Sunday, June 23, 2024

GSTPS : ஐந்தாம் ஆண்டு பொதுக்குழு (AGM) கூட்டம் சிறப்பாகவும், கலகலப்பாகவும் நடந்தேறியது!


வணக்கம். இனிய தமிழ்த்தாய் வாழ்த்துடன் பொதுக்குழு கூட்டம் (Annual General Body meeting) துவங்கியது.  கூட்டம் துவங்கும் பொழுதே, சுவையான லட்டு வழங்கப்பட்டது. நமது உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டார்கள்.

 






எல்லோரையும் செயலர் பாலாஜி வரவேற்றார்.  சொசைட்டியின் வரவு செலவு அறிக்கையை பொருளாளர் செல்வராஜ் தாக்கல் செய்தார்.   இந்த முறையும் பொதுப்பணம் என்பதால் மிக கவனமாக செலவு செய்திருந்தார்கள்.  நாம் செலுத்தும் ஆண்டுச் சந்தா, நேரடி, இணையவழிக்கூட்டம் செலவுகளுக்கும், டைரி, காலண்டருக்கு  செலவாகிறது. மூன்று ஆண்டுகளுக்கான, ஏழு ஆண்டுகளுக்கான சிறப்பு சந்தாவை நிலையான வைப்பாக மாற்றி வைத்திருக்கிறார்கள்.  சிலர் கேட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் தந்தார்கள்.  சிலர் ஆலோசனைகளாகவும் தெரிவித்தார்கள்.  பரிசீலிப்பதாக ஏற்றுக்கொண்டார்கள். அறிக்கை ஏகமனதாக ஏற்றுக்கொண்டார்கள்.

 


தலைவர் செந்தமிழ்ச்செல்வன் அவர்கள், சொசைட்டி கடந்து வந்த பாதையை பகிர்ந்துகொண்டார். 

 

“நாம் சொசைட்டியை துவங்கும் பொழுது, ஜி.எஸ்.டி, வருமான வரி குறித்த அறிவை பலருக்கும் சந்தா வசூலிக்காமல் ஒரு சேவையாக தான் செய்யவேண்டும் என நினைத்தோம். ஆனால், ஒவ்வொரு நேரடிக்கூட்டத்திற்கு பத்தாயிரம் வரை செலவாகும் பொழுது, அதை சமாளிப்பது சிரமம் என்பதால் தான் சந்தா வாங்குவது என முடிவு செய்தோம்.

 


பரந்த அளவில் மற்ற  வரி ஆலோசகர்களுடன் நல்ல உறவை பராமரித்து வருகிறேன்.  அவர்கள் அழைக்கும் பொழுது, மறுக்காமல் பேச்சாளராக கலந்துகொள்கிறேன். அவர்களுடைய அமைப்பு முக்கிய விழாக்களில் அழைக்கிறார்கள். எவ்வளவு தூரமென்றாலும் செல்கிறேன்.  அதனால் தான் நாம் அழைக்கும் பொழுது, மறுக்காமல் நம் கூட்டத்தில் பேச வருகிறார்கள்.

 



நல்ல ஆற்றல் கொண்ட பெரிய பேச்சாளரை நாம் அழைத்து வரும் பொழுது, ஒரு நல்ல எண்ணிக்கையில் இருந்தால் தான் நன்றாக இருக்கும். ஆகையால் நேரடிக் நடத்தும் பொழுது தவறாமல், உறுப்பினர்கள் கலந்துகொள்ளுங்கள்.” என பல அம்சங்களை பகிர்ந்துகொண்டார்.

 

சொசைட்டியின் செயல்பாடுகள் குறித்து உறுப்பினர்களிடம் நிர்வாகிகள் கருத்து கேட்கும் பொழுது,  உறுப்பினர் முனைவர் வில்லியப்பன் அவர்கள்  சில ஆலோசனைகளை முன்வைத்தார்.

 



·        உறுப்பினர்கள் ஜி.எஸ்.டி குறித்து என்ன தேடினாலும் பதில் கிடைப்பது போல ஒரு களஞ்சியம் ஒன்றை இணையத்தில் உருவாக்கவேண்டும். அதற்கான ஏற்பாடு ஒன்றை செய்ய துவங்கவேண்டும்.

 

·        ஜி.எஸ்.டி அதிகாரிகளிடம் நோட்டிசுகள் குறித்து உரையாடும் பொழுது, நமது ஜி.எஸ்.டி அறிவு குறித்து மதித்து பேசுகிறார்கள். வேறு யாருக்கோ இருந்தாலும், நம்மை அழைத்து சந்தேகம் கேட்கிறார்கள். இது சொசைட்டி தந்த அறிவு தான். அதற்காக நன்றி.

 

·         ஜி.எஸ்.டி அதிகாரிகள் மத்தியில் நமது சொசைட்டியில் இருக்கிறோம் என்றாலே மதிப்பு ஏற்படும் படியான செயல்பாடுகளை நாம் முன்னெடுக்கவேண்டும்.

 


·        துவக்கத்தில் மாதத்தில் ஒரு நேரடிக்கூட்டம் நடத்தினோம். அதற்கு பிறகு மூன்று இணைய வழிக்கூட்டங்கள்,  யூடியூப், வலைத்தளம் பேஸ்புக் என சமூக வலைத்தளங்களில் இயங்குகிறோம், மாதம் ஒரு மின்னிதழ், ஜி.எஸ்.டி குறித்த வகுப்பு என அடுத்தடுத்து செயல்பாடுகளை செய்துவருகிறோம்.  நிர்வாக குழு, செயற்குழு உறுப்பினர்கள் சொந்த, அலுவல் வேலைகளை பார்த்துகொண்டும், சொசைட்டி வேலைகளையும் செய்வது சவால் தான். ஆகையால், இன்னும் சில செயற்குழு உறுப்பினர்களை இணைத்துக்கொண்டு செயல்பட்டால் சரியாக இருக்கும். குறிப்பாக இளைஞர்களை இணைத்துக்கொள்ளுங்கள் என பரிந்துரைக்கிறேன்.

 


·        பிற மாவட்டங்களில் இருந்தும் நம்மோடு இணைய ஆர்வமாய் இருக்கிறார்கள்.  அவர்களுக்கு சந்தாவில் சலுகை கொடுத்து நம்மோடு இணைக்கலாம்.

 

·         உறுப்பினர்கள் அதிகமானால், நிதி, சொசைட்டி வேலைகள், கூட்டத்திற்கு குறைந்தப்பட்சம் 50 பேர் என எல்லாமும் எளிதாக நிறைவேறும். ஆகையால், ஒவ்வொரு உறுப்பினரும் இரண்டு உறுப்பினகளை இணைக்க முயலுங்கள். நானும் முயல்கிறேன்.

 

உறுப்பினர் முனியசாமி மூன்று ஆலோசனைகளை பகிர்ந்தார்

 


·         சொசைட்டி என்பது லாப நோக்கமற்ற அமைப்பாக பலருக்கும் பலன் தரக்கூடிய அமைப்பாக இயங்குகிறது. ஆகையால் சொசைட்டி வேலைகளை நிர்வாகிகளே செய்யவேண்டும் என நினைக்காமல், வேலையை செய்யக்கூடிய பொருத்தமான உறுப்பினர்கள், ஆர்வமாய் முன்வருகிற உறுப்பினர்களிடம் வேலைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

·         நாம் புதிதாக உறுப்பினர்களாக இணைக்கும் பொழுது, ”நீங்கள் சனிக்கிழமைகளில் வேலை செய்பவர்களாக இருக்கிறீர்கள்.  நாங்கள் இணைய வழிக்கூட்டத்தை நமது யூடியூப் சானலில் பகிர்கிறோம். நீங்கள் மற்ற நேரத்தில் பார்த்துக்கொள்ளலாம்” என சொல்லித்தான் இணைக்கிறோம்.  இப்பொழுது ஒவ்வொரு கூட்டம் முடிந்ததும், என்னிடம் யூடியூப் லிங்க்  அனுப்புங்கள் என உரிமையாக கேட்கிறார்கள். அப்படி வலையேற்றாமல் இருக்கும் பொழுது , உறுப்பினராக சேர்க்கும் பொழுது சொன்னீர்கள். இப்பொழுது செய்யவில்லையே! என கேட்பது போல நமக்கு  குற்ற உணர்வு ஆகிவிடுகிறது. ஆகையால் வலையேற்றுவதற்கான வேலையை உடனடியாக செய்தால் நலம்.

 

·         உறுப்பினர்கள் நமது வாட்சப் குழுவில் கேள்விகள் எழுப்பினால், நிர்வாகிகள், அனுபவம் வாய்ந்த உறுப்பினர்கள் பதில் அளிக்கிறார்கள். ஆனால்  சில கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் விடுபட்டு போகின்றன.  ஆகையால், நிர்வாகிகளில் ஒருவர் ஒரு கேள்வி கூட விடுபட்டு போய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கவேண்டும்.

 


திரு கிருஷ்ணமூர்த்தி  “வாட்சப் குழு ஒன்று ஜி.எஸ்.டி, இன்னொன்று வாட்சப் என இயங்குகிறது.  மற்ற சொசைட்டி குறித்த அறிவிப்புகள், செய்திகள் எல்லாம் ஜி.எஸ்.டி குழுவிலேயெ வருகிறது. அதற்கென ஒரு குழு உருவாக்கினால் நல்லது” என கோரினார்.  இன்னும் சில உறுப்பினர்கள் தங்கள் ஆலோசனைகளை தெரிவித்தார்கள்.

 


எல்லா ஆலோசனைகளையும்  நாங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்கிறோம். விரைவில் நடைமுறைக்கு கொண்டு வருகிறோம் என செயலர் பாலாஜி தெரிவித்தார்.

 


இடைவேளையில்,  இனிப்பு, சாட் வகைகள், சமோசா, அருமையான காபி என ஏகப்பட்ட வகைகளை உறுப்பினர்களுக்கு ஏற்பாடு செய்திருந்தோம். உறுப்பினர்களுக்கு கொடுத்த பத்து நிமிடம் நிச்சயம் போதவில்லை.  


 

நம்மோடு புதிய உறுப்பினராக இணைந்திருக்கும் சுகுமாறன் அவர்கள் தன்னைப் பற்றிய அறிமுகத்தை செய்துகொண்டார்.  வெளி மாவட்டத்தில் நம் தலைவர் சென்றிருந்த பொழுது, நம்முடைய சொசைட்டிப் பற்றி கேள்விப்பட்டு இணைந்ததாக தெரிவித்தார்.



சிறப்பு பங்கேற்பாளராக கோவையில் இருந்து வரி ஆலோசகர் பெருமாள் அவர்கள் கலந்துகொண்டார்.  நமது சொசைட்டி, தொடர்ந்து கூட்டங்களை நடத்துவது, உறுப்பினர்களே பேச்சாளர்களாக வளர்ச்சிப் பெறுவது என்கிற சில அம்சங்களை சுட்டிக்காட்டி தன்னுடைய வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டார். 


வரி ஆலோசகர்கள் சட்டங்களை மட்டும் படிப்பதோடு நின்றுவிடாமல், தொழில்முறை சிக்கல்களை எதிர்கொள்ள, தமிழ் இலக்கியங்களை படியுங்கள். அது நமக்கு புதிய சிந்தனைகளை, வழிகளை காட்டும். எனக்கு அப்படி பயன்படுகிறது என தெரிவித்தார்.


 


ஜி.எஸ்.டி செக்சன்கள் குறித்த வினாடி வினா உறுப்பினர்களிடம்  நடத்தப்பட்டது.  உற்சாகமாக அனைவரும் கலந்துகொண்டார்கள். கொடுத்த 15 நிமிடங்களில் பதில் அளித்தது ஆச்சர்யம்.


 

முதல் பரிசு, இருவர், இரண்டாம் பரிசு இருவர், மூன்றாம் பரிசு ஐவர் என வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற அனைவருக்கும், ஜிபே மூலம் பரிசுப்பணத்தை அனுப்பி வைத்தனர்.  மொத்தக் கூட்டமும் கலகலப்பாக சென்றது என்பது சிறப்பாக இருந்தது.









கலந்துகொண்ட அனைத்து உறுப்பினர்களுக்கும், சிறப்பு பங்கேற்பாளர் கோவை பெருமாள் அவர்களுக்கும் நன்றி தெரிவித்து துணைத்தலைவர் பாலாஜி அருணாச்சலம் அவர்கள் கூட்டத்தை நிறைவு செய்தார்

 





மகிழ்வான நிகழ்வையும், நினைவுகளையும் பத்திரப்படுத்த புகைப்படங்களை எடுத்துக்கொண்டோம்.

நன்றி.

-         - GSTPS


தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety

No comments:

Post a Comment