Monday, November 18, 2024

EPF : நிறுவனத்தை வருங்கால வைப்புநிதி திட்டத்தில் எவ்வாறு பதிவு செய்வது?


ஒரு நிறுவனத்தை பதிவு செய்ய எங்கே அணுகுவது?

 

சில வருடங்களுக்கு முன்பு,  நிறுவனம் எந்த பகுதியில் இருக்கிறதோ, அதற்கு அருகில் உள்ள பி.எப். அலுவலகத்தில்,  பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அதற்கு தேவையான அடிப்படை ஆவணங்களை நேரில் சென்று ஒப்படைக்கும் பொழுது, பி.எப். அலுவலகம் எல்லாவற்றையும் சரிப்பார்த்து, பதிவு எண்ணைத் தரும்.  அதில் சில நடைமுறைப் பிரச்சனைகளும் இருந்தன. சில நாட்கள் தாமதமும் ஆயின.

 

இந்தச் சிக்கலை சரி செய்வதற்கு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் Shram Suvidha (தொழிலாளர் வசதி என அர்த்தம்) என்ற பெயரில் (https://registration.shramsuvidha.gov.in/user/login) தனியாக ஒரு தளத்தை உருவாக்கினார்கள்.  அதில் பி.எப்., இ.எஸ்.ஐ மட்டுமில்லாமல் தொழிலாளர்கள் சம்பந்தமான மற்ற பதிவுகளையும் பதிவதற்கான வசதியை ஒருங்கிணைந்த முறையில் உருவாக்கினார்கள்.

 

இந்தத் தளத்தில் உள்ளே நுழைவதற்கு நிறுவனத்தின் மின்னஞ்சல், மொபைல் எண் கொண்டு பதியவேண்டும்.   அதற்குப் பிறகு ஒரு பதிவெண்ணையும், கடவுச்சொல்லையும் நமது மின்னஞ்சலுக்கு தளம் அனுப்பி வைக்கும். அதைப் பயன்படுத்தி உள்ளே நுழையமுடியும்.

 

நிறுவனத்திற்கான பி.எப். பதிவெண்ணை பதிவு செய்து பெறுவது எப்படி?

 


நிறுவனம் பதிவு செய்ய, நிறுவனத்தின் பான் (PAN) எண், தனிநபர் நிறுவனம் என்றால் தனிநபருடைய பான் எண்,  கூட்டாண்மை (Partnership) மற்றும் மற்ற நிறுவன (Pvt Ltd,) வகைகளாக இருந்தால், நிறுவனத்தின் பான் எண், பதிவு செய்யப்பட்டிருந்தால் அதற்குரிய ஆவணம்,  நிறுவனத்தின் பொறுப்பானவர்/பொறுப்பானவர்களின் பான் எண், ஆதார் எண், அவர்களுடைய அடிப்படை விவரங்கள், தொலைபேசி எண், மின்னஞ்சல் விவரங்கள்,  நிறுவனம் எப்பொழுது துவங்கப்பட்டது?அதற்கான ஆவணம்,  நிறுவனம் நடத்தும் இடம் சொந்தமாக இருந்தால், அதற்குரிய சொத்துவரி ரசீது,  வாடகைக்கு என்றால், அதற்குரிய வாடகை ஒப்பந்தம், வாடகைக்கு இடம் கொடுக்கும் நபரின்  அடிப்படை விவரங்கள், அவருடைய மொபைல் எண்,  தொழிற்சாலை சட்டத்தின் படி பதிவு செய்யப்பட்டிருந்தால் அதற்கான விவரங்கள், இந்திய அளவில் உள்ள நிறுவனம்/வெளிநாட்டு நிறுவனம் என்றால், நிறுவனத்தை நிர்வாகம் செய்கிற நிர்வாகியின் அடிப்படை விவரங்கள் என எல்லா தரவுகளையும் பூர்த்தி செய்யவேண்டும்.   சில அடிப்படை ஆவணங்களை தளத்தில் பதிவேற்றம் (Upload) செய்யவேண்டும்.

 

கூடுதலாக ஒரு தகவல் என்னவென்றால், இந்த தளத்தில் பி.எப்.க்காகவும் தனியாக பதிவு செய்யமுடியும். இ.எஸ்.ஐக்காகவும் தனியாக பதிவு செய்யமுடியும்.  ஒரே நேரத்திலேயே பி.எப்., இ.எஸ்.ஐ. என இரண்டையும் தேர்வு செய்வதன் மூலம் இரண்டையும் ஒரே நேரத்திலும் பதிவு செய்யமுடியும் வசதியை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

 

அடிப்படை விவரங்களை பதிவு செய்து, தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்த பின், இறுதியாக பிரதான பொறுப்பானவரின் ஆதார் எண்ணில் பதிவு செய்த எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும்.  அதைப் பதிவு செய்த பின்,  விண்ணப்பம் முழுமையடையும்.   அந்த தளம் நாம் பதிவு செய்த அனைத்தையும் சரிப் பார்த்த பிறகு, தளத்திலேயே பி.எப். பதிவு எண்ணை சில மணி நேரங்களில் அல்லது அடுத்த நாள்  காண்பிக்கும்.

 

நிறுவனத்திற்காக தரப்படும் பதிவு எண் தான், பி.எப். நிறுவனங்களுக்காக இருக்கும் தளத்தில் உள்ளே நுழைவதற்கான அடையாள எண் (User ID) ஆகும்.  அந்த தளத்தில் கீழே கடவுச்சொல் மறந்து போனால், (Forgot password) என்பதை கிளிக் செய்தால், நிறுவனத்தின் பதிவு எண், மொபைல் எண் போன்ற தகவல்களை பதிந்தால், கடவுச் சொல்லை நிறுவனத்தின் மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கும்.  அதன்வழியாக நாம் உள்ளே நுழைந்துவிடலாம்.

 

டிஜிட்டல் கையெப்ப சான்றிதழ் (Digital Signature Certificate)

 


தொழிலாளர்களின் அடிப்படை விசயங்களான ஆதார், வங்கி விவரம், பான் கார்டு (KYC) குறித்த விசயங்களை சரிப் பார்த்து, டிஜிட்டல் கீ கொண்டு ஒப்புதல் தரவேண்டியது நிர்வாகத்தின் பொறுப்பு.  ஆகையால் ஒரு டிஜிட்டல் கீ மிகவும் அவசியம்.

 

நிர்வாகத்தின் பொறுப்பாக யாரை பிஎப்பை பதிவு செய்யும் பொழுது கொடுத்தோமோ, அவருடைய பான் எண், ஆதார் எண், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண், அவருடைய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், அதற்குரிய கட்டணத்தையும் சேர்த்து பதிந்து தருகிறவர்களிடம் கொடுத்தால், இப்பொழுதெல்லாம் டிஜிட்டல் கீயை பதிவு செய்து அடுத்த நாளே தந்துவிடுகிறார்கள்.

 

டிஜிட்டல் கையெப்ப சான்றிதழை பி.எப். தளத்தில் பதிவு செய்வது எப்படி?

 

டிஜிட்டல் கீயை பி.எப். தளத்தில் பதிவதற்கு.. நமது கணிப்பொறியில் சில அம்சங்களை இணையத்தில் இருந்து தரவிறக்கிகொள்ளவேண்டும்.  பையர்பாக்ஸ் (Firefox) குறிப்பிட்ட வெர்சன், ஜாவா (Java updated version), பி.எப் தளத்தில் DSC Signer Utility என ஒரு மென்பொருள் தருகிறார்கள். இதையெல்லாம் நமது கணிப்பொறியில் சரியாக (Installation) பொருத்திக்கொள்ளவேண்டும்.  இந்த வேலையை எப்படி செய்வது என்பதை இந்த சுட்டியில் உள்ள காணொளியைப் பாருங்கள்.  அவர் சொன்னதை கற்றுக்கொண்டு செய்யலாம். 

https://www.youtube.com/watch?v=4Pd_nbXkBOI

 

கூடுதலாக, டிஜிட்டல் கீ சம்பந்தமாக ஏதேனும் தொழில்நுட்ப உதவி வேண்டுமென்றால், தொழில்நுட்ப உதவி செய்வதாக பி.எப். தளத்தில் அறிவிப்பு செய்திருக்கிறார்கள்.  (நான் இதுவரை தொடர்புகொண்டதில்லை. என்ன சார் அவர்கள் போனை எடுக்கமாட்டேன் என்கிறார்கள் என எனக்கு போன் செய்து கேட்க கூடாது.)

Screen Reader Access – Technical Help – 18001 18005 (Toll free) Timing : 9.15 AM to 5.45 PM

 

பிறகு பி.எப் தளத்தில் உள்ளே நுழைந்ததும், Establishment என்ற தலைப்பின் கீழ் வரும் ஐந்தாவது இடத்தில் இருக்கும் DSC/ESign என்ற இடத்தை கிளிக் செய்யவேண்டும்.   அந்த பகுதியில் நாம் நிர்வாகத் தரப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் பெயரை, டிஜிட்டல் சான்றிதழில் கொடுக்கப்பட்ட பெயரை சரியாக எழுதவேண்டும். அவர் என்ன பொறுப்பு Proprietor/Partner/Managing Director  என்பதை குறிப்பிடவேண்டும். மொபைல் எண் கொடுக்கவேண்டும்.   அதற்கு பிறகு Register DSC என்பதை கிளிக் செய்து, மேலே சொன்னதன் அடிப்படையில் டிஜிட்டல் கீ கொண்டு பதிந்துவிடலாம்.

 

அதற்கு பிறகு, Request letter என்ற பிடிஎப் பைல் ஒன்று பி.எப் தளமே உருவாக்கித்தரும்.  அதை தரவிறக்கி, (Download) கொள்ளவேண்டும்.   அந்த கடிதத்தை நிறுவனத்தின் லெட்டர் பேடில் பிரிண்ட் எடுத்துக்கொள்ளவேண்டும்.  அந்த கடிதத்தில், நிறுவனத்தின் பொறுப்பாளர் தனிநபர் என்றால், அவரே மூன்று முறை (Specimen Signature) கையெழுத்திட்டு, கீழே நிறுவனத்தின் முத்திரையை (For seal) வைத்து, அதிலும் கையெழுத்திட்டு, நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட பி.எப் அலுவலகத்திற்கு அனுப்பவேண்டும்.  கூட்டாண்மை (Partnership firm) நிறுவனமாக இருந்தால், பொறுப்பானவர் மூன்று முறை கையெப்பமிட்டு, முத்திரை வைத்து, இன்னொரு பங்குதாரர் (Partner) கையெழுத்திடவேண்டும்.

 

நிறுவனத்தின் கடிதத்தை பெற்றுக்கொண்டு, அதில் உள்ள விவரங்களை சரிப்பார்த்து பி.எப் அலுவலகம் ஒப்புதல் தந்ததும் பி.எப் தளத்தில் அந்த குறிப்பிட்ட DSC - Signature status பகுதியில் ”Active” எனகாட்டும். அப்படி காட்டினால், முறையாக பதிவு செய்துவிட்டோம் என புரிந்துகொள்ளலாம்.  கடிதம் கிடைக்கப்பெற்று அவர்கள் ஒப்புதல் கொடுக்க அதிகப்பட்சம் ஏழுநாட்கள் வரை ஆகிவிடும். ஒருவேளை நிறுவனம் அனுப்பிய கடிதத்தில் ஏதேனும் பிழைகள் இருந்தால், அவர்கள் ஒப்புதல் கொடுக்கமாட்டார்கள்.  அந்த பிழையை சரி செய்த பிறகே ஒப்புதல் தருவார்கள்.

 

ஆதார் E sign  பதிவை செய்வது எப்படி?

 

முன்பு DSC மூலமே பதிவு செய்வது என்கிற முறை இருந்தது. கடந்த சில வருடங்களில் DSCக்கு பதிலாக ஆதார் மூலமாகவும் பதிந்து ஒப்புதல் தருவது என்கிற முறையை அறிமுகப்படுத்தினார்கள்.  மேலே DSC க்கு பதிவது போலவே அதே பக்கத்தில் பார்த்தால், DSC க்கு கீழே… நிறுவனத்தின் பொறுப்பாளரின் ஆதாரில் உள்ளபடி பெயரை குறிப்பிடவேண்டும். அவருக்கு என்ன பொறுப்பு (Proprietor/Partner/Managing Director) என்பதை குறிப்பிடவேண்டும்.  ஆணா/பெண்ணா என்பதை குறிப்பிடவேண்டும். ஆதாரில் உள்ள பிறந்த தேதி, மாதம், வருடத்தை குறிப்பிடவேண்டும்.   கீழே உள்ள படிநிலைகளை செய்தால் போதுமானது.

 

Step 1: Login to Employer Interface of Unified Portal of EPFO. Link is given below: https://unifiedportal-emp.epfindia.gov.in/epfo/

Step 2: Go to Establishment >> DSC/e-Sign Step

3: Click on e-Sign

Step 4: Enter Virtual ID and basic details of authorized signatory

Step 5: Click on view DSC/e-Sign registration (Top on right hand side) Step 6: Click on “Generate Request Letter”

Step 7: Mail the request letter to the concerned 

இதை செய்த பிறகு, ஆதார் பதிந்து வைத்துள்ள எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும். அதை பதிந்த பிறகு அந்த பதிவு முடிந்துவிடும். பிறகு டிஜிட்டல் கீக்கு செய்வது போலவே, அந்த கடிதத்தை லெட்டர் பேடில் பிரிண்ட் எடுத்து, பி.எப் அலுவலகத்துக்கு அனுப்பினால்,   அவர்களின் ஒப்புதலுக்கு பிறகு, Active என வந்துவிடும்.  இதில்  உள்ள நடைமுறை பிரச்சனை என்னவென்றால், பான் அடிப்படையில் டிஜிட்டல் கீயிலும் பெயர் இருப்பதால், பெயர் பொருந்திப்போகும்.  ஆதார் அடிப்படையில் பதிவு செய்யும் பொழுது, தளத்தில் பதிந்துள்ள நிறுவனத்தின் பொறுப்பாளரின் பெயரும், ஆதாரில் உள்ள பெயரும் இன்சியலோடு சரியாக பொருந்தியாக வேண்டியதாக இருக்கிறது.  ஏதேனும் மாற்றம் இருந்தால், ஆதாரில் பான் கார்டுக்கு ஏற்ற வகையில் மாற்றம் செய்த பிறகு தான் இதை செய்யமுடிகிறது.

 

இப்படி ஆதார் மூலமாக பதிவு செய்வதில் உள்ள நடைமுறை சிக்கல் என்னவென்றால், ஒவ்வொரு பணியாளர் தொடர்பான ஆவணங்களுக்கு ஒப்புதல் தரும்பொழுது,  நிறுவன பொறுப்பாளரிடமிருந்து ஆதார் ஓடிபி வாங்கி பதிய வேண்டிய தேவையாகிவிடும்.  ஆதார் தளத்தை இப்படி பல விசயங்களுக்கும் பயன்படுத்துவதால், சில பல சமயங்களில் ஆதார் தளம் பிசியாகி, ஓடிபி வர தாமதமாகிறது. டிஜிட்டல் கீ இருந்தால் இந்த பிரச்சனைகளை தவிர்த்துக்கொள்ளாம்.

 

நிறுவனத்தின் வங்கி குறித்த விவரம்

 

நிறுவன பதிவுக்கு பிறகு, டிஜிட்டல் கீயையும் பெற்றவுடன் உடனே செய்யவேண்டிய விசயம், தளத்திற்குள் சென்று Form 5A என இருக்கும்.  அதில் நிறுவனத்தை பதிவு செய்த பொழுது  கொடுக்கப்பட்ட நிறுவனத்தின் அடிப்படை விவரங்கள் வரிசையாக இருக்கும்.  அந்த வரிசையில் வங்கி குறித்த விவரங்களான கணக்கு எண், IFSC Code என்பதை பதிவு செய்து, நிறுவனத்தின் காசோலை ஒன்றை ஸ்கேன் செய்து அப்லோட் செய்து, Submit என்பதை கிளிக் செய்தால், நம்முடைய DSC/ஆதார் Esign மூலமாக அதற்கு ஒப்புதல் கொடுக்கவேண்டும்.

 

இன்னும் வளரும்.

வணக்கங்களுடன்,

இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, பி.எப், இ.எஸ்.ஐ ஆலோசகர்,

GSTPS உறுப்பினர்

9551291721

No comments:

Post a Comment