Thursday, April 10, 2025

GSTPS : "Guidance to handle GST Notices"- CA P. Paul Thangam, Coimbatore

நமது GSTPS மூலம் தொடர்ந்து, பொதுவெளியில் இணைய (ஜூம்) வழியிலும், உறுப்பினர்களுக்காக நேரடிக்கூட்டங்களையும் நடத்தி வருகிறோம்.


அதன் தொடர்ச்சியில், இந்த வாரம் 154 வது ஜூம் கூட்டமாக வருகிற சனிக்கிழமையன்று (12/04/2025) காலை 10.30 மணியளவில்  நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.


தலைப்பு :    "Guidance to handle GST Notices


பேச்சாளர் :    திரு. P. Paul Thangam C.A.,

                            தணிக்கையாளர்.

                             கோவை   


வாய்ப்புள்ளவர்கள் கலந்துகொள்ளுங்கள். உங்கள் தொழில்முறை நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.


GSTPS


தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety

Thursday, April 3, 2025

வருங்கால வைப்பு நிதி திட்டம் (EPF) நிறுவனமும், தொழிலாளர்களும் அறிந்துகொள்ள வேண்டிய அடிப்படையான அம்சங்கள் என்னென்ன? - அத்தியாயம் 15

கடந்த இரண்டு மாதங்களில் நிறுவனம் தன் தொழிலாளர்களுக்கு தரும் கருணைத்தொகை (Gratuity) குறித்து சந்தேகம் கேட்டார்கள். அதை கொஞ்சம் பார்த்துவிடலாம்.

 





ஒரு தொழிலாளி ஒரு நிறுவனத்தில் வேலை செய்து விலகும் பொழுது, ஓய்வு பெறும் பொழுது அல்லது  இறக்கும் பொழுது அவருக்கு இந்த கருணைத்தொகை தரப்படுகிறது.

 

துவக்கத்தில் தொழிலாளர்களுக்கு இப்படி கருணைத்தொகை தருவது நிறுவனத்தின் விருப்பமாக இருந்தது.  தொழிலாளிக்கு தரலாம். தராமலும் இருக்கலாம்.   அதில் தொடர்ச்சியாக முரண்பாடுகள் எழுந்ததால்,  அரசு இதற்காக ஒரு சட்டத்தை (Payment of Gratuity Act) 1972ல் வகுத்தார்கள்.  ஆகையால் இப்பொழுது சட்டப்பூர்வமாகவே தரவேண்டும் என உத்தரவிட்டதால், கருணைத்தொகை என்பதற்கு பதிலாக உரிமைத்தொகை என அழைக்கலாம்.

 

இதற்கான தகுதிகள் என்னவென்றால், அந்த நிறுவனம் பத்து பேர், அதற்கு மேலான தொழிலாளர்களை கொண்டிருக்கவேண்டும்.  தொழிலாளி தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்திருக்கவேண்டும். 

 

இதற்கான கணக்கிடும் முறை என்னவென்றால் ….

 

கருணைத்தொகை= வேலை செய்த வருடங்கள் x

                                    (கடைசியாக அவர் பெற்ற சம்பளத்தில் அடிப்படை

                                    சம்பளம் +  பஞ்சப்படி) x

                                    15 (நாட்கள்) x 26 (நான்கு விடுமுறை நாட்களை கழித்து)

 

உதாரணமாக : ஒரு தொழிலாளிக்கு சம்பளம் 50000. அதில் அடிப்படை

சம்பளமும், பஞ்சப்படியும்  30000.   வேலை செய்த காலங்கள் 6 வருடங்கள் 9 மாதங்கள். (ஆறு மாதத்திற்கு மேலாக என்றால், அதை முழுமையாக கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.)  ஆக 7 வருடங்கள். இவருக்கு எவ்வளவு தொகை எனக் கணக்கிடலாம்.

 

கருணைத்தொகை :   7 * 30000 * 15/26 = ரூ. 121154.00

 

இந்த தொகை அதிகப்பட்சம் ரூ. 20 லட்சம் வரைக்கும் தரலாம்.  கூடுதலாக தருவது நிறுவனத்தின் விருப்பம்.

 

கூடுதலாக, மாதாந்திர சம்பளத்தில் பி.எப்., இ.எஸ்.ஐ பிடித்தம் செய்வது போல, கருணைத்தொகை (Grautity) யையும் பிடித்தம் செய்வது சட்டப்படி தவறு.

 

சில நிறுவனங்கள் ஒரு தொழிலாளிக்கு தரப்படுகிற சம்பளம், இதர வகைகளோடு கருணைத்தொகையும் சேர்த்து அதிகப்படியாக (CTC) கணக்கிடுகிறார்கள். அதுவும் சட்டப்படி தவறு.

 

இப்படி கொடுக்கப்படும் தொகைக்கு வருமான வரி (Income Tax) செலுத்தவேண்டுமா என்றால், நிபந்தனைக்குட்பட்டது.  மேலே நாம் கணக்கிட்டது போல ரூ. 1,20,000 தரவேண்டிய கருணைத்தொகை என்றால், அந்த நிறுவனம் ரூ. 2 லட்சம் கொடுத்தால், கூடுதலாக கொடுத்த ரூ. 80000 க்கு மட்டும் வரி பிடித்தம் செய்தால் போதுமானது.

 

 

சில சந்தர்ப்பங்களில் DD யாக பி.எப் நிதியை செலுத்தும் பொழுது கவனமாய் இருங்கள்.

 

பி.எப் உள்ள நிறுவனம் தொடர்ச்சியாக பி.எப் நிதி செலுத்தி வருவார்கள். குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை நிறுவனத்தில் பி.எப் தணிக்கையை மேற்கொள்வார்கள். ஒரு நிறுவனம் ஆறு மாதங்களுக்கு மேல் மாதாந்திர நிதியை செலுத்தாமல் இருந்தாலோ...  ஏன் செலுத்தவில்லை என விவரம் கேட்டு  நிறுவனத்திற்கு 7A நோட்டிஸ் அனுப்புவது வழக்கமான ஒன்று.  அதற்கு பிறகும் நடவடிக்கை எடுக்காமல் இருந்தால், செலுத்தவேண்டிய நிதி சேர்ந்துகொண்டே போகும்.  பல தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.

 

ஆக, பணம் செலுத்தாதற்கு 7A நோட்டிஸ் வந்திருக்கிறது.  இந்த நோட்டிஸ் வந்ததும் செலுத்த வேண்டிய பணத்தைச் செலுத்தினால் போதும் என்கிற மனநிலையோடு நிறுவனம் இருக்கும். அது மட்டும் போதாது.

 

நிறுவனம் செலுத்தவேண்டிய ஆறு மாத நிலுவை மட்டுமில்லாமல்,  வரவு செலவு கணக்கு அறிக்கை, சம்பள, வருகைப் பதிவேடு என எல்லா ஆவணங்களும் கேட்டு வாங்கி, சரிப்பார்த்து, நிறுவனம் சரியாகத்தான் செலுத்தியிருக்கிறார்களா என சரிப்பார்த்த பிறகு தான் அந்த 7A நோட்டிஸ் நிறைவடையும்.  ஒரு மாதத்திலும் முடிவடையும். ஆவணங்கள் கொடுப்பது தாமதமாவது, நிறுவனத்தின் பிரதிநிதிகள் போகும் பொழுது, உரிய அலுவலர்கள் இருக்கையில் இல்லாததது, தேதி தள்ளிப்போட்டுக்கொண்டே போவது என சில சமயங்கள் ஒரு வருடம், இரண்டு வருடங்கள் வரைக்கும் கூட தாமதம் ஆகிவிடும்.

 

ஒரு மாதத்திற்கு 1 லட்சம் சம்பளம். 12 மாதத்திற்கு சம்பளம் தந்ததாக சம்பள பதிவேட்டில் இருந்து… தணிக்கையாளர் கொடுத்த அறிக்கையில் வருடாந்திர மொத்த சம்பளம்14  லட்சம் என சம்பளக் கணக்கு எழுதப்பட்டிருந்தால், இரண்டு லட்சம் ஏன் வித்தியாசம் என விவரத்தை பி.எப்.  கேட்கும்.  ஒரு வேளை புதிதாய் இணைந்த சில தொழிலாளர்களுக்கு நிறுவனம் சம்பளம் கொடுத்து, அவர்களுக்கு பி.எப். நிதியை செலுத்த தவறியிருந்தால், பி.எப். நிதியை செலுத்த உத்தரவிடும்.  ஒருவேளை செலுத்த தவறினால், தாமதமானால் நிறுவனத்திடமிருந்து விவரம் பெற்றுக்கொண்ட அடிப்படையில் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்து செலுத்த வேண்டிய நிதியை நேரடியாக பெற்றுக்கொள்ளும். அதற்கான அதிகாரமும் பி.எப்க்கு உண்டு.

 

சில சந்தர்ப்பங்களில் DD யாக கொடுக்கச் சொல்லி வலியுறுத்துவார்கள்.  நிறுவனமும்  தொடர் விசாரணையில் ஏற்பட்ட களைப்பில், அவசரம் அவசரமாக DDயாக கொடுத்துவிடுவார்கள்.

 

இப்படி வங்கியில் இருந்து போகும் நிதியும், DDயாக கொடுக்கப்படுகிற நிதியும் நிறுவனம் செலுத்தவேண்டிய அந்த சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் கணக்கில் உடனே வரவு வைக்கவேண்டும் அல்லவா! ஆனால் பி.எப். நிர்வாகம் பல சமயங்களில் அப்படி உடனே செய்வதில்லை.

 

சமீபத்தில் ஒரு நிறுவனம் கொரானா காலத்திற்கு முன்பு ஒரு 7A நோட்டிஸ் துவங்கி,  விடுபட்ட சம்பள கணக்கிற்கு செலுத்த வேண்டிய பி.எப். நிதி ஏழு லட்சம் ரூபாய்க்கு DDயாக செலுத்திவிட்டார்கள்.  ஆனால், சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் கணக்கில் வரவு வைக்க சொல்லி, தொடர்ந்து கடிதங்கள் மூலமாக நினைவூட்டியும் அந்த வேலையை முடிக்காமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.  பி.எப் அலுவலகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையும், தினசரி வேலை அழுத்தமும் உண்டு. இதில் பழைய கணக்கு வழக்குகளை முடிப்பதில் உடனடி கவனம் செலுத்துவது இல்லை.

 

ஆகையால்,  நிறுவனங்கள் DD கேட்டால் உடனே எடுத்து கொடுத்துவிடாமல், நிறுவனமே சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு நிறுவனமே அந்தந்த மாதங்களுக்கு சென்று சாலனை உருவாக்கி பணத்தை கட்டிவிடுவது சாலச் சிறந்தது.  இல்லையெனில், பணத்தையும் உடனே செலுத்திவிட்டு, அதை வரவு வைக்க பலமுறை பி.எப். நிறுவனத்திற்கு அலையவும் வேண்டியிருக்கும். கவனமாய் இருங்கள்.

 

ஒரு நிறுவனம் இ.எஸ்.ஐயில் பதிவு செய்திருக்கிறது.   20 தொழிலாளர்களுக்கு மேலாக வேலை செய்கிறார்கள்.  பி.எப். பதிவு செய்யாமலேயே நீடிக்கமுடியுமா?

 

ஒரு நிறுவனத்தில் பத்து தொழிலாளர்கள் வேலை செய்தால், இ.எஸ்.ஐயில் பதிவு செய்யவேண்டும்.   அதே போல 20 தொழிலாளர்கள் என்றைக்கு அந்த நிறுவனத்தில் வேலை செய்கிறார்களோ அன்றைய தேதியில் இருந்து பி.எப். பதிவும் செய்துகொள்ளவேண்டும்.   மருத்துவ தேவைக்காகவும், குறைவான தொகையாகவும் பங்களிப்பு இருப்பதால், இ.எஸ்.ஐயை நிறுவனங்கள் தொடர்ந்து செலுத்துகின்றன. ஆனால், பி.எப் பதிவு செய்தால், நிறுவனம் தங்கள் பங்களிப்பாகவும் 12% செலுத்தவேண்டும் என்பதால் தயங்குகின்றன.   இப்படி தயங்குவது சட்டப்பூர்வ கடமையை தவறுவதாகும். 

 

இ.எஸ்.ஐயும், பி.எப்பும் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்டது என்பதால், இரு துறைகளும் தங்களுக்குள் தகவல் தொடர்புகளை இயல்பாக வைத்துள்ளன. ஒரு நிறுவனம் பி.எப் பதிவு எடுத்தவுடன், பிஎப் நிறுவனம் உடனேயே இ.எஸ்.ஐக்கு தெரிவித்துவிடுகிறது. அதே போல பி.எப். நிறுவனமும் இ.எஸ்.ஐக்கு தெரிவித்துவிடுகிறது.

 

ஆகையால், நிறுவனங்கள் இ.எஸ்.ஐ வைத்திருக்கின்ற நிறுவனங்கள்  பி.எப். பதிவு செய்வதற்கு தகுதி பெற்றுவிட்டால், உடனேயே பிஎப்பிலும் பதிவு செய்வது நிறுவனத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

 

தொழிலாளர்கள் தங்கள் வைப்பு நிதிக்கு 2024 -2025 காலத்திற்கான பிஎப் தரும் வட்டி விகிதம் என்ன?

 

2024 -25 காலத்திற்கான வட்டி விகிதத்தை இப்பொழுது அறிவித்துள்ளார்கள்.   வட்டி விகிதம் 8.25% 

 

தொழிலாளர்கள் இடம் மாறும் பொழுது, ஓய்வு நிதி கணக்கை மாற்றம் செய்வது எளிதாக்கப்படுகிறது.

 


தொழிலாளிகள் எந்த பகுதியில் வேலை செய்தார்களோ, அந்த பகுதியில் உள்ள பிஎப். அலுவலகம் தான் பி.எப்.  கணக்குகளை வைத்திருக்கும். பராமரிக்கும்.  ஒருவேளை ஓய்வூதியர் தன்னுடைய சொந்த காரணத்தால், வேறு மாவட்டம், வேறு மாநிலம் செல்லும் பொழுது, அவருடைய கணக்கை மாற்றுவதற்காக அலையவேண்டியிருந்தது.  இப்பொழுது இந்தியா முழுவதும் ஓய்வூதியர்களின் கணக்கை மையப்படுத்துவதற்கான(Centralized)  வேலைகளை துவங்கியுள்ளார்.  இந்த வேலை முற்றுபெறும் பொழுது,  ஓய்வூதியர்கள் தங்கள் கணக்குகளை மாற்றுவதற்காக அலைய தேவையில்லை என்பது இதில் முக்கியமானது. இது ஒரு நல்ல வரவேற்கத்தக்க மாற்றம்.

 

நிறுவனம் பி.எப். நிதியை தாமதமாக செலுத்தினால் விதிக்கும் அபராதத்தில் செய்த மாற்றம் என்ன?

 


நிறுவனம் ஒவ்வொரு மாதமும் தங்கள் செலுத்த வேண்டிய நிதியை, மாதம் முடிந்து 15 தேதிக்குள் செலுத்தவேண்டும். இல்லையென்றால், அதற்காக வட்டியும், அபராதமும் விதிப்பார்கள்.

 

அதற்கான அபராதம் என்பது 14B விதிப்படி முதல் இரண்டு மாதங்களுக்கு ஆண்டு வட்டி 5%யும், மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு 10%யும்,  நான்கு முதல் ஆறு மாதங்களுக்கு 15%யும்,  6 மாதங்களுக்கு மேலே 25% எனவும் இருந்தது. இப்பொழுது அந்த வட்டி விகிதத்தை மாதம் 1% என்ற அடிப்படையில் ஆண்டுக்கு 12% என மாற்றப்பட்டுள்ளது.  முந்தைய அபராத விகிதத்தை விட, ஆண்டுகள் கூடும் பொழுது  கட்டவேண்டிய அபராதம் அதிகமாகும். ஆகையால் நிறுவனங்கள் உரிய தேதியில் பி.எப். நிதியை செலுத்திவிடுவது நல்லது.

 

இன்னும் வளரும்.

வணக்கங்களுடன்,

 

இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, பி.எப், இ.எஸ்.ஐ ஆலோசகர்,

GSTPS உறுப்பினர்

9551291721


குறிப்பு : இந்த கட்டுரை தொழில் உலகம் இதழில் மார்ச் 2025  வெளிவந்தது.

 

Wednesday, April 2, 2025

GSTPS : 39வது நேரடிக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது!


பயனுள்ள தலைப்புகளின் நமது நேரடிக் கூட்டம் இனிதே நடைபெற்றது!வரவேற்புரைக்கு பின் நமது துணைத்தலைவர் திரு பாலாஜி அருணாசலம் அவர்கள் ”வங்கி கணக்கு முடக்கம் சொத்துக்கள் முடக்கம் பற்றி ஒவ்வொரு பிரிவின் படி விளக்கமளித்தார்! எந்த காலங்களில் எப்படிபட்ட காரணங்களுக்காக, எந்த விதமான முடக்கங்கள் நடக்கும் என்பதை விளக்கமாக எடுத்துரைத்தார்! பின்பு இது போன்ற சூழ்நிலைகளிலிருந்து எப்படி விடுவித்து கொள்வது என்பதனையும் விளக்கினார்! வரி நிலுவை காலங்கடந்து நின்றால் கைது நடவடிக்கையும் உண்டு என்பதனையும் அதற்கான அளவுகோலையும் விவரித்தார்!


பின்பு நடைபெற்ற. உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் பதில் கூறினார்! இடையே தலைவர் திரு S.செந்தமிழ் செல்வன் தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்! திரு வில்லியப்பன்  தன் அனுபவதையும் விளக்கினார்.


மாலை 4.30 க்கு இடை வேளையில் தேங்காய் Ball, இட்லிஸ்வீட் மற்றும் சூடான சமோசாவுடன்  காபியுடன் வழங்கப்பட்டது! 


இரண்டாம் நிகழ்வாக செயலாளர் திரு S.பாலாஜி அவர்கள் GST போர்ட்டலில் உள்ள Dashboard சேவைகள் பற்றி போர்ட்டலை திறந்து ஒரு பிராக்ட்டிக்கலாக விளக்கம் அளித்தார். இடையிடையே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்! அடிக்கடி நாம் போர்டலை பார்த்தாலும்  பல தெரியாத தகவல்களை அறிய முடிந்தது.

போர்ட்டலில் ஒரு முக்கியமான சேவையாக வரி கட்டுபவர்கள் வரி நிலுவை தொகையை தவணை முறையில் கட்ட கமிஷனருக்கு கோரிக்கை வைக்கலாம் என்றும் வங்கி கணக்கு முடக்கத்தை இதன் மூலம் நிவர்த்தி செய்யலாம் எனவும் கூறினார்!



இறுதியாக. பொருளாளர் திரு S.செல்வராஜ் அவர்களின் நன்றி நவிலலுடன் கூட்டம் இனிதே முடிவடைந்தது!


- GSTPS 


தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

Sunday, March 16, 2025

GSTPS : Start up & Its Benefits - Mr. Venkataramanan CA, PPT


”ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் அதன் பலன்களும்”
  என்ற  தலைப்பில் தணிக்கையாளர் வெங்கடரமணன் அவர்கள் பேசிய ஜூம் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.   GSTPS உறுப்பினர்களோடு, பிற மாவட்டங்களில் இருந்தும் கலந்துகொண்டார்கள்.


ஸ்டார்ப் அப் நிறுவனம் என்பது வழக்கமான தொழில் என்பது இல்லை.   தொழில்நுட்பத்துடன் இணைந்து புதுமைகளை உருவாக்குவது


உதாரணமாக, ஸ்விக்கியை எடுத்துக்கொள்ளலாம். உணவு டெலிவரி என்று மட்டும் இல்லை.   உணவகங்களை இணைத்து, உணவுகளை பட்டியலிட்டு, ஆப் (App) மூலம் இணைத்து,  எவ்வளவு கட்டணம் என்பதை முறைப்படுத்தி, நுகர்வோர்களுக்கு யார் கொண்டு போய் சேர்ப்பது என்பது வரை அமுல்படுத்தியது. இதைத் துவங்கும் பொழுது ஸ்டார்ட் அப்  எனலாம்.


முன்பெல்லாம் ஒரு புதிய தொழிலை வளர்ந்து வரும் தொழில் நுட்பத்துடன் முன்னெடுப்பவர்கள்  முதலீட்டை ஈர்ப்பது, தொழிலை நடத்துவது என்பது சவாலாக இருந்தது.


கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக முட்டி மோதி, முதலீட்டை பெற்று பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கின்றன. அதனால், மத்திய, மாநில அரசுகள் இதற்கான பலனை கண்டதும் இதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்கியிருக்கிறார்கள்.  முதலீட்டாளர்களை இணைப்பதில் கவனம் செலுத்துகின்றன. வருமான வரியில் மூன்று ஆண்டுகள் சலுகைகளை வழங்குகின்றன.  தொழில் துவங்கி பத்து ஆண்டுகள் ஸ்டார்ட் அப் அல்லது 100 கோடி வரைக்கும் என ஒரு தொழில் வளரும் காலம் வரைக்கும், கை கொடுத்து தூக்கிவிடுகின்றன. 


இந்தியாவில் 2016ல் 450 அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இருந்த நிலையில், 2023ல் ஒரு லட்சத்தை தாண்டுகின்றன.    இப்போதைக்கு பெங்களூர், மும்பை, தில்லி முதன்மை இடத்தில் இருக்கின்றன.


தமிழக அரசு தொழிலில் முதன்மை மாநிலங்களில் ஒன்று என்பதால்… 2020ல் இதற்காக உதவும் திட்டத்தை துவங்கி, 2000 நிறுவனங்கள் என துவங்கி 2024ல் 9000 நிறுவனங்களை உற்சாகப்படுத்தியிருக்கின்றன. 2028ல் 15000 என இலக்கு என்பதை நோக்கி நகர்கிறது. இதில் சென்னை 53% என்றால், பிற மாவட்டங்கள் 47% என்பதும் கவனிக்கத்தக்கது.


ஆக வளர்ந்து வரும் ஸ்டார்ப் நிறுவனம் என்பதற்கு விளக்கம் என்ன? எப்படி துவங்குவது? அதற்குரிய நிபந்தனைகள் என்ன? மத்திய, மாநில அரசுகள் தருகின்றன சலுகைகள் என்ன?என்பதை நேற்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தெளிவாக விளக்கினார். விளக்கமாக பார்க்க அவருடைய பிபிடி-யை கீழேப் பார்க்கவும்.


ஆக, ஒரு வரி ஆலோசகராக இருக்கும் நாம், தொழில் துவங்க நம்மைத் தான் துவக்கத்தில் அணுகுவார்கள்.   அது ஸ்டார்ப் அப் வகையில் வரும் என கணித்தால், துவக்கத்திலேயே அதற்குரிய வேலைகளையும் செய்தால், தொழில் முனைவோர் நல்ல பலனடைவார்கள். அதன் மூலம் நமக்கும் நல்ல பலன் கிடைக்கும்.


இந்த தலைப்பை ஏற்பாடு செய்த நிர்வாகிகளுக்கு நன்றி. தணிக்கையாளர் வெங்கடரமணன் அவர்களுக்கும் நன்றி.


- GSTPS




























தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856


Friday, March 14, 2025

வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சமீபத்தில் செய்த மாற்றங்கள் என்னென்ன? - R. Muniasamy, ESI, PF, GST Consultant


வருங்கால வைப்பு நிதி திட்டம் (EPF)   நிறுவனமும், தொழிலாளர்களும் அறிந்துகொள்ள வேண்டிய அடிப்படையான அம்சங்கள் என்னென்ன?  - அத்தியாயம் 14

  

வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சமீபத்தில் செய்த மாற்றங்கள் என்னென்ன?

 

ஊழியர் வேலை  செய்த விவரத்தில் செய்யப்பட்ட (De Link) மாற்றம்

 

ஒரு ஊழியர் ஒரு நிறுவனத்தில் பணியில் இணைந்து வேலை செய்வார். அதனால் நிர்வாகம் அன்றைக்கே அவரை பி.எப் திட்டத்தில் இணைக்கும்.  ஆனால் அன்று மதியமோ மாலையோ வேலை பிடிக்காமலோ, வேறு காரணங்களிலோ அந்த ஊழியர் பணியிலிருந்து விலகிவிடுவார்.  சிலர் ஒரு மாதம் வேலை செய்த பிறகு கூட வேலையில் இருந்து வேறு வேறு காரணங்களினால் வேலையில் இருந்து நின்றுவிடுவார்கள்.

 


பி.எப் விதிகளின் படி, அந்த நிறுவனம் அந்த ஊழியர் வேலை செய்த ஒரு நாளுக்கான அல்லது ஒரு மாதத்திற்கான பி.எப் நிதியை செலுத்துவது என்பது தான் சரியானது. ஆனால், ஒரு நாளைக்கு எப்படி செலுத்துவது? ஊழியர் தான் வேலையை விட்டு போய்விட்டாரே, ஒரு மாதத்திற்கான  பி.எப் நிதியை ஏன் செலுத்தவேண்டும்  என அதன் பின்விளைவுகளை அறியாமல் சம்பந்த ஊழியர் கணக்கில் நிதியைச் செலுத்தாமல் தவிர்த்துவிடுகிறார்கள்.

 

இப்படி நிதியை செலுத்தாமல் இருப்பது என்பது ஊழியரின் பி.எப் கணக்கு இதனால் சிரமத்துக்குள்ளாகும்.   பிறிதொரு சமயத்தில் பி.எப் அலுவலகத்தை தனது கணக்கை முடித்து பணம் பெற அணுகும் பொழுது, ஒரு நிறுவனத்தில் இணைக்கப்பட்டு, பிறகு எந்தவித நிதியையும் செலுத்தாமல் இருப்பது ஏன்? என பி.எப் அந்த ஊழியரை கேள்விகேட்கும்.  நிறுவனத்தை கேட்கச் சொல்லி வலியுறுத்தும்.  நடைமுறையில்  அந்த ஊழியரோ அந்த நிறுவனத்தை அணுகி கேட்க முடியாத நிலைமையில் தான் இருப்பார்.   ஆகையால் அவருடைய கணக்கை முடித்து பணம் பெறுவது என்பது சிக்கலாகி நிற்கும்.

இந்த பிரச்சனைப் பல ஊழியர்களுக்கு பரவலாக இருப்பதால், இதற்கு இப்பொழுது ஒரு தீர்வு கொண்டு வந்திருந்திருக்கிறார்கள்.   இப்படி ஒரு நிறுவனத்தில் சேர்ந்து எந்த நிதியும் பி.எப் கணக்கில் செலுத்தப்படவில்லையென்றால், பி.எப். பணியாளருக்கான தளத்தில் தொழிலாளர்  வேலை செய்த வரலாறு (Service History) வரிசையாக காட்டும். ஒவ்வொரு நிறுவனத்திற்கும் நேராக (De Link) இந்த வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.  பணியாளர் பி.எப். பாஸ் புத்தகத்தை ஒரு முறை சரிபார்த்து கிளிக் செய்தால் போதுமானது.  அந்த கணக்கை அவருடடைய கணக்கில் இருந்து நீக்கிவிடலாம்.  ஒருவேளை தவறுதலாக நீக்கிவிடுவோமோ என்ற தயக்கம் வேண்டாம்.  அந்த குறிப்பிட்ட நிறுவனத்திடமிருந்து பணம் பணியாளரின் கணக்கிற்கு வந்து இருந்தால், இந்த (De Link) சுட்டி வேலை செய்யாது என சொல்லிவிட்டார்கள்.   ஆகையால் இதன் மூலம் பல ஊழியர்கள் நிச்சயம் பலனடைவார்கள்.

 


நிறுவனத்தின் தளத்திலும் இப்பொழுது இணை உறுதி மொழி படிவம் (Joint Declaration)

 

ஊழியர்களின் தனிப்பட்ட விவரங்கள், வேலை செய்த விவரங்கள் பி.எப். தளத்தில் நாம் பணியும் இணையும் கொடுத்த விவரங்கள் இருக்கு.   அதற்கு பிறகு பல்வேறு  காரணங்களுக்காக தனிப்பட்ட விவரங்களை, வேலை செய்த விவரங்களை ஆதாரில், வங்கி புத்தகத்தில், பான் கார்டில் சில மாற்றங்களை செய்கிறார்கள்.

 

பி.எப் கணக்கிலிருந்து நாம் பணம் பெற விண்ணபிக்கும் பொழுது, பி.எப். நாம் கொடுத்த விவரங்களும், இப்போதைய விவரங்களும் பொருத்தமாக இருக்கவேண்டும்.  அப்படி இல்லாத பொழுது,   இணை மொழி உறுதிமொழி பத்திரத்தை அறிமுகப்படுத்தினார்கள்.   அதில் ஊழியரும், நிறுவனத்தின் பொறுப்பாளரும்  கையெழுத்திட்டு உரிய ஆவணங்களோடு விண்ணப்பிக்கும் பொழுது,  மாற்றங்களை செய்துவந்தார்கள்.

 

இதனால், ஊழியர்கள் பி.எப். அலுவலகத்திற்கு பலர் செல்வதால், எப்பொழுதும் ஒரு நீண்ட வரிசை காத்திருக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆகையால், இந்த சிரமத்தைப் போக்க,   ஊழியருக்கென இருக்கும் பி.எப் தளத்தில் திருத்தம் செய்வதற்கான இணை உறுதி மொழிப் பத்திரம் பதிவு செய்வதற்கான வசதியை கொண்டு வந்தார்கள்.  இது ஒரு நல்ல முன்னேற்றம்.

 

ஆனால், அதிலும் சில ஊழியர்களின் ஆதாரில் உள்ள பெயர் மற்றும் ஏதேனும் மாற்றம் இருந்தால், ஊழியர்களுக்கென இயங்கு தளத்தில் உள்ளேயே நுழைய முடியாதபடியும் சிக்கல் எழுகிறது.  ஆகையால் அதையும் சரி செய்வதற்காக ஜனவரி 16ந் தேதியன்று  இணை உறுதிமொழிப் பத்திரம் (Joint Declaration SOP Version) 3.0 என  ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.  (இணையத்தில் தேடினால் இந்த பிடிஎப் பைலை எளிதாக எடுத்துவிடலாம்)

 

இது குறித்து கடந்த பிப்ரவரி 2025 இதழில் எழுதியிருந்தோம்.   இப்பொழுது அதை எளிமையாக்கும் விதமாக, நிறுவனத்திற்காக இயங்கும் பி.எப். தளத்திலும் இணை உறுதி மொழிப் பத்திரத்தை பதிவு செய்யும் ஒரு வசதியை கொண்டு வந்துள்ளார்கள்.  ஆகையால் ஊழியர்கள் இந்த வசதியை பயன்படுத்திக்கொண்டு உள்ளே நுழையை முடியாத சிக்கலை சரி செய்துகொள்ளமுடியும்.

 

பணியாளரின் கணக்குகளை எளிதாக மாற்ற புதிய வசதி

 

ஒரு ஊழியர் ஒரு நிறுவனத்தில் இருந்து இன்னொரு நிறுவனம் மாறும் பொழுது, இரண்டு கணக்குகளுக்கும் ஒரே அடையாள எண் (UAN – Universal Account No.)  இருந்தாலும் கூட, ஊழியர் தங்களுக்கென இயங்கும் பி.எப் தளத்தில் போய் பழைய கணக்குகளை கடைசியாய் வேலை செய்த கணக்கிற்கு மாற்றம் செய்ய கோர வேண்டும்.    அப்படி மாறும் பட்சத்தில் தான் முந்தைய பி.எப் கணக்கிலிருந்து புதிய கணக்கிற்கு பி.எப். நிதி மாற்றலாகும்.  இப்படி ஊழியர் மாற்றம் செய்யாமலேயே தானாகவே பி.எப் நிர்வாகம் மாற்றிவிடும் என ஒரு அறிவிப்பு வந்தது.   இதில் ஒரு சிக்கல் என்னவென்றால்,  இரண்டு கணக்கிலும் ஊழியர் குறித்த தனிப்பட்ட விவரங்கள் எல்லாமும் பொருந்தியிருக்கவேண்டும் என்பது முக்கியமானது.  ஏதாவது ஒரு விவரம் மாறியிருந்தாலும், பி.எப் நிறுவனம் கணக்கை மாற்றாமல் நிறுத்தி வைத்துவிடும்.

 

இதற்காக பழைய கணக்கில் இருந்து, புதிய கணக்கிற்கு   மாறுவதற்காக விண்ணபிக்கும் பொழுது, பழைய நிறுவனத்தின் ஒப்புதலுக்கு (Approval) அனுப்புவதா?  புதிய நிறுவனத்தின் ஒப்புதலுக்கு அனுப்புவதா? என தளம் கேட்கும்.  ஊழியருக்கு எந்த நிறுவனம் உடனடியாக ஒப்புதல் தருமோ அந்த நிறுவனத்தை தேர்வு செய்வது நடைமுறையில் வழக்கமாக இருந்தது.   இப்படி செய்யும் பொழுது, பழைய நிறுவனமோ, இப்பொழுது வேலை செய்யும் புதிய நிறுவனமோ அதற்கு ஒப்புதல் கொடுக்கவேண்டும்.   அப்படி ஒப்புதல் கொடுக்காமல் இழுத்தடிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஊழியருக்கு பி.எப் நிதியை பெறுவதில் தாமதம் ஏற்பட்டது.

 

இந்த சிக்கலை இப்பொழுது சரி செய்யும் பொருட்டு,  பழைய நிறுவனத்திற்கோ, புதிய நிறுவனத்திற்கோ ஒப்புதலுக்கு செல்லாமல், நேரடியாக சம்பந்தப்பட்ட பி.எப் அலுவலகத்திற்கு ஒப்புதலுக்கு செல்லும்படியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   ஆனாலும் இதிலும் சில நிபந்தனைகள் இருக்கின்றன. 01/10/2017 க்கு பிந்தைய காலத்தில் ஆதாரோடு இணைக்கப்பட்ட ஊழியர்களின் அடையாள எண்களுக்கு (UAN) மட்டுமே இது சாத்தியம் என அறிவித்திருக்கிறார்கள்.

 

ஆகையால் ஏற்கனவே இப்படி பழைய கணக்கிலிருந்து இருந்து புதிய கணக்கிற்கு மாற்றுவதற்கு விண்ணப்பித்து இருந்த பணியாளர்கள், அந்த விண்ணப்பம் இன்னும் ஒப்புதல் கொடுக்காமல் இருக்கும் காத்திருக்கும் பட்சத்தில், அதை ரத்து செய்துவிட்டு, புதிதாக விண்ணப்பியுங்கள்.  அது நேரடியாக பி.எப். நிர்வாகத்திற்கு செல்லும். ஒப்புதலும் விரைவில் கிடைத்துவிடும்.  இதுவும் நல்ல முன்னேற்றம்.

 

பி.எப். லிருந்து ஓய்வு நிதி வாங்கும் ஒரு நபர்,  புதிய நிறுவனத்தில் வேலையில் இணையும் பொழுது, அவருக்கான ஓய்வு நிதி பங்களிப்பை மீண்டும் செலுத்தமுடியுமா?

 

முடியாது.   ஒருவர் ஓய்வு நிதி வாங்கத் துவங்கிவிட்டால், அவருக்கு மீண்டும் ஓய்வு நிதி கணக்கில் பங்களிப்பை செலுத்தக்கூடாது.  அதற்கு பதிலாக பி.எப் நிதி கணக்கிலேயே மொத்த பங்களிப்பையும் செலுத்தவேண்டும். சில நிறுவனங்கள் ஊழியருடைய வயதை கவனிக்காமலும், இந்த விசயம் தெரியாமலும் ஓய்வு நிதி கணக்கில் நிதியை செலுத்திவிடுகிறார்கள்.  

 

சம்பந்தப்பட்ட ஊழியர் மீண்டும் அந்த நிதியை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் பொழுது, சிரமத்துக்குள்ளாவார்.  அப்பொழுது ஓய்வுநிதியில் செலுத்தப்பட்ட நிதியை மீண்டும் பி.எப். கணக்கிற்கு மாற்றுவதற்கான செயல்முறைகளுக்கு விண்ணப்பித்து தான் பெறமுடியும். இதனால் நிதியை பெறுவதற்கு தாமதம் ஏற்படும்.  ஆகையால், ஓய்வு நிதி வாங்குபவர்களும், நிறுவனங்களும் கவனமாக இருக்கவேண்டும்.

 

ஒரு நிறுவனத்தின் முதலாளி வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் இணைய முடியுமா?

 

பி.எப். சட்டம் என்பது ஊழியர்களின் வருங்காலத்திற்கான நலன்களுக்காக உருவாக்கப்பட்டது.    ஆகையால், முதலாளி/முதலாளிகளை இந்த திட்டத்தில் இணைப்பது தவறு என பி.எப். விதிகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆகையால் இந்த செய்தி தெரியாத பல நிறுவனங்களில் முதலாளியையும் இந்த திட்டத்தில் இணைத்து வைத்திருக்கிறார்கள். ஆகையால் தவறாக திட்டத்தில் இணைத்தவர்களை உடனே அவர்களுடைய பங்களிப்பு செலுத்துவதை நிறுத்துவது நல்லது.

 

பி.எப் - ஓய்வு ஊதிய நிதி நியமிக்கப்பட்ட பிறகு ஏதேனும் மாற்றம் செய்ய வாய்ப்பு இருக்கிறதா?

                                                                   

ஒரு ஊழியர் 58 வயதுக்கு பிறகு, அவருடைய பணிக்காலத்தில் குறைந்தப்பட்சம் 10 ஆண்டுகள் பங்களிப்பு செய்திருக்கவேண்டும்.  அப்பொழுது தான் அவருக்கு ஓய்வு நிதி கணக்கிட்டு தரப்படும்.  ஒரு ஊழியர் தான் விரும்பினால் (மேலே சொன்ன பத்து ஆண்டுகள் நிபந்தனை)  50 வயதுக்கு பிறகு குறைக்கப்பட்ட ஓய்வு நிதியை பெறமுடியும்.  ஓய்வு நிதி குறைவாக வருகிறது. ஆகையால், 58 வயதுக்கு பிறகு வாங்கிக்கொள்கிறேன் என மாற்றிக்கொள்ளவும் வாய்ப்பில்லை.  ஒரு மத்திய அரசு ஓய்வு பெற்ற ஊழியருடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, தான் ஓய்வு பெற்ற பொழுது,  என்னுடைய சம்பளத்தில் பாதியை ஓய்வு நிதியாக பெற்றிருக்க முடியும். அதில் 50%  போதும் என மீதி 50%க்கு அவர்களிடமே கொடுத்துவிட்டேன்.  அதற்கு ஒரு தொகையை ஈடாக தந்தார்கள். அதை வாங்கி கடனை அடைத்துவிட்டேன் என்றார்.  இப்படி எனக்கு பாதி ஓய்வு நிதி போதும் என்றெல்லாம் பி.எப்பில் சொல்வதற்கு வாய்ப்பில்லை.

 

ஒரு ஊழியர் தன்னுடைய பி.எப் கணக்கில் கூடுதலாக பணம் செலுத்தமுடியுமா?

ஒப்பீட்டளவில் பொதுவாக வங்கி வட்டியை விட கூடுதலாக பி.எப் நிர்வாகம் கூடுதலாக வட்டியைத் தருகிறது. ஆகையால், கூடுதலாக சேமிக்கவேண்டும் என நினைப்பவர்கள் வங்கியில் வைப்பு நிதியாக வைப்பதை விட, தன்னுடைய பி.எப் கணக்கில் செலுத்தலாம் என செலுத்த துவங்கினார்கள்.   பி.எப் கணக்கில் செலுத்தும் கணக்கில் சில நிபந்தனைகளுடன் வருமான வரியில் இருந்து விலக்கும் இருந்தது. ஆகையால், சிலர் கோடிக்கணக்கில் செலுத்த துவங்கினார்கள்.  பிறகு பி.எப் நிர்வாகம் அதனை முறைப்படுத்த 2021ல் சில அறிவிப்புகளை தந்தது.   ஒரு வருடத்தில் ரூ. 2.5 லட்சம் வரை ஊழியர் பங்களிப்புகளுக்கு கிடைக்கும் வட்டிக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. கூடுதலாக பெறப்படும் வட்டிக்கு TDS பிடித்தம் செய்ய உத்தரவிட்டது.

 

இன்னும் வளரும்.

வணக்கங்களுடன்,

 

இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, பி.எப், இ.எஸ்.ஐ ஆலோசகர்,

GSTPS உறுப்பினர்

9551291721


குறிப்பு : தொழில் உலகம் மார்ச் 2025 இதழில் இந்த கட்டுரை வெளிவந்துள்ளது.