Sunday, December 29, 2024

EPF : சில கேள்விகளும்! பதில்களும்!

 


வருங்கால வைப்பு நிதி திட்டம்: நிறுவனமும் தொழிலாளர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் - அத்தியாயம் 12

 

ஒவ்வொரு இதழும் வெளிவந்த பிறகு, தமிழ்நாட்டின் வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்கள் என்னை போனில் அழைக்கிறார்கள். தங்கள் கேள்விகளை, சந்தேகங்களை அழைக்கிறார்கள்.  நானும் பதிலளித்து வருகிறேன்.   கடந்த மாதம் புதுச்சேரியில் இருந்து  ஒரு மாணவர் வாட்சப் மூலம் தொடர்பு கொண்டார்.  பி.எப். தொடர்பான கட்டுரைகள் தனக்கும் தன்னோடு படிக்கிற சக மாணவர்களுக்கும் நிறைய பயன்படுகிறது என தெரிவித்தார்.

 

இந்த தொடரே வருங்கால வைப்பு நிதி குறித்து பலருக்கும் விழிப்புணர்வு உருவாக்குவதற்காக தான் ஆசிரியர் கட்டுரைகளை  தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.   உங்களுடைய கேள்விகளை எனக்கு வாட்சப்பில் தெரிவியுங்கள் அல்லது போனில் தெரிவியுங்கள்.  உங்கள் கேள்விகளுக்கு அடுத்தடுத்த இதழ்களில் பதில் அளிக்க முயல்கிறேன்.

***

 

சமீபத்தில்  (22/11/2024) பி.எப் அலுவலகம்  ஒரு சுற்றறிக்கையை  பி.எப் கணக்கு வைத்திருக்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் ஒரு அறிவிப்பு கொடுத்திருக்கிறது.    

 

அதன் சாரம்சம் என்னவென்றால்….  தொழிலாளர்கள் EDLI திட்டத்தில்  பலனடைய வேண்டுமென்றால்,  தொழிலாளர்கள் ஒரு நிறுவனத்தில் சேரும் பொழுது, தொழிலாளியினுடைய ஆதாரை அடிப்படையாக வைத்து தான் ஒரு பிரத்யேக எண்ணை உருவாக்குகிறார்கள்.   அதற்கு UAN (Universal Account Number) என பெயர். இந்த எண்ணை உருவாக்கிய பிறகு சம்பந்தப்பட்ட நிறுவனம் சம்பந்தப்பட்ட தொழிலாளிக்கு தெரியப்படுத்தும்.  அப்படி தெரியப்படுத்தவில்லையென்றால்,  அந்த தொழிலாளி கேட்டுப்பெறவேண்டும்.

 

அந்த எண்ணைப் பெற்றுக்கொண்ட பிறகு தொழிலாளிகள் அமைதியாகிவிடுவார்கள். இப்பொழுது பி.எப். கேட்டுக்கொள்வதென்றால், அந்த எண்ணைக் கொண்டு பி.எப் தொழிலாளர்களுக்கென இருக்கும் தளத்திற்கு செல்லவேண்டும்.  அந்த தளத்தின் முகவரி இது தான்.

 

https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/

 


பி.எப் உறுப்பினர் தளத்திற்கு சென்று Activate UAN என இருக்கும் சுட்டியை கிளிக் செய்யவேண்டும்.  அதில் தொழிலாளியினுடைய UAN எண்,  ஆதார் எண்,  ஆதாரில் இருக்கும் பெயர், பிறந்த தேதி,  பி.எப் இணைக்கும் பொழுது எந்த மொபைல்  எண் கொடுக்கப்பட்டதோ அந்த எண் போன்ற அடிப்படை விவரங்களை கொடுத்ததும், Get Authorization Pin என்பதை கிளிக் செய்தால்,  நீங்கள் கொடுத்துள்ள அனைத்து விவரங்களும் சரியென உறுதி செய்த பிறகு, தொழிலாளியின் மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபியை அனுப்பிவைக்கும்.  அதை கொடுக்கும் பொழுது, ஒரு கடவுச்சொல் ஒன்றை சம்பந்தப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பிவைக்கும்.

 

கடவுச்சொல்லைப் பயன்படுத்தி, பி.எப். உறுப்பினருக்கான தளத்தில் உள்ளே  சென்றுவிடலாம்.  முதலில் செய்யவேண்டிய விசயம்.  தளத்தில் தொடர்பு (contact) என இருக்கும் இடத்தை கிளிக் செய்தால், நம்முடைய மொபைல் எண்ணும், மின்னஞ்சல் முகவரியும் இருக்கும்.  அதை சரிப்பார்க்க நம்மை வலியுறுத்தும்.  அங்கு ஆதாரோடு இணைக்கப்பட்ட மொபைல் எண் இருந்தால் சரியானது. ஒருவேளை வேறு ஏதாவது எண் இருந்தால், மாற்றிவிடுங்கள்.  மாற்றுவதற்கு அனுமதிக்கும்.  அதே போல மின்னஞ்சல் முகவரியும் தன்னுடையதாக இருக்கிறதா என சரிப்பார்த்துக்கொள்ளவேண்டும்.  பழையதாக இருந்தால், இப்பொழுது பயன்படுத்தி வரும் மின்னஞ்சலை கொடுக்கவேண்டும்.

 

அடுத்து நாம் செய்ய வேண்டியது,  தொழிலாளி தனது குடும்ப வாரிசுதாரரை நியமிக்கவேண்டும். 

 

வாரிசுதாரர் நியமனம் (E Nomination)

 


பி.எப். (EPF) கணக்கு வைத்திருக்கும் பணியாளரின் பலன்களை, கணக்கு வைத்திருப்பவர் திடீரென மரணம் அடைந்தால், அவர்களைச் சார்ந்தவர்களுக்கு மாற்றுவதற்கு இந்த வாரிசுதாரர் நியமனம் உதவுகிறது.  ஆகையால்,  தொழிலாளியின் துணைவியார்/கணவர்/பிற உறவுகள் குறித்த பெயர், வயது, முகவரி என அடிப்படை விவரங்களையும், புகைப்படத்தையும் பதிவேற்றவேண்டும்.  தளம் கேட்கிற விவரங்களை கொடுத்த பிறகு,  ஆதார் ஓடிபி மூலமாக  E sign யையும் பூர்த்தி செய்யவேண்டும்.

 

இதை எல்லாம் ஏன் செய்ய சொல்லி, பி.எப். வலியுறுத்துகிறது என்பதையும் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம். அதற்கு நாம் EDLI திட்டம் குறித்து அறிந்துகொள்ளவேண்டும்.

 

தொழிலாளர்களுக்கான EDLI (Employees Deposit Linked Insurance Scheme)  திட்டம் என்றால் என்ன? இதில் தொழிலாளிக்கு கிடைக்கும் பலன்கள் என்னென்ன?

 

இந்தத் திட்டம் வருங்கால வைப்பு நிதிச்  சட்டத்தின் (1952) படி 1976ல் அறிமுகப்படுத்தப்பட்ட அருமையான திட்டமாகும்.  பி.எப் திட்டத்தில் இணைந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் இந்த திட்டம் பொருந்தும்.  கட்டவேண்டிய தொகை என்பது, ஒரு தொழிலாளியின் மாதாந்திர அடிப்படைச் சம்பளம், பஞ்சப்படியை கூட்டினால், அதில் 0.50% கணக்கிடவேண்டும்.  இந்தத் தொகையை தொழிலாளர் செலுத்த தேவையில்லை.  தொழிலாளி வேலை செய்யும் நிறுவனமே, பி.எப் மாத நிதியை செலுத்தும் பொழுது இதற்கான நிதியையும் செலுத்தவேண்டும். 

 

இந்தத் திட்டத்தின் படி, பி.எப் எப்படி கணக்கிறது என்றால்….  தொழிலாளியின் சம்பளத்தைக் கொண்டு கணக்கிடுகிறார்கள். ஆகையால் அதற்கு தகுந்தப்படி தான் கணக்கிட்டு தருவார்கள்.

 

இறப்பதற்கு முன்பு தொழிலாளி வேலை செய்த ஓர் ஆண்டு சம்பளத்தைக் (Basic + DA) கணக்கிட்டு, அதை 35ஆல் பெருக்குகிறார்கள்.  கூடுதல் போனசாக ரூ. 1.75 லட்சத்தையும் சேர்த்து தருகிறார்கள்.

 

உதாரணமாக :

 

ஒரு தொழிலாளியின் அடிப்படை சம்பளம் ரூ. 12500 என்றால் 35ல் பெருக்கினால் வரக்கூடிய தொகை  ரூ. 4,37,500. கூடுதல் போனசாக ரூ. 1,75,000 யும் இணைத்தால் வரும் மொத்த தொகை ரூ. 612500.

 

இந்தப் பணத்தை தொழிலாளியின் வாரிசுதாரரான துணைவியார், இன்னும் திருமணம் செய்யாத பெண் பிள்ளைகள், 25 வயது முடிவடையாத ஆண் பிள்ளைகளும் பெறுவார்கள்.  குடும்ப உறுப்பினர்கள் இல்லாத நிலையில், தொழிலாளி வாரிசுதாரராக யாரை நியமித்தாரோ, அவர்கள் இந்தத் தொகையை பெறமுடியும்.

 

இந்தப் பணத்தை பெற 5 IF விண்ணப்பத்தை உரிய விவரங்களுடனும், உரிய ஆவணங்களுடனும் நிறுவனத்தின் ஒப்புதலுடன்  பூர்த்தி செய்து பி.எப். அலுவலகத்தில் ஒப்படைத்தால், வங்கி கணக்கிற்கு வந்து சேரும்.

 

பி.எப் கணக்கு வைத்திருக்கும் ஒரு தொழிலாளி விபத்திலோ, நோய்வாய்ப்பட்டோ, இயற்கையாகவே இறக்கும் பொழுது,  அந்த தொழிலாளியின் வாரிசு தாரருக்கு சரியாக கொடுப்பதற்கு பி.எப். கொடுப்பதற்காக தான் இந்த வேலையை உடனடியாக  செய்ய சொல்லி கோருகிறது. இது அவசியம் என்பதால், தொழிலாளர்கள் இதை உடனடியாக செய்யவேண்டும்.

 

இது தொழிலாளர் சம்பந்தப்பட்டது என்பதால்,  நிறுவனத்தில் செய்து கொடுப்பார்கள், அதில் அவர்கள் கவனம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கமுடியாது. ஆகையால் தொழிலாளி வெளியே இ சேவை மையம், பி.எப் வேலைகளை செய்து தருகிறவர்களிடம் தெரிவித்து, இதை செய்துகொள்ளுங்கள்.

 

தொழிலாளர்களிடமிருந்து பெறப்படும் நிதிக்கு எவ்வளவு சதவிகித வட்டித் தரப்படுகிறது?

 

EPF அமைப்பை நிர்வாகம் செய்யும் மத்திய அறங்காவலர் குழு தான் பி.எப் வட்டி விகிதத்தை ஒவ்வொரு ஆண்டும் மாதாந்திர இறுதி இருப்பு அடிப்படையிலும், வருடாந்திர அடிப்படையிலும் பரிசீலித்து முடிவு செய்கிறார்கள்.  2024 -2025ம் நடப்பு ஆண்டிற்கான வட்டி விகிதம் 8.25% என முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

 

ஒரு பணியாளர் வேலை செய்யாத காலத்தில், பி.எப் இல்லாத நிறுவனத்தில் வேலை செய்யும் பொழுது, தொழிலாளியின் கணக்கில் பணம் செலுத்தப்படவில்லை என்றாலும், தொடர்ந்து வட்டித்தருவார்களா?

 

இந்த சந்தேகம் பணியாளர்களால்  அடிக்கடி கேட்கப்படும் சந்தேகமாக இருக்கிறது.  ஒரு தொழிலாளி வேலை செய்யாத காலத்தில், பி.எப் இல்லாத நிறுவனத்தில் வேலை செய்தாலோ,  மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் தான் வட்டியைக் கணக்கிட்டு தருகிறார்கள். அதற்கு பிறகு நிறுத்திவிடுகிறார்கள். இது சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த நடைமுறை.

 

இதில் பி.எப் நிதிக்கு மட்டும் தான் வட்டி தருகிறார்கள்.   பி.எப். ஓய்வூதிய கணகிற்கு வட்டி ஏதும் தருவதில்லை.  ஆகையால், தொழிலாளர்களுக்கு  ஓய்வூதியம் அவசியம் தேவைப்படுவதால் அந்த நிதிக்கு திட்டச் சான்றிதழுக்கு (Scheme Certificate) விண்ணப்பித்து வாங்கி வைத்துக்கொள்ளலாம்.  பி.எப் நிதியை வேண்டுமென்றால், வாங்கிக்கொள்ளலாம்.

 

ஒரு தொழிலாளி தான் வேலை செய்யும் நிறுவனத்தில் 20/50 தொழிலாளர்களுக்கு மேல் வேலை செய்கிறார்கள்.  தங்களுக்கு பி.எப், இ.எஸ்.ஐ. இல்லாமல் இருக்கிறது.  அதை பெறுவதற்கு என்ன செய்வது என கடந்த மாதம் சந்தேகம் கேட்டார்.

 


பி.எப் விதி என்ன கூறுகிறது என்றால், ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கை துவங்கிய நாளிலிருந்து என்றைக்கு 20 பேர் வேலை செய்கிறார்களோ, அன்றைய நாளில் இருந்து இந்த திட்டத்தில் நிறுவனம் இணைவது கட்டாயமாகும்.  இதை அரசோ, பி.எப் நிறுவனமோ கண்டுபிடித்து நிறுவனத்துக்கு சொல்வதில்லை. நிறுவனமே பி.எப் விதிகளை தெரிந்து கொண்டு இணைதல் வேண்டும்.  இதை நிறுவனம் தெரிந்தும், தெரியாமலும் பதிவு பெறாமல் கடந்து செல்லும் பொழுது,  அடுத்து வரும் சில மாதங்களிலோ, வருடங்களிலோ நிறுவனம் பி.எப்பில் பதிவு செய்யும் பொழுது, கடந்த வந்த காலங்களுக்கும் நிறுவனம் பி.எப் நிதியை தன்னிடம் வேலை செய்த அத்தனை தொழிலாளர்களுக்கும் பி.எப் நிதியை செலுத்தவேண்டிய நெருக்கடிக்குள்ளாகும். பல தொழிலாளர்கள் வேலையை விட்டு போயிருப்பார்கள்.  அந்த தொழிலாளர்களிடம் அப்பொழுது மொத்தமாக பிடித்தம் செய்வது நடைமுறையிலும் முடியாது. அப்படி பெறுவது சட்டத்துக்கு புறம்பானது. ஆகையால், தொழிலாளர்கள் செலுத்தவேண்டிய பணத்தையும் நிறுவனமே செலுத்தவேண்டிய நெருக்கடிக்குள்ளாகும்.  ஆகையால், உரிய காலத்தில் பி.எப் திட்டத்தில் இணைவது நிறுவனத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லது.  ஆகையால் தொழிலாளர்கள் நிறுவனத்தின் உரிமையாளர்களிடம் கேட்கவேண்டும். 


ஒரு நிறுவனத்தில் 20 தொழிலாளர்களுக்கு குறைவாக தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்.  அவர்களும் பி.எப் திட்டத்தில் இணைய முடியுமா என்றால்… பி.எப். திட்டத்தில் இணையலாம் என பி.எப். விதி அனுமதிக்கிறது.  அதற்கு பெயர் தன்னார்வத்துடன் விரும்பி இணையும் திட்டமாகும். பி.எப் சட்ட பிரிவு 1 (4) இன் கீழ் பதிவு செய்யலாம்.  நிறுவனத்தின் முதலாளியும், நிறுவனத்தில் வேலை செய்கிற பெரும்பாலான தொழிலாளர்களும் கையெழுத்திட்டு ஓப்புதல் தரும் பட்சத்தில் இணையலாம்.

 

ஆக 20 தொழிலாளர்கள் இருந்தால் சட்டப்படி இணையவேண்டும்.  அதற்கு குறைவாக இருந்தாலும், இணையலாம் என சட்டம் வழிகாட்டுகிறது.  தொழிலாளர்கள்  தொடர்ச்சியாக கேட்டும் சம்பந்தப்பட்ட நிறுவனம் பி.எப், இ.எஸ்.ஐ பதிவு செய்யவில்லை என்றால், சம்பந்தப்பட்ட தொழிலாளர்களே பி.எப். நிறுவனத்துக்கு “நாங்கள் இத்தனை தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் இவ்வளவு காலமாக வேலை செய்கிறோம்.  எங்களுக்கு பி.எப். தருவதில்லை எனவிளக்கமாக ஒரு கடிதம் தனிநபராகவோ, கூட்டாகவோ தெரியப்படுத்தினால்,   பி.எப் நிறுவனம் சம்பந்தப்பட்ட பகுதிக்கு பொறுப்பான ஒரு அதிகாரியை அனுப்புவார்கள். அந்த அதிகாரி  தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த நிறுவனத்தை பி.எப்பில்  பதிவு செய்யச்சொல்லி வலியுறுத்துவார். இல்லையெனில் அவரே சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு சென்று உரிய ஆவணங்களைப் பெற்று, பி.எப் பதிவு எண்ணைப் பெற்று தந்துவிடுவார். இதே தான் இ.எஸ்.ஐ. பதிவுக்கும் பொருந்தும்.

இன்னும் வளரும்.

வணக்கங்களுடன்,

 

இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, பி.எப், இ.எஸ்.ஐ ஆலோசகர்,

GSTPS உறுப்பினர்

9551291721


குறிப்பு : இந்த கட்டுரை தொழில் உலகம்இதழில் வெளிவந்தது. 


தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety


 

 

 

No comments:

Post a Comment