நிறுவனத்திற்கான பி.எப் இயக்கும் தளத்தில் ஒரு முக்கிய மாற்றம்
நிறுவனத்திற்கென
இயங்கும் பி.எப். தளத்தில் உள்ளே நுழைவதற்கு, ஒரு அடையாள எண்ணையும் (User ID), அதற்குரிய கடவுச்சொல் ஒன்றையும் (Password) பி.எப்
வழங்கும். அதைப் பயன்படுத்தித் தான் நிறுவனம் ஒவ்வொரு முறையும் உள்ளே நுழைந்து தனக்கு
தேவையான வேலைகளை செய்யமுடியும்.
கடந்த
மாதம் ஆகஸ்டு 18 தேதியில் இருந்து செய்து இருக்கின்ற முக்கிய மாற்றம் என்றவென்றால், இப்பொழுது உள்ளே நுழைவதற்கு, அடையாள எண்ணையும்,
கடவுச்சொல்லையும் நாம் கொடுத்தால், நாம் நிறுவனத்தைப்
பதிவு செய்த பொழுது கொடுத்துள்ள மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி செல்லும். அந்த ஓடிபியை பதிவு செய்த பிறகு தான் இப்பொழுது
உள்ளே செல்ல முடியும் என்ற நிலையை பி.எப் உருவாக்கியிருக்கிறது. இந்த அம்சம் நிறுவனத்தின்
விசயங்களை பாதுகாக்கும் ஒரு அம்சமாக (two factor authentication) செயல்படும் என காரணமாக சொல்கிறது.
இந்த
பாதுகாப்பு அம்சம் ஒன்றும் புதிதல்ல! ஏற்கனவே சமூக வலைத்தளங்களிலும், கூகுளிலும், தொழிலாளர்களுக்காக
இயங்கும் பி.எப். தளத்தில் செயல்படுகிற ஒரு செயல்முறை தான். அவை எல்லாம் பெரும்பாலும் தனிநபர் சார்ந்ததாக இருப்பதால், அவர்களுடைய மொபைல் எண்ணை அவர்களே வைத்திருப்பதால்,
ஏதும் பெரிதாக பிரச்சனையை எதிர்கொள்வதில்லை.
ஆனால்,
நிறுவனத்திற்காக இயங்கும் பி.எப் தளத்தை நிறுவனத்தின் பணியாளர்களும், அந்த நிறுவனத்திற்காக
செயல்படும் என்னைப் போன்ற பி.எப். கன்சல்டண்டுகளும் இயக்கி வருவது வழக்கம். புதிய தொழிலாளர்களை பதிவு செய்வதற்காகவும், அவர்களுடைய
அடிப்படை விவரங்களை இணைப்பதற்காகவும், நீக்கவும், மாதம் மாதம் தொழிலாளர்களுக்கான சம்பள
விவரங்களை கொடுத்து, அதற்குரிய சாலனை தயாரிக்கவும் என ஒரு மாதத்தின் பல சமயங்களில்
உள்ளே நுழைய வேண்டிய தேவை இருக்கிறது.
பதிவு
செய்யப்பட்ட மொபைல் எண் என்பது நிறுவனத்தின் முதலாளியோ/நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பாளருடைய
மொபைல் எண்ணை பதிந்து வைத்திருப்பார்கள்.
நிறுவனத்தின் முதலாளியோ, நிர்வாகத்தின் முக்கிய பொறுப்பாளரோ தொழில் நடவடிக்கையில்
மும்முரமாய் இருப்பார்கள். அவர்களுடைய நெருக்கடியான
சூழலில் அவர்களிடம் எண் வாங்குவது எளிதல்ல!
ஐந்து நிமிடங்களுக்குள் நாம் ஓடிபியை பதியாவிட்டால், மீண்டும் முதலில் இருந்து வரவேண்டும். பொதுவாக அலுவலத்திற்கென்று தனியான மொபைல் எண்கள்
பயன்படுத்துவது மிக அரிதாக இருக்கிறது. அப்படி இருந்தால், மாற்றிக்கொள்ளலாம். ஒருவேளை நிறுவனத்தின் பணியிலிருப்பவருடைய தனிப்பட்ட
எண்ணை கொடுத்தால், அவர் வேலையை விட்டுப் போனால், உடனடியாக மாற்றவேண்டும். இல்லையெனில்,
அதற்குரிய சிக்கலையும் நிறுவனம் எதிர்கொள்ளவேண்டியிருக்கும்.
புதிய பாதுகாப்பு
அம்சம் தற்காலிக நிறுத்தி வைப்பு
இந்த
முறையை உடனே அறிவித்து, உடனே அமுல்படுத்தியதால், பல நிறுவனங்களால் நடைமுறை சிக்கல்களினால்
இந்த மாதம் செலுத்தவேண்டிய பணத்தையும், பிற முக்கிய வேலைகளையும் செய்ய முடியவில்லை. நிறுவனத்தைப் பதிவு செய்த பொழுது, இருந்த மொபைல்
எண், இப்பொழுது சில நிறுவனங்களிடம் கைவசம் இல்லை.
ஆக உள்ளே நுழைய முடியாத சிக்கல் ஆகிவிட்டது.
இப்படி
ஒரு சிக்கல் வரும். அதை சரி செய்வதற்காகவும், சில வழிகளை பி.எப். அறிவித்திருக்கிறது. அதற்கு முன்பாக, நிறுவனங்களின் பணம் செலுத்தும்
சிக்கலை உடனே தீர்க்கும் விதமாக இப்பொழுது இந்த பாதுகாப்பு அம்சத்தை தற்காலிகமாக நிறுத்தி
வைத்திருக்கிறது. இப்பொழுது நாம் பழைய முறையிலேயே
அடையாள எண்ணையும், கடவுச்சொல்லை மட்டும் கொண்டு உள்ளே நுழையமுடியும்.
சிக்கலை சரி செய்வதற்கான
தீர்வு
பதிவு
செய்யப்பட்ட எண் நிறுவனத்தின் கைவசம் இருந்தால், உள்ளே போய் அலுவலக எண் வேறு எண்ணுக்கு
மாற்றவேண்டிய தேவை இருந்தால், மாற்றிக்கொள்ளலாம்.
உள்ளே நிறுவனம் (Establishment) என்ற பகுதிக்குள் சென்றால், தொடர்பு (Contact)
என்ற பகுதி தெரியும். அங்கு நாம் முன்பு பதிவு செய்து வைத்திருந்த மொபைல் எண் தெரியும். அதை மாற்ற, கீழே நமது புதிய மொபைல் எண்ணை இருமுறை
பதிவு செய்தால், பழைய எண்ணுக்கு ஒரு ஓடிபியை உடனே அனுப்பும். அதை கீழே பதிவு செய்தால், பழைய எண்ணுக்கு பதிலாக
புதிய எண்ணை பதிந்துகொள்ளும். இனி புதிய எண்ணுக்கு தான் ஓடிபி வரும்.
பதிவு
செய்யப்பட்ட எண் நிறுவனத்தின் கைவசம் இல்லை என்றால், தொலைந்து போயிருந்தாலோ, தளத்தில்
உள்ளே நுழைவதற்காக பக்கத்தில் கடவுச் சொல்லை மறந்து போனால் (Forgot Password) என்பதை
கிளிக் செய்யவும். ஒரு கடிதம் ஒன்று பிடிஎப்
வடிவத்தில் திறக்கும். அதை நிறுவனத்தின் லெட்டர்
பேடில் (Leter Pad) பிரிண்ட் எடுத்துக்கொள்ளவேண்டும். அதில் நிறுவனத்தின்
அடிப்படை விவரங்களை நிரப்பி, நிறுவனத்தின் புதிய மொபைல் எண்ணையும் அதில் எழுதி, யார் நிறுவனத்தின் முதலாளி/பொறுப்பானவராக பி.எப்.
தளத்தில் தற்பொழுது பதிவு செய்திருக்கிறமோ, அவர்கள் அதில் கையெழுத்திடவேண்டும்.
அந்த
கடித்தத்தை நிறுவனத்தின் கணக்கு வழக்குகளைப் பார்த்து வரும் பி.எப் அலுவலகத்திற்கு
நேரிலோ/தபாலிலோ/மின்னஞ்சல் வழியாகவோ அனுப்பவேண்டும். அவர்கள் அதில் உள்ள அடிப்படை விவரங்கள் சரியாக இருந்து, கையெழுத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில், புதிய கடவுச்சொல்லை, நாம் கோரிய புதிய மொபைல் எண்ணுக்கு
பி.எப். அலுவலகம் விரைவில் அனுப்பி வைக்கும். இந்த நடைமுறை அமுலாவதற்கு சில நாட்களாகிவிடும்
என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
தொழிலாளர்களுக்கான
அடிப்படை சம்பளத்தையும், பஞ்சப்படியையும் தீர்மானிப்பது எது?
சமீபத்தில்
புதிய நிறுவனம் ஒன்று என்னை தொடர்புகொண்டார்கள்.
கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு பி.எப் எண்ணை எடுத்ததாகவும், அந்த மாதங்களுக்கு பி.எப்.
செலுத்தவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்கள்.
அவர்களுடைய தொழிலாளர்களுக்கான சம்பளம் அதிகமாக இருந்தது. ஆனால், அடிப்படை சம்பளமும்,
பஞ்சப்படியும் குறைவாக கணக்கிட்டு பி.எப்பை குறைவாக பிடித்தம் செய்திருந்தார்கள்.
இந்தியாவின்
ஒவ்வொரு மாநிலமும் குறைந்தப்பட்ச சம்பளச் சட்டம் 1948 - படி என்னென்ன வேலைக்கு எவ்வளவு அடிப்படை சம்பளமும்,
பஞ்சப்படியும் தரவேண்டும் என ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை விலைவாசிக்கேற்றப்படி
நிர்ணயித்து அறிவித்து வருகிறார்கள். குறிப்பாக ஒவ்வொரு தொழில் துறையில் உள்ள பணியாளர்களுக்கும்,
தொழிலாளர்களுக்கும் வகுத்து தந்திருக்கிறார்கள்.
அதன்படி
தமிழக சம்பளச் சட்டத்தின் படி தான், நாம் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை கணக்கிடவேண்டும்
என்பது சரியான அணுகுமுறை. குறிப்பாக ஒரு தொழில்நுட்பம் அறியாத (Unskilled Labour) சாதாரண
தொழிலாளிக்கு, பெருநகர சென்னை (2024) நிலவரப்படி, மாதம் ரூ. 11,000 முதல் ரூ.
11,500 க்குள் வகுத்து தந்திருக்கிறார்கள்.
உதாரணமாக
: ஒரு அலுவலக உதவியாளருக்கான ஒரு மாதத்திற்கான அடிப்படை சம்பளம் – ரூ. 5457 + பஞ்சப்படி ரூ. 5734.80. இரண்டையும் சேர்த்தால், ரூ. 11191.80 நிர்ணயித்து
இருக்கிறார்கள்.
அந்த
நிறுவனம் ஒரு அலுவலக உதவியாளருக்கு அடிப்படைச் சம்பளம் ரூ. 4000மும், பஞ்சப்படியாக
ரூ. 4000 என ஆக மாதம் ரூ. 8000 என தவறாக தீர்மானித்திருந்தார்கள்.
இப்படி
கணக்கிட்டு, தொழிலாளியிடம் அவருடைய சம்பளத்தில்
பிடித்தம் செய்து, நிறுவனம் செலுத்தவேண்டிய பி.எப். தொகையையும் உடனடியாக செலுத்திவிடலாம். பி.எப் உடனடியாக ஏதும் கேள்வி எழுப்பாது.
ஆனால்,
குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை நிறுவனங்கள்
செலுத்தும் தொகைக்கு தகுந்தவாறு பி.எப். அலுவலர்களை கொண்டு நிறுவனத்தின் கணக்குகளை
தணிக்கைச் செய்யும் நடைமுறை இருக்கிறது. அப்பொழுது
தணிக்கை நடைபெறும் பொழுது, குறைந்தப் பட்ச சம்பளத்தை கூட குறைவாக பிடித்திருந்ததை கவனித்து,
தொழிலாளர்களுக்கு இத்தனை ஆண்டுகளுக்கும் குறைவாக
செலுத்தியிருக்கிறீர்கள் என நிறுவனம் ரூ. 8000 த்துக்கு பிடித்தம் செய்திருந்தால், ரூ. 11500க்கு செலுத்துங்கள் என எத்தனை ஆண்டுகள்
எத்தனை தொழிலாளர்களுக்கு குறைவாக செலுத்தியிருக்கிறதோ, அத்தனை ஆண்டுகளுக்கும், சேர்த்து
செலுத்தவேண்டும். கடந்த ஆண்டுகளுக்கு செலுத்தும்
பொழுது, தொழிலாளியிடம் அவருக்கான பி.எப் பணத்தை பெறக்கூடாது எனவும் பிஎப். விதி இருக்கிறது.
ஆகையால், மொத்த தொகையையும், நிறுவனம் தான் செலுத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்படும். கூடுதலாக, தாமதமாக செலுத்துவதற்கான வட்டியும், கணிசமான
அபராதமும் இணைந்து செலுத்தவேண்டிய சுமைக்கு நிறுவனம் தள்ளப்படும்.
இந்த
சுமையை தவிர்க்க, எந்த நிறுவனங்கள் எல்லாம் குறைவாக செலுத்துகிறார்களோ உடனே சுதாரித்து,
இப்பொழுது இருந்தாவது குறைந்தப்பட்ச சம்பளச் சட்டப்படி செலுத்த ஆரம்பித்தால் நிறுவனத்தின்
ஆரோக்கியத்திற்கு நல்லது.
தொழிலாளியின் சம்பளம்,
இலாப லட்ட கணக்கில் எழுதப்படும் செலவு கணக்கிற்கு சரியாக பொருந்தவேண்டும்.
ஒரு
நிறுவனம் தங்களுடைய தொழிலாளிகளுக்கு மாதம் மாதம் சம்பளம் தருகிறது. அதை வருடம் முழுவதும் கணக்கிட்டு, தனது இலாப நட்ட கணக்கில் (Profit & Loss
Account) அதைத் தான் கணக்கிட்டு எழுதவேண்டும்.
சில நிறுவனங்கள் செய்யும்
சில பிழைகள்
சில
நிறுவனங்கள் ஒரு தொழிலாளியை இரண்டு மாதம், மூன்று மாதம் என தற்காலிகமாக வைத்திருந்துவிட்டு,
பிறகு சம்பள பதிவேட்டில் பி.எப், இ.எஸ்.ஐ கணக்கிட்டு சம்பளம் தருகிறார்கள். இந்த அணுகுமுறை
முற்றிலும் தவறு. ஒரு தொழிலாளி எப்பொழுது பணியில்
இணைகிறாரோ, அன்றிலிருந்தே இ.எஸ்.ஐ. பி.எப் பிடித்தம் செய்யவேண்டும்.
அதே
போல ஒரு தொழிலாளிக்கு சம்பள பதிவேட்டில் குறிப்பிட்ட சம்பளத்தை கணக்கிட்டு, கூடுதலாக
அவர் விடுமுறை நாட்களில் வேலை செய்ததற்கான சம்பளத்தை, சில நாட்களில் கூடுதலாக சில மணி
நேரங்கள் வேலை செய்ததற்கான சம்பளத்தையும் இணைத்து அவருடைய கணக்கில் செலுத்திவிடுகிறார்கள்.
இப்படி பதிவேட்டில் ஒரு சம்பளம், அவருடைய கணக்கில் ஒரு சம்பளம் என்ற முரண்பாடு வரவேக்கூடாது. எல்லாவற்றையும் பதிவேட்டில் தான் கொண்டு வரவேண்டும்.
உதாரணமாக, ஒரு நிறுவனத்தில் தங்களுடைய தொழிலாளர்களுக்கு தரும் சம்பளம் மாதம்
ஒரு லட்சம் என்றால், 12 மாதங்களுக்கு ரூ. 12 லட்சம் தருகிறது என்றால், அவர்களுடைய இலாப
நட்ட கணக்கிலும் ரூ. 12 லட்சம் தான் கணக்கில் எழுதப்பட்டு இருக்கவேண்டும். கூடுதலாக ரூ. 3 லட்சம் சேர்த்து ரூ. 15 லட்சம் என
கணக்கு எழுதியிருந்தால், பி.எப். அலுவலர் அந்த விடுபட்ட ரூ. 3 லட்சத்துக்கும் பி.எப். பணத்தை
செலுத்த உத்தரவிடுவார். அதாவது மூன்று லட்சம் சம்பளம் கொடுத்திருக்கிறோம். அந்த தொழிலாளிகளுக்கு
பி.எப். கட்டவில்லை என தெரிந்துகொள்வார். அதே போல இ.எஸ்.ஐ. அலுவலரும் தணிக்கை செய்யும்
பொழுது விடுபட்ட தொகைக்கு இ.எஸ்.ஐ செலுத்த உத்தரவிடுவார்.
சில
நிறுவனங்கள் சில தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்காமலேயே சம்பளம் கொடுத்ததாக கணக்கு
எழுதுவார்கள். இதுவும் தவறான அணுகுமுறை. இப்படி
சிலர் செய்வதால், பி.எப் தணிக்கையின் பொழுது, பி.எப் அலுவலர் சம்பள பதிவேட்டின் படி,
நிறுவன வங்கி கணக்குப் புத்தகத்தை வாங்கி, எல்லா தொழிலாளிகளுக்கும் சம்பளம் சரியாக போயிருக்கிறதா
என சரிப்பார்க்கும் நடைமுறையை கொண்டு வந்துவிட்டார்கள். ஆகையால் கவனமாக இருங்கள்.
இன்னும்
வளரும்.
வணக்கங்களுடன்,
இரா. முனியசாமி,
ஜி.எஸ்.டி, பி.எப், இ.எஸ்.ஐ ஆலோசகர்,
GSTPS உறுப்பினர்
9551291721
No comments:
Post a Comment