Sunday, February 23, 2025

GSTPS : 38th Direct Meeting held successfully


கடந்த சனிக்கிழமையன்று (22/02/2025)  நமது நேரடிக்கூட்டம் திரளான உறுப்பினர்களுடன் சிறப்பாக நடைபெற்றது.

 

இனிய தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் துவங்கியது.

 

முதல் தலைப்பான 2017-18,2018-19 & 2019-20 வருடங்களில் பெறப்பட்ட ஆர்டர்களில் வட்டி மற்றும்  தண்டதொகை தள்ளுபடி பலன்களை எப்படி விண்ணப்பித்து பெற வேண்டும் என்பது பற்றி செயலர்.பாலாஜி அவர்கள் விரிவாக பிபிடி வழியாக விளக்கினார்.  தளத்தின் வழியாகவும் விண்ணப்பித்தும் காண்பித்தார்.

 


உறுப்பினர்கள் கேட்ட சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் விரிவாக பதிலளித்தார். இந்த காலக்கட்டத்திற்கான கட்ட வேண்டிய பணத்தை மார்ச் 31. 2025க்குள் பணம் செலுத்திவிடுங்கள்.  அடுத்த மூன்று மாதங்களுக்குள் விண்ணப்பித்துவிடுங்கள் எனவும் கேட்டுக்கொண்டார்.

 

2020 – 21 காலத்திற்கும் இதே போல சமாதான திட்டம் வருமா? என்றால், இப்பொழுது எல்லா ஜி.எஸ்.டி அதிகாரிகளும் இந்த குறிப்பிட்ட காலத்திற்கான ஆர்டர்களை கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.  இந்த காலக்கட்டத்திலும் 2A தான் அமுலில் இருந்தது. ஆகையால், இதற்கும் வரும் மாதங்களில் ஜி.எஸ்.டி கவுன்சில் சமாதான திட்டம் கொண்டு வரலாம் என பேசிக்கொள்கிறார்கள். ஆனால், மத்திய, மாநில அதிகாரிகள் அநேகமாக எல்லா வழிகளிலும் முயன்று கல்லா கட்டிவிடுவார்கள். 

 

இடைவேளையில்  சுவையான இனிப்புடன், கார போண்டாக்களுடன் கெட்டி  சட்னியுடன், ஒரு நல்ல காபியும் வழங்கப்பட்டது. வழக்கறிஞர் சக்கரவர்த்தி திருப்பதி லட்டு கொண்டு வந்து உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

 


அடுத்து GST அப்பீல் குறித்த சட்டம், நடைமுறைகளை  நமது உறுப்பினர்  உறுப்பினர் Dr S. சங்கர் கணேஷ், வழக்கறிஞர்  பிபிடி வழியாக நல்ல தெளிவாகவும், விரிவாகவும் விளக்கினார்.  இடையிடையே உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதிலளித்தார்.     அந்த அரங்கு 6 மணி வரை தான் அனுமதி என்பதால், ஒரு கட்டத்தில் நிறுத்திக்கொண்டார். அடுத்த கூட்டத்தில் விடுபட்டதை பேசுவதாக அறிவித்தார்கள்.

 

பேச்சாளர் குறித்த அறிமுகத்தை தலைவர் செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் கொடுத்த பொழுது, அவர் படித்த படிப்புகள் மிக நீண்ட பட்டியலாக இருந்தது.   ”எந்த தலைப்பு எடுக்கிறீர்கள்?” என தலைப்பு குறித்து கேட்கும் பொழுது,  ”நீங்கள் சொல்லுங்கள். அந்த தலைப்பு எடுக்கிறேன்” என சொல்லியிருக்கிறார்.   இந்த தலைப்பை சொன்ன மூன்று மணி நேரத்தில் இரவு ஒரு மணிவாக்கில் அனுப்பியிருக்கிறார். அதைப் படித்துப் பார்த்த பொழுது, எந்த ஒரு முக்கிய குறிப்பும் விட்டு போகாமலும் இருந்தது என வாழ்த்தி பேசினார்.  அவரைப் போலவே மற்ற உறுப்பினர்களும் உற்சாகத்துடன் பேச முன்வரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.  

 


பேச்சாளர் பேசி முடித்ததும், அவருடைய உரை முதல் உரை என அவர் சொன்னது இன்னும்  ஆச்சர்யம்.  பல உரைகள் ஆற்றிய அனுபவத்துடன் பேசியது போல இருந்தது.

 

ஆக நமது குழுவில் எந்த தலைப்பு என்றாலும், எடுப்பதற்கு ஒரு நல்ல ஆசிரியர் கிடைத்துவிட்டார்.  பேசி முடித்ததும், உறுப்பினர்கள் சிறப்பான பேச்சு என வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்தார்கள்.


கூட்டம் மிகச் சிறப்பாக இருந்தது.  நமது உறுப்பினர்கள் 42 பேர் வரை கலந்துகொண்டார்கள்.   கலந்து கொள்ள இயலாதவர்களுக்கு பெரிய இழப்பு தான்.



நாம் ஒரு பாடத்தை எவ்வளவு ஆழ்ந்து படித்தாலும், 50% தெளிவடைவோம். அதை மற்றவர்களுக்கு விளக்கும் பொழுது 75%. அது குறித்த கேள்வி பதிலாக கலந்துரையாடல் செய்யும் பொழுது 100%  நிறைவடைவோம் என்கிறது நமது தொல்காப்பிய நன்னூல்.

 

ஆகையால்  உறுப்பினர்கள் குறிப்பிட்ட தலைப்புகளில் பேச முன்வாருங்கள். அறிவின் 100% உயரத்தை நாமும்  தொடுவோம்.

 

புதுச்சேரியில் மார்ச் 1ந் தேதி தாங்கள் AIFTP யுடன் இணைந்து நடத்த இருக்கும் மாநாட்டிற்கு (Conference) இருந்து நீலகண்டன் அவர்களும், சங்க பொறுப்பாளர்களும் வந்து SS சாருக்கு சால்வை அணிவித்து, மரியாதை செலுத்தினார்கள்.   கலந்துகொள்ளும்படி உறுப்பினர்களையும் அன்போடு அழைப்புவிடுத்தார்.

 


நமது புதிய உறுப்பினர் திரு. சந்தோஷ் தனது சுய அறிமுகத்தை பகிர்ந்துகொண்டார். திரு. சந்தானம், திரு. கஜேந்திரன் என இரண்டு புதியவர்கள் நமது பேஸ்புக் பக்கத்தைப் பார்த்து கலந்துகொண்டார்கள். நமது சமூக வலைத்தளங்கள் இப்பொழுது நமக்கு பலன் அளிக்க துவங்கியிருக்கின்றன. மகிழ்ச்சி.

 


SS சார் எழுதிய புத்தகங்கள் ஐந்தை அங்கு கொண்டு வந்தார்.  உறுப்பினர்கள் வாங்கிக்கொண்டார்கள்.  மதுரையில் இருந்து இன்னும் இருபது புத்தகங்கள் அனுப்பி வைக்க பூரண செல்வகுமார் கேட்டுக்கொண்டுள்ளார். மகிழ்ச்சி.


- GSTPS 


தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety


No comments:

Post a Comment