உணவு முறையில் கவனம் செலுத்துவது, குறைந்த அளவிலாவது உடற்பயிற்சி செய்வது என்பதை கடைப்பிடித்தால், மருத்துவத்தின் தேவையையே கொஞ்சம் தள்ளிவைக்கமுடியும். ஆகையால் கவனத்துடன் இருப்போம்.
பொதுவாக நமது உறுப்பினர்கள் தங்களது மகிழ்வான தருணங்களை, உறுப்பினர்களோடு பகிர்ந்துகொள்வது வழக்கம். சந்திரசேகர் அவர்கள் அயப்பாக்கத்தில் புது வீடு கட்டி, நிர்வாகிகளையும், நமது உறுப்பினர்கள் சிலரையும் அழைத்திருந்தார். போயிருந்தோம். அவருக்கு இருபத்தி ஒன்றாம் திருமண நாள் என்பதையும் பகிர்ந்துகொண்டார். எல்லோருக்கும் சூடான போண்டாவும், சுவையான காபியும் வழங்கப்பட்டது அதன் செலவுகளை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார். வீடு கட்டிய சந்தோசத்தில், நமது சொசைட்டியில் ஏழு ஆண்டு சிறப்புச் சந்தாவான, ரூ. 10000 த்தையும் செலுத்திவிட்டார். மகிழ்ச்சி.
செல்வராஜ் அவர்கள் வந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு, முகாம் இனிதே நிறைவுற்றது.
நன்றி.
- - GSTPS
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety
No comments:
Post a Comment