Wednesday, June 19, 2024

EPF : தொழிலாளிகளுக்கான பிரத்யேகமான தளத்தை ஒரு தொழிலாளி எவ்வாறு பயன்படுத்துவது? – அத்தியாயம் 8

 


தொழிலாளிக்கான பிரத்யேகமான பி.எப் தளத்தின் முகவரி

https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/



இதற்கு முந்தைய ஏழு அத்தியாயங்களை நமது GSTPS தளத்தில் கீழ்க்கண்ட முகவரியில் சென்று படிக்கலாம்.

https://gstprofessionalssociety.blogspot.com/2023/10/gstps-how-to-use-employee-pf-site.html

https://gstprofessionalssociety.blogspot.com/2023/11/epf-2.html

https://gstprofessionalssociety.blogspot.com/2023/12/epf-3.html

https://gstprofessionalssociety.blogspot.com/2024/01/epf-4.html

https://gstprofessionalssociety.blogspot.com/2024/02/epf-5.html

https://gstprofessionalssociety.blogspot.com/2024/03/epf-6.html

https://gstprofessionalssociety.blogspot.com/2024/05/epf-7.html


கடந்த அத்தியாயங்களில் Claim சம்பந்தமாக விரிவாக பார்த்தோம்.  இப்பொழுது One member – one EPF Account (Transfer Request) குறித்துப் பார்க்கலாம்.

 

ஒரு UAN எண் – ஒரு பி.எப் கணக்கு (One member – one EPF Account (Transfer Request))

 


ஒரு தொழிலாளி ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களில் வேலை செய்திருக்கும் பொழுது, பி.எப். பணத்தை பெற விண்ணப்பிக்கும் பொழுது, எல்லா நிறுவனங்களின் கணக்குகளும் கடைசியாய் வேலை செய்த கணக்கிற்கு மாற்றவேண்டும் என பி.எப். கோருகிறது. எல்லா கணக்குகளிலும் தொழிலாளியின் அடையாள எண்ணான ஓரே UAN (Universal Account No.) தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் அதுவாகவே மாறாதா?

 

UAN என்ற அடையாள எண்ணை பி.எப் அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, ஒவ்வொரு நிறுவனத்திலும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் நிறுவனத்தின் கணக்கு எண்ணை அடிப்படையாக கொண்டு,  தந்துகொண்டிருந்தார்கள்.  அந்த தொழிலாளி ஒவ்வொரு நிறுவனம் மாறும் பொழுது, பழைய கணக்கை புதிய கணக்கிற்கு மாற்ற உரிய விண்ணப்பம் கொடுத்து மாற்றிக்கொள்ளவேண்டும்.

 

ஆனால், UAN என்ற அடையாள எண் ஒவ்வொரு தொழிலாளிக்கு கொடுத்த பிறகும், இன்னும் பழைய முறையான உரிய வின்ணப்பத்தை பி.எப் தளத்தில் கொடுத்து பழைய கணக்குகளை புதிய/கடைசி கணக்கிற்கு மாற்றிக்கொள்ளவேண்டும் (Transfer) என்கிற நடைமுறை  சில ஆண்டுகளாக தொடர்ந்தது.  

 

பெரும்பாலான தொழிலாளர்களின் மத்தியில் தொழிலாளிகள் தங்களுடைய பழைய பி.எப் கணக்கை புதிய கணக்கிற்கு மாற்றவேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லை.  இதில் ஏற்படும் பெரிய இழப்பு என்னவென்றால்….

 

முன்பெல்லாம் ஒரு தொழிலாளி பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்தாலும், அந்தந்த கணக்கில் உள்ள பணத்திற்கு பி.எப். வட்டி கொடுத்துக்கொண்டிருந்தது.  சில வருடங்களுக்கு முன்பு ஒரு கணக்கில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் மாதாந்திர பணம் வரவாக இல்லையென்றால், வட்டிக் கணக்கிட்டு தருவது நிறுத்தப்படும் என்ற அறிவிப்பை பி.எப் தந்தது. 

 

இந்த அறிவிப்பு என்பது தொழிலாளர்களின் பி.எப் சேமிப்புக்கு கடுமையாக பாதிப்பை உண்டாக்க கூடிய ஒன்றாக இருந்தது.  ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் இருந்து பல்வேறு தேவைகள், நெருக்கடிகளுக்காக நிறுவனங்கள் மாறி வேலை செய்வது இயல்பான விசயம்.  மாறும் பொழுது, பழைய கணக்கை புதிய கணக்கிற்கு மாற்றவேண்டும் என்ற தொழிலாளிக்கு விழிப்புணர்வு இருப்பதில்லை.  பி.எப்.பும் தொழிலாளிக்கு இந்த விசயத்தைத் தெரியப்படுத்துவதற்கான ஒரு முறையான தகவல் தொடர்பும் வைத்திருப்பதில்லை. விளைவு.  அந்த தொழிலாளி பி.எப் கணக்கை முடிக்க விண்ணப்பிக்கும் பொழுது தான்  இந்த விசயமும் தெரியும்.

 

தொடர்ந்து சில ஆண்டுகள் தொழிலாளர்கள் பாதிப்பு தரக்கூடிய அம்சத்தை மாற்ற கோரியதால் தான், கடந்த ஏப்ரல் 1, 2024 தேதியில் இருந்து, ஒரே UAN எண்ணாக இருந்தால், தொழிலாளி நிறுவனம் மாறும் பொழுது  பழைய கணக்கை, புதிய கணக்கிற்கு மாற்ற தேவையில்லை என பி.எப். ஒரு அறிவிப்பைத் தந்தது. 

 

பெயரில் எழுத்துப்பிழை, வேலையில் சேர்ந்த தேதி, விலகிய தேதி குறிப்பிடப்படவில்லை என்ற சில காரணங்களால் பி.எப். மாற்றாமல் தனித்தனியான கணக்காகவே வைத்துக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. ஆகையால், நிறுவனங்களில் மாறி வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்கள் கணக்கு மாறிவிட்டதா என சோதிப்பது மிக அவசியம்.


ஒரு கணக்கிற்கு மாறிவிட்டதா எப்படி சோதிப்பது?

 

தொழிலாளியின் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்ற கணக்கைக் காட்டுவதற்கென்றே, பி.எப். ஒரு தளம் வைத்திருக்கிறது.  பி.எப். தொழிலாளியின் தளத்தில் உள்ள User ID, Password இரண்டையும் பயன்படுத்தி, அந்த தளத்திற்குள் உள்ளே போய் பார்க்கலாம்.  தஙகளது பாஸ்புக்கை தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

 

ஒரு தொழிலாளி இரண்டு நிறுவனங்களில் வேலை செய்து இருந்தால், இரண்டு பாஸ் புக்குகள் அவருடைய கணக்கில் காட்டும்.  ஆனால், பழைய கணக்கு புதிய கணக்கில் மாறிவிட்டதா என பார்ப்பதற்கு, தொழிலாளியின் பி.எப். பணம் பழைய கணக்கில் ஜீரோ என காட்டும். பழைய கணக்கில் உள்ள பணம். புதிய பாஸ்புக்கில் இணைத்துக் காண்பிக்கும். ஆனால் பென்சன் பணம் மாறுவதில்லை. அந்தந்த கணக்கிலேயே தொடரும்படி வைத்திருக்கிறார்கள்.

 

நமது விண்ணப்பத்தின் நிலையை அறிந்துகொள்ளல் (Track Claim Status)

 


நாம்  பி.எப் கணக்கில் இருந்து கடன் பெற விண்ணப்பிக்கிறோம்.  பி.எப். கணக்கை முடித்துக்கொண்டு பணம் பெற விண்ணப்பிக்கிறோம்.  பி.எப். பென்சன் பணத்தை பெறவும் விண்ணப்பிக்கிறோம்.

 

விண்ணப்பிப்பதோடு நமது வேலை முடிந்துவிடுவதில்லை.   நமது பி.எப் கணக்கில் சில சிக்கல்கள் இருக்கலாம்.  ஆகையால், அதை முன்னிட்டு, நமது விண்ணப்பத்தை பி.எப். நிராகரிக்கலாம்.  அதை சரி செய்ய கோரலாம்.  ஆகையால், விண்ணப்பம் செய்த பிறகு, ஒரு வாரம், பத்து நாளில் இந்த இடத்தில் போய் நாம் சரிப்பார்க்கவேண்டும்.  இன்னும் சரிபார்த்துக்கொண்டு (Processing)  இருக்கிறோம். உங்களுடைய விண்ணப்பம் (Approved) ஏற்கப்பட்டது.   உங்களுடைய விண்ணப்பத்தை நிராகரிக்கிறோம் (Rejected) என தெரிவிப்பார்கள்.

 

ஒரு விண்ணப்பத்தை எதற்காக நிராகரிக்கிறோம் என்பதை பி.எப். அலுவலகம் இன்னும் முறையாக தொழிலாளிக்கு தபால் வழியாகவோ, குறுஞ்செய்தி வழியாகவோ தெரியப்படுத்துவதில்லை.  கிட்டத்தட்ட ஒரு மாதம் காத்திருந்து பணம் வங்கிக்கு வரவில்லை என தெரிந்துகொண்டு, பி.எப். அலுவலகம் சென்று கேட்டால் தான் எதற்காக நிராகரித்தார்கள் என்கிற விவரம் தெரிய வருகிறது.   இதற்கு ஒரு தீர்வு கண்டுப்பிடித்தால் நலம்.


ஒருவேளை விண்ணப்பம் கொடுத்து, ஒரு மாதம் காலம் கடந்தும், எதுவும் முறையான பதில் இல்லை என்றால்….

 

முதலில் பி.எப் சம்பந்தமாக புகார் கொடுப்பதற்காக, பி.எப் நிர்வாகமே ஒரு ”EPF : புகார் மேலாண்மை அமைப்பு” என்ற பெயரில் ஒரு வலைத்தளத்தை ஏற்படுத்தியிருக்கிறது.   அந்த வலைத்தளத்தில் தொழிலாளியினுடைய அடிப்படை பி.எப். விவரங்கள், மொபைல் எண், என்ன குறைபாடு என்பதை சரியாக தெரியப்படுத்தவேண்டும்.

 


https://epfigms.gov.in/grievance/grievancemaster


ஒரு வாரத்திற்குள் தொழிலாளி கொடுத்த எண்ணுக்கு அந்த புகாருக்கு உரிய பதிலை அல்லது என்ன செய்யவேண்டும் என்பதை அனுப்பி வைக்கும்.    அதை சரி செய்துவிட்டு, மீண்டும் விண்ணப்பித்தால், பணம் வந்துவிடும். 

 

ஒருவேளை அந்த பதில் சம்பந்தப்பட்டவருக்கு திருப்தி அளிக்கவில்லை என்றால், தொழிலாளி வேலை செய்கிற/செய்த நிறுவனத்திற்கென்று ஒரு அருகில் உள்ள பி.எப் அலுவலகத்தை தொடர்புகொள்ள வேண்டியிருக்கும். சென்னையில் தலைமை அலுவலகம் ராயப்பேட்டையில் இருக்கிறது.  துணை அலுவலகங்களாக அம்பத்தூர் பி.எப் அலுவலகம் முகப்பேரிலும், தாம்பரம் பி.எப் அலுவலகம் தாம்பரத்திலும் இருக்கின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் பி.எப். அலுவலகங்கள் உண்டு.   ஆகையால் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு  எந்த பி.எப். அலுவலகம் என கேட்டுக்கொண்டு, அங்கு அணுகவேண்டும்.

 

திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை அலுவலகங்கள் இயங்கும்.  தொழிலாளி தான் வைத்திருக்கிற அடிப்படை விவரங்களை எடுத்துக்கொண்டு, அலுவலகம் சென்றால், தொழிலாளியின் குறைபாடு கேட்கப்பட்டு, என்ன செய்வது என்பது உரிய வழிகாட்டல்களைத் தருவார்கள். அதைச் சரி செய்தோம் என்றால், தொழிலாளியின் பி.எப். பணம் வங்கிக்கு வந்துவிடும்.

 

இன்னும் வளரும்.

 

இரா. முனியசாமி,

GSTPS உறுப்பினர்

9551291721


No comments:

Post a Comment