Thursday, April 3, 2025

வருங்கால வைப்பு நிதி திட்டம் (EPF) நிறுவனமும், தொழிலாளர்களும் அறிந்துகொள்ள வேண்டிய அடிப்படையான அம்சங்கள் என்னென்ன? - அத்தியாயம் 15

கடந்த இரண்டு மாதங்களில் நிறுவனம் தன் தொழிலாளர்களுக்கு தரும் கருணைத்தொகை (Gratuity) குறித்து சந்தேகம் கேட்டார்கள். அதை கொஞ்சம் பார்த்துவிடலாம்.

 

ஒரு தொழிலாளி ஒரு நிறுவனத்தில் வேலை செய்து விலகும் பொழுது, ஓய்வு பெறும் பொழுது அல்லது  இறக்கும் பொழுது அவருக்கு இந்த கருணைத்தொகை தரப்படுகிறது.

 

துவக்கத்தில் தொழிலாளர்களுக்கு இப்படி கருணைத்தொகை தருவது நிறுவனத்தின் விருப்பமாக இருந்தது.  தொழிலாளிக்கு தரலாம். தராமலும் இருக்கலாம்.   அதில் தொடர்ச்சியாக முரண்பாடுகள் எழுந்ததால்,  அரசு இதற்காக ஒரு சட்டத்தை (Payment of Gratuity Act) 1972ல் வகுத்தார்கள்.  ஆகையால் இப்பொழுது சட்டப்பூர்வமாகவே தரவேண்டும் என உத்தரவிட்டதால், கருணைத்தொகை என்பதற்கு பதிலாக உரிமைத்தொகை என அழைக்கலாம்.

 

இதற்கான தகுதிகள் என்னவென்றால், அந்த நிறுவனம் பத்து பேர், அதற்கு மேலான தொழிலாளர்களை கொண்டிருக்கவேண்டும்.  தொழிலாளி தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்திருக்கவேண்டும். 

 

இதற்கான கணக்கிடும் முறை என்னவென்றால் ….

 

கருணைத்தொகை= வேலை செய்த வருடங்கள் x

                                    (கடைசியாக அவர் பெற்ற சம்பளத்தில் அடிப்படை

                                    சம்பளம் +  பஞ்சப்படி) x

                                    15 (நாட்கள்) x 26 (நான்கு விடுமுறை நாட்களை கழித்து)

 

உதாரணமாக : ஒரு தொழிலாளிக்கு சம்பளம் 50000. அதில் அடிப்படை

சம்பளமும், பஞ்சப்படியும்  30000.   வேலை செய்த காலங்கள் 6 வருடங்கள் 9 மாதங்கள். (ஆறு மாதத்திற்கு மேலாக என்றால், அதை முழுமையாக கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.)  ஆக 7 வருடங்கள். இவருக்கு எவ்வளவு தொகை எனக் கணக்கிடலாம்.

 

கருணைத்தொகை :   7 * 30000 * 15/26 = ரூ. 121154.00

 

இந்த தொகை அதிகப்பட்சம் ரூ. 20 லட்சம் வரைக்கும் தரலாம்.  கூடுதலாக தருவது நிறுவனத்தின் விருப்பம்.

 

கூடுதலாக, மாதாந்திர சம்பளத்தில் பி.எப்., இ.எஸ்.ஐ பிடித்தம் செய்வது போல, கருணைத்தொகை (Grautity) யையும் பிடித்தம் செய்வது சட்டப்படி தவறு.

 

சில நிறுவனங்கள் ஒரு தொழிலாளிக்கு தரப்படுகிற சம்பளம், இதர வகைகளோடு கருணைத்தொகையும் சேர்த்து அதிகப்படியாக (CTC) கணக்கிடுகிறார்கள். அதுவும் சட்டப்படி தவறு.

 

இப்படி கொடுக்கப்படும் தொகைக்கு வருமான வரி (Income Tax) செலுத்தவேண்டுமா என்றால், நிபந்தனைக்குட்பட்டது.  மேலே நாம் கணக்கிட்டது போல ரூ. 1,20,000 தரவேண்டிய கருணைத்தொகை என்றால், அந்த நிறுவனம் ரூ. 2 லட்சம் கொடுத்தால், கூடுதலாக கொடுத்த ரூ. 80000 க்கு மட்டும் வரி பிடித்தம் செய்தால் போதுமானது.

 

 

சில சந்தர்ப்பங்களில் DD யாக பி.எப் நிதியை செலுத்தும் பொழுது கவனமாய் இருங்கள்.

 

பி.எப் உள்ள நிறுவனம் தொடர்ச்சியாக பி.எப் நிதி செலுத்தி வருவார்கள். குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை நிறுவனத்தில் பி.எப் தணிக்கையை மேற்கொள்வார்கள். ஒரு நிறுவனம் ஆறு மாதங்களுக்கு மேல் மாதாந்திர நிதியை செலுத்தாமல் இருந்தாலோ...  ஏன் செலுத்தவில்லை என விவரம் கேட்டு  நிறுவனத்திற்கு 7A நோட்டிஸ் அனுப்புவது வழக்கமான ஒன்று.  அதற்கு பிறகும் நடவடிக்கை எடுக்காமல் இருந்தால், செலுத்தவேண்டிய நிதி சேர்ந்துகொண்டே போகும்.  பல தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.

 

ஆக, பணம் செலுத்தாதற்கு 7A நோட்டிஸ் வந்திருக்கிறது.  இந்த நோட்டிஸ் வந்ததும் செலுத்த வேண்டிய பணத்தைச் செலுத்தினால் போதும் என்கிற மனநிலையோடு நிறுவனம் இருக்கும். அது மட்டும் போதாது.

 

நிறுவனம் செலுத்தவேண்டிய ஆறு மாத நிலுவை மட்டுமில்லாமல்,  வரவு செலவு கணக்கு அறிக்கை, சம்பள, வருகைப் பதிவேடு என எல்லா ஆவணங்களும் கேட்டு வாங்கி, சரிப்பார்த்து, நிறுவனம் சரியாகத்தான் செலுத்தியிருக்கிறார்களா என சரிப்பார்த்த பிறகு தான் அந்த 7A நோட்டிஸ் நிறைவடையும்.  ஒரு மாதத்திலும் முடிவடையும். ஆவணங்கள் கொடுப்பது தாமதமாவது, நிறுவனத்தின் பிரதிநிதிகள் போகும் பொழுது, உரிய அலுவலர்கள் இருக்கையில் இல்லாததது, தேதி தள்ளிப்போட்டுக்கொண்டே போவது என சில சமயங்கள் ஒரு வருடம், இரண்டு வருடங்கள் வரைக்கும் கூட தாமதம் ஆகிவிடும்.

 

ஒரு மாதத்திற்கு 1 லட்சம் சம்பளம். 12 மாதத்திற்கு சம்பளம் தந்ததாக சம்பள பதிவேட்டில் இருந்து… தணிக்கையாளர் கொடுத்த அறிக்கையில் வருடாந்திர மொத்த சம்பளம்14  லட்சம் என சம்பளக் கணக்கு எழுதப்பட்டிருந்தால், இரண்டு லட்சம் ஏன் வித்தியாசம் என விவரத்தை பி.எப்.  கேட்கும்.  ஒரு வேளை புதிதாய் இணைந்த சில தொழிலாளர்களுக்கு நிறுவனம் சம்பளம் கொடுத்து, அவர்களுக்கு பி.எப். நிதியை செலுத்த தவறியிருந்தால், பி.எப். நிதியை செலுத்த உத்தரவிடும்.  ஒருவேளை செலுத்த தவறினால், தாமதமானால் நிறுவனத்திடமிருந்து விவரம் பெற்றுக்கொண்ட அடிப்படையில் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்து செலுத்த வேண்டிய நிதியை நேரடியாக பெற்றுக்கொள்ளும். அதற்கான அதிகாரமும் பி.எப்க்கு உண்டு.

 

சில சந்தர்ப்பங்களில் DD யாக கொடுக்கச் சொல்லி வலியுறுத்துவார்கள்.  நிறுவனமும்  தொடர் விசாரணையில் ஏற்பட்ட களைப்பில், அவசரம் அவசரமாக DDயாக கொடுத்துவிடுவார்கள்.

 

இப்படி வங்கியில் இருந்து போகும் நிதியும், DDயாக கொடுக்கப்படுகிற நிதியும் நிறுவனம் செலுத்தவேண்டிய அந்த சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் கணக்கில் உடனே வரவு வைக்கவேண்டும் அல்லவா! ஆனால் பி.எப். நிர்வாகம் பல சமயங்களில் அப்படி உடனே செய்வதில்லை.

 

சமீபத்தில் ஒரு நிறுவனம் கொரானா காலத்திற்கு முன்பு ஒரு 7A நோட்டிஸ் துவங்கி,  விடுபட்ட சம்பள கணக்கிற்கு செலுத்த வேண்டிய பி.எப். நிதி ஏழு லட்சம் ரூபாய்க்கு DDயாக செலுத்திவிட்டார்கள்.  ஆனால், சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் கணக்கில் வரவு வைக்க சொல்லி, தொடர்ந்து கடிதங்கள் மூலமாக நினைவூட்டியும் அந்த வேலையை முடிக்காமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.  பி.எப் அலுவலகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையும், தினசரி வேலை அழுத்தமும் உண்டு. இதில் பழைய கணக்கு வழக்குகளை முடிப்பதில் உடனடி கவனம் செலுத்துவது இல்லை.

 

ஆகையால்,  நிறுவனங்கள் DD கேட்டால் உடனே எடுத்து கொடுத்துவிடாமல், நிறுவனமே சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு நிறுவனமே அந்தந்த மாதங்களுக்கு சென்று சாலனை உருவாக்கி பணத்தை கட்டிவிடுவது சாலச் சிறந்தது.  இல்லையெனில், பணத்தையும் உடனே செலுத்திவிட்டு, அதை வரவு வைக்க பலமுறை பி.எப். நிறுவனத்திற்கு அலையவும் வேண்டியிருக்கும். கவனமாய் இருங்கள்.

 

ஒரு நிறுவனம் இ.எஸ்.ஐயில் பதிவு செய்திருக்கிறது.   20 தொழிலாளர்களுக்கு மேலாக வேலை செய்கிறார்கள்.  பி.எப். பதிவு செய்யாமலேயே நீடிக்கமுடியுமா?

 

ஒரு நிறுவனத்தில் பத்து தொழிலாளர்கள் வேலை செய்தால், இ.எஸ்.ஐயில் பதிவு செய்யவேண்டும்.   அதே போல 20 தொழிலாளர்கள் என்றைக்கு அந்த நிறுவனத்தில் வேலை செய்கிறார்களோ அன்றைய தேதியில் இருந்து பி.எப். பதிவும் செய்துகொள்ளவேண்டும்.   மருத்துவ தேவைக்காகவும், குறைவான தொகையாகவும் பங்களிப்பு இருப்பதால், இ.எஸ்.ஐயை நிறுவனங்கள் தொடர்ந்து செலுத்துகின்றன. ஆனால், பி.எப் பதிவு செய்தால், நிறுவனம் தங்கள் பங்களிப்பாகவும் 12% செலுத்தவேண்டும் என்பதால் தயங்குகின்றன.   இப்படி தயங்குவது சட்டப்பூர்வ கடமையை தவறுவதாகும். 

 

இ.எஸ்.ஐயும், பி.எப்பும் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்டது என்பதால், இரு துறைகளும் தங்களுக்குள் தகவல் தொடர்புகளை இயல்பாக வைத்துள்ளன. ஒரு நிறுவனம் பி.எப் பதிவு எடுத்தவுடன், பிஎப் நிறுவனம் உடனேயே இ.எஸ்.ஐக்கு தெரிவித்துவிடுகிறது. அதே போல பி.எப். நிறுவனமும் இ.எஸ்.ஐக்கு தெரிவித்துவிடுகிறது.

 

ஆகையால், நிறுவனங்கள் இ.எஸ்.ஐ வைத்திருக்கின்ற நிறுவனங்கள்  பி.எப். பதிவு செய்வதற்கு தகுதி பெற்றுவிட்டால், உடனேயே பிஎப்பிலும் பதிவு செய்வது நிறுவனத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

 

தொழிலாளர்கள் தங்கள் வைப்பு நிதிக்கு 2024 -2025 காலத்திற்கான பிஎப் தரும் வட்டி விகிதம் என்ன?

 

2024 -25 காலத்திற்கான வட்டி விகிதத்தை இப்பொழுது அறிவித்துள்ளார்கள்.   வட்டி விகிதம் 8.25% 

 

தொழிலாளர்கள் இடம் மாறும் பொழுது, ஓய்வு நிதி கணக்கை மாற்றம் செய்வது எளிதாக்கப்படுகிறது.

 


தொழிலாளிகள் எந்த பகுதியில் வேலை செய்தார்களோ, அந்த பகுதியில் உள்ள பிஎப். அலுவலகம் தான் பி.எப்.  கணக்குகளை வைத்திருக்கும். பராமரிக்கும்.  ஒருவேளை ஓய்வூதியர் தன்னுடைய சொந்த காரணத்தால், வேறு மாவட்டம், வேறு மாநிலம் செல்லும் பொழுது, அவருடைய கணக்கை மாற்றுவதற்காக அலையவேண்டியிருந்தது.  இப்பொழுது இந்தியா முழுவதும் ஓய்வூதியர்களின் கணக்கை மையப்படுத்துவதற்கான(Centralized)  வேலைகளை துவங்கியுள்ளார்.  இந்த வேலை முற்றுபெறும் பொழுது,  ஓய்வூதியர்கள் தங்கள் கணக்குகளை மாற்றுவதற்காக அலைய தேவையில்லை என்பது இதில் முக்கியமானது. இது ஒரு நல்ல வரவேற்கத்தக்க மாற்றம்.

 

நிறுவனம் பி.எப். நிதியை தாமதமாக செலுத்தினால் விதிக்கும் அபராதத்தில் செய்த மாற்றம் என்ன?

 


நிறுவனம் ஒவ்வொரு மாதமும் தங்கள் செலுத்த வேண்டிய நிதியை, மாதம் முடிந்து 15 தேதிக்குள் செலுத்தவேண்டும். இல்லையென்றால், அதற்காக வட்டியும், அபராதமும் விதிப்பார்கள்.

 

அதற்கான அபராதம் என்பது 14B விதிப்படி முதல் இரண்டு மாதங்களுக்கு ஆண்டு வட்டி 5%யும், மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு 10%யும்,  நான்கு முதல் ஆறு மாதங்களுக்கு 15%யும்,  6 மாதங்களுக்கு மேலே 25% எனவும் இருந்தது. இப்பொழுது அந்த வட்டி விகிதத்தை மாதம் 1% என்ற அடிப்படையில் ஆண்டுக்கு 12% என மாற்றப்பட்டுள்ளது.  முந்தைய அபராத விகிதத்தை விட, ஆண்டுகள் கூடும் பொழுது  கட்டவேண்டிய அபராதம் அதிகமாகும். ஆகையால் நிறுவனங்கள் உரிய தேதியில் பி.எப். நிதியை செலுத்திவிடுவது நல்லது.

 

இன்னும் வளரும்.

வணக்கங்களுடன்,

 

இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, பி.எப், இ.எஸ்.ஐ ஆலோசகர்,

GSTPS உறுப்பினர்

9551291721


குறிப்பு : இந்த கட்டுரை தொழில் உலகம் இதழில் மார்ச் 2025  வெளிவந்தது.

 

Wednesday, April 2, 2025

GSTPS : 39வது நேரடிக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது!


பயனுள்ள தலைப்புகளின் நமது நேரடிக் கூட்டம் இனிதே நடைபெற்றது!வரவேற்புரைக்கு பின் நமது துணைத்தலைவர் திரு பாலாஜி அருணாசலம் அவர்கள் ”வங்கி கணக்கு முடக்கம் சொத்துக்கள் முடக்கம் பற்றி ஒவ்வொரு பிரிவின் படி விளக்கமளித்தார்! எந்த காலங்களில் எப்படிபட்ட காரணங்களுக்காக, எந்த விதமான முடக்கங்கள் நடக்கும் என்பதை விளக்கமாக எடுத்துரைத்தார்! பின்பு இது போன்ற சூழ்நிலைகளிலிருந்து எப்படி விடுவித்து கொள்வது என்பதனையும் விளக்கினார்! வரி நிலுவை காலங்கடந்து நின்றால் கைது நடவடிக்கையும் உண்டு என்பதனையும் அதற்கான அளவுகோலையும் விவரித்தார்!


பின்பு நடைபெற்ற. உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் பதில் கூறினார்! இடையே தலைவர் திரு S.செந்தமிழ் செல்வன் தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்! திரு வில்லியப்பன்  தன் அனுபவதையும் விளக்கினார்.


மாலை 4.30 க்கு இடை வேளையில் தேங்காய் Ball, இட்லிஸ்வீட் மற்றும் சூடான சமோசாவுடன்  காபியுடன் வழங்கப்பட்டது! 


இரண்டாம் நிகழ்வாக செயலாளர் திரு S.பாலாஜி அவர்கள் GST போர்ட்டலில் உள்ள Dashboard சேவைகள் பற்றி போர்ட்டலை திறந்து ஒரு பிராக்ட்டிக்கலாக விளக்கம் அளித்தார். இடையிடையே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்! அடிக்கடி நாம் போர்டலை பார்த்தாலும்  பல தெரியாத தகவல்களை அறிய முடிந்தது.

போர்ட்டலில் ஒரு முக்கியமான சேவையாக வரி கட்டுபவர்கள் வரி நிலுவை தொகையை தவணை முறையில் கட்ட கமிஷனருக்கு கோரிக்கை வைக்கலாம் என்றும் வங்கி கணக்கு முடக்கத்தை இதன் மூலம் நிவர்த்தி செய்யலாம் எனவும் கூறினார்!



இறுதியாக. பொருளாளர் திரு S.செல்வராஜ் அவர்களின் நன்றி நவிலலுடன் கூட்டம் இனிதே முடிவடைந்தது!


- GSTPS 


தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856