வணக்கம். 23/03/2024 அன்று நமது உறுப்பினர்களுக்காக மட்டும் சிறப்பாக நடத்தப்படும் (27வது) நேரடிக்கூட்டம் எல்லா விதங்களிலும் சிறப்பாக நடைபெற்றது. கலந்துகொள்ள இயலாத பலருக்கும் பெரிய இழப்பு தான்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் துவங்கியது. நமது GSTPS தலைவர் செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் GSTயினுடைய மூன்றாவது வகுப்பை செக். 2 – 41 முதல் 80 வரைக்குமான அம்சங்களை நடைமுறை உதாரணங்களுடனும், கேள்விகள் எழுப்பி, பதில்களை பெற்றும் அருமையாக விளக்கினார்.
ஒவ்வொரு முறை வகுப்பு துவங்கும் பொழுது, கடந்த வகுப்பின் முக்கிய அம்சங்கள் குறித்து நம்மிடம் கேள்வி எழுப்புகிறார். ஒரு நல்ல ஆசிரியர் அப்படித்தான் நடந்துகொள்வார். இரண்டு மாதத்திற்கு முன்பு எடுத்ததை கேட்கும் பொழுது, பலதும் மங்கலாக தான் இருக்கிறது. மதிய உணவு எடுத்து, அரை மயக்கத்தில் இருக்கும் பொழுது மூளையில் பதிந்ததை எடுத்து நினைவுக்கு கொண்டுவருவது எவ்வளவு சிரமம் என்பதை அவர் அறியமாட்டார். 😊
இதெல்லாம் சிலருக்கு பிரச்சனை என்றால்… ஒரு நல்ல மாணவராய் சீனியர் வில்லியப்பன் அவர்கள் கடந்த வகுப்புகளை நினைவுப்படுத்தி, இன்று நடத்த இருக்கும் எல்லாவற்றையும் ஒரு பார்வை வேறு பார்த்து வந்து இருக்கிறார். கையில் ஜி.எஸ்.டி சட்ட புத்தகத்தையும் கொண்டு வந்தார். (இந்த புத்தகம் எதற்கு கொண்டு வருகிறீர்கள் என கேட்டதற்கு இவ்வளவையும் சொல்கிறார்.) இவரல்லவோ ஆசிரியர் எதிர்பார்க்கும் நல்ல மாணவர்.
தேநீர் இடைவேளையில் அருமையான ரசமலாய் போன்ற ஒரு இனிப்பு ஒன்றையும் (அதை இனிப்பு இட்லி என பெயரிட்டு அழைத்தார்கள்), சூடான, சுவையான சமோசா ஒன்றும், ஒரு நல்ல காபி நிர்வாகிகள் தந்தார்கள்.
இரண்டாவது தலைப்பான, மழை போல வந்து குவியும் ஜி.எஸ்.டி நோட்டிஸ்களை எப்படி எதிர்கொண்டோம் என்பதை திருநாவுக்கரசு அவர்கள் பேச தயாராக இருந்தார்.
தலைவர் அவரைப் பற்றி அறிமுகப்படுத்தும் பொழுது, நம் உறுப்பினர்களில் முதலில் இணைந்தவர் இவர். புகழ்பெற்ற நிறுவனமான XXXXX இந்திய அளவில் ஜி.எஸ்.டி. விசயங்களை கவனித்து வருகிறார். அவருடைய அனுபவத்தை நம் உறுப்பினர்களிடம் பகிரலாமே என கடந்த மாதம் கேட்கும் பொழுது, கொஞ்சம் கூட தயக்கம் இல்லாமல் பேச ஏற்றுக்கொண்டார் என தெரிவித்தார்.
திருநாவுக்கரசு அவர்கள் தன்னுடைய உரையை துவங்கும் பொழுது, “இந்த சொசைட்டியில் இணையும் பொழுது, கொஞ்சம் மங்கலாக தான் இருந்தது. ஜி.எஸ்.டி குறித்தும், வருமான வரி குறித்தும் பல்வேறு அம்சங்கள், வழக்குகள், தீர்ப்புகள், அப்டேட்கள் எல்லாவற்றையும் தவறாமல் படிக்கும் பொழுது, விவாதிக்கும் பொழுது நிறைய கற்றுக்கொண்டேன். எங்களது நிறுவனத்துக்கு ஒரு புகழ்பெற்ற நிறுவனம் தான் சட்ட ரீதியான விசயங்களை எங்களுக்கு சரியாக வழிகாட்டுகிறது. அவர்கள் சில விசயங்கள் சொல்லும் பொழுது, இதில் இப்படி ஒரு பிரச்சனை வருமே சார் என சில சமயங்களில் நான் சொல்லும் பொழுது, ஆச்சர்யப்படுவார்கள். அதற்கு பிறகு ஆர்வத்துடன் நம்மிடம் கலந்துபேசவும் ஆரம்பித்தார்கள்.” என பேசத் துவங்கினார்.
XXXXX நிறுவனம் என்னென்ன தொழில்கள் செய்கிறது? எவ்வளவு விற்பனை? என்னென்ன அம்சங்களை ஜி.எஸ்.டியில் எதிர்கொள்கிறார்கள்? நிர்வாக ரீதியில் எப்படி இயங்குகிறார்கள்? எப்படி ஊழியர்களை பயிற்றுவிக்கிறார்கள் என பறவைப் பார்வையில் மிகத் தெளிவாக பேசினார்.
ஜி.எஸ்.டி நோட்டிசுகள் என்னென்ன தலைப்புகளில் வருகின்றன? எப்படி புரிந்துகொள்கிறோம்? ஜார்கண்டில், உபியில் இந்தியில் நோட்டிசை தருகிறார்கள். ஒவ்வொரு வார்த்தையும் முக்கியம் என்ற அடிப்படையில் இந்தி பிரச்சார சபாவில் கொடுத்து மொழிபெயர்க்கிறோம். ஒரு பக்கத்திற்கு ரூ. 1500 வாங்குகிறார்கள் என்ற பொழுது ஆச்சர்யமாய் இருந்தது.
ஜி.எஸ்.டி நோட்டிசுகள் எதையும் விட்டுவிடக்கூடாது என எங்கங்கோ அதிகாரிகளின் மின்னஞ்சல், மொபைல் எண் தரப்பட்டதோ, அங்கெல்லாம் முறையாக நிறுவனத்தின் மின்னஞ்சல்கள், மொபைல் எண்களை கொடுத்தோம். முடிந்த மட்டிலும் ஒரு நோட்டிசுக்கு உரிய நேரத்தில் பதில் அளிக்கிறோம். இல்லாத, தர முடியாத தவறான கமிட்மெண்ட்களை அதிகாரிகளிடம் நாம் கொடுப்பதில்லை.
எப்படி பதிலளிக்கிறோம்? அதில் கற்றுக்கொண்ட பாடங்கள் என்னென்ன? ஒவ்வொரு மாநில அதிகாரிகளையும் எப்படி அணுகுகிறோம்? (உ.பியில் ஒரு சுவரில் கொஞ்சம் நேரம் சாய்ந்திருந்தால், அதற்கு பணம் கொடு!” என்கிற சொலவடை உண்டு) என ஒவ்வொரு அம்சத்தையும் விரிவாக விளக்கும் பொழுது ஆச்சர்யமாய் இருந்தது. கற்றுக்கொள்ளும் விதத்திலும் இருந்தது. அவ்வப்பொழுது எழுப்பிய கேள்விகளுக்கும் தெளிவாக பதிலளித்தார். அவர் தான் விளக்கிய பிபிடியை இன்றைக்கு நமது வாட்சப் குழுவில் பகிர்ந்துள்ளார். அதை வைத்துக்கொண்டு எவ்வளவு புரிந்துகொள்ளமுடியும் என தெரியவில்லை. கூட்டத்தில் கலந்துகொள்ளாதது பலருக்கும் இழப்பு தான்.
அறுபத்து மூன்று நாயன்மார்களில் அப்பர் என அழைக்கப்படுகிற திருநாவுக்கரசரும் ஒருவர். தன் நாவுக்கு அதாவது பேச்சில் அரசராக இருந்திருக்கிறார் என்பதால், திருநாவுக்கரசு என அழைத்திருக்கிறார்கள். அதே போல தனது பெயருக்கு ஏற்றார் போல இரண்டு மணி நேரம் எங்கும் தங்கு தடையின்றி சரளமாக விளக்கினார். துவக்கத்தில் என்ன டெம்போவில் பேசினாரோ, அதே டெம்போவில் இறுதிவரை அதே உற்சாகத்துடன் பேசினார். எப்படி இவ்வளவு நாள் எப்படி இவரைப் பயன்படுத்தாமல் போனோம் என்று தான் ஆச்சர்யம் இருந்தது.
புதிய உறுப்பினர் முரளி அவர்கள்!
சமீபத்தில் நம்மோடு இணைந்த புதிய உறுப்பினர் முரளி அவர்கள் தன்னை உறுப்பினர்களுக்கு சுய அறிமுகம் செய்துகொண்டார். நமது உறுப்பினர் சாதிக் பாட்சா தான் நமது சொசைட்டியை அறிமுகப்படுத்தினார் என தெரிவித்தார். ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து, ஓய்வுபெற்று, இப்பொழுது ஜி.எஸ்.டி ஆலோசகராக இயங்குகிறார். புழுதிவாக்கத்தில் இருந்து வருகிறார் என்றார். இன்று நடைபெற்ற விவாதங்களில் ஆக்கப்பூர்வமாக பங்களித்தார். ஜி.எஸ்.டி சட்டம் குறித்த நல்ல புரிதலும், நடைமுறை அறிவோடும் இருந்தது அனைவருக்கும் நன்றாக தெரிந்தது. அவரை சொசைட்டிக்கு வருக வருக வரவேற்போம்.
கூட்டம் இனிதே நிறைவு பெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட மற்றவர்களும் கருத்துசொன்னால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
நன்றி.
- GSTPS
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety/
No comments:
Post a Comment