Tuesday, March 3, 2026

GSTPS : The Mock Court Conducted with a large number of members successfully

 


வணக்கம். கடந்த சனிக்கிழமையன்று (28/02/2026) நடைபெற்ற  GSTPS நேரடிக் கூட்டத்தின் மாதிரி நீதிமன்றம் (Mock Court) திரளான உறுப்பினர்களுடன் நிறைவேறியது.

 

தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் இனிதே துவங்கியது.  நேரடியாக மாதிரி நீதிமன்றம் கூடியது.  அமர்வில் வழக்கறிஞர்களில் மூத்தவர் திரு. சண்முகம் அவர்களும், திருமதி ஹரிணி அவர்களும், திரு. தாமோதரன் அவர்களும் அமர்ந்தார்கள். அரசு தரப்பில் வழக்கறிஞர் திரு. சக்கரவர்த்தி அவர்கள் இருந்தார்.  நீதிமன்றத்தை ஒழுங்கு செய்யும் அதிகாரியாக திரு. விக்கி அமர்ந்திருந்தார்.

 

ஐந்து வழக்குகளை -  திரு. சாதிக்பாட்சா அவர்கள்,  வழக்கறிஞர் திரு. பால்பாண்டி, Dr. வில்லியப்பன், அவருக்கு உதவியாளராக திரு. சேகர்பாபு,  திரு. முனியசாமி, திரு. சிவக்குமார் அவர்கள் வழக்குகளை முன் வைத்து வாதாடினோம்.

 

முதல் சுற்றில் மூன்று வழக்குகள் ஒரு முடிவுக்கு வந்தன. திரு. சாதிக்பாட்சாவுக்கும், திரு. பால்பாண்டி அவர்களுக்கும்  கூடுதல் தெளிவு தேவைப்பட்டதால், முதல் சுற்றில் வாய்தா வாங்கி, இரண்டாவது சுற்று வழக்கை வாதாடி முடிக்கப்பட்டது.

 


வழக்குகள் விவாதம்  குறித்து  நிறைய சுவாரசியமான விசயங்கள் இருக்கின்றன. இங்கு எழுதினால், மிக நீண்டுவிடும் என்பதால் கவனமாய் தவிர்க்கிறோம்.  நேற்று நடைபெற்ற நேரடிக் கூட்டத்தில் உறுப்பினர்கள் கற்றதும், பெற்றதும் அதிகம்.

 

இடையே, இனிப்பும், சமோசாவும், வடையும், சுவையான காபியும் தரப்பட்டது.  உறுப்பினர் திரு. திருநாவுக்கரசு அவர்களுக்கு பிறந்தநாள் என்பதால், செலவுகளை அவர் ஏற்றுக்கொண்டார்.  உறுப்பினர்கள் தங்களது மகிழ்ச்சியான தருணங்களை நமது சொசைட்டி உறுப்பினர்களோடு பகிர்ந்து கொள்வது அருமையான விசயம்.

 

டிரிபியூனல் நீதிமன்றம் அமுலுக்கு வரத்துவங்கி, விரைவில் சென்னையில் துவங்க இருக்கும் வேளையில், அது குறித்த ஒரு விழிப்புணர்வை நமது உறுப்பினர்களுக்கு தருவதற்காக,  கடந்த ஒரு மாதத்தில் தலைவர் திரு. செந்தமிழ்ச்செல்வன் அவர்களுடைய மெனக்கெடலும், அதற்கான சளையாத உழைப்பும்  மற்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பும் பெரியது.

 


முதல்முறை என்பதால், சிலருக்கு தயக்கம் இருந்தது. சிலருக்கு சொந்த வேலை நெருக்கடி இருந்தது.  சிலருக்கு உடல்நிலை சரியில்லை. ஆகையால்  அவ்வப்பொழுது பல மாற்றங்கள்.  இருப்பினும் தலைவர் விடாப்பிடியாக  போராடி நிறைவேற்றினார் என சொல்லலாம். அவரின் மன உறுதி எல்லாம் அசாத்தியமானதாக இருக்கிறது.  அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.

 

கடந்த பிப்ரவரியில் டிரிபியூனல் குறித்து நீண்ட விளக்கமான நேரடிக் கூட்டம், டிராப்ட் எழுதுவதற்கான ஒரு பயிற்சி என ஒரு ஜூம் கூட்டம், நேற்றைய கூட்டத்தில் அவருடைய பங்களிப்பு என வழக்கறிஞர் திருமதி. ஹரிணி அவர்களுடைய பங்கு மிகப்பெரியது.  தனிப்பட்ட முறையில் அலுவலக மாற்றம் செய்யவேண்டிய நெருக்கடி, வழக்கமான தொழில் பிசி என எல்லாம் இருந்தும் ஏற்றுக்கொண்ட ஒரு வேலையை மிகச்சிறப்பாக நிறைவேற்றினார். உறுப்பினர்கள் சார்பாக நன்றி.

 

உறுப்பினராக இல்லாமல், தலைவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, நமது ஜூம் கூட்டத்திலும், நேற்றைய கூட்டத்திலும் பங்கு கொண்டு சிறப்பாக பங்கெடுத்த வழக்கறிஞர் திரு. சண்முகம் அவர்களுக்கு உறுப்பினர்கள் சார்பாக நன்றி.

 


இறுதியில் கலந்துகொண்ட அனைவருக்கும் சொசைட்டி நிர்வாகிகள் பயன்படும் விதமாய் பென் டிரைவ் பரிசாக அளித்தார்கள். 


சில மாதங்களுக்கு முன்பு நமது உறுப்பினர் திரு நீலகண்டன் *மாதிரி நீதிமன்றத்தை நடத்தினார்.*  அந்த கூட்டத்தில் திரு. செந்தமிழ்ச்செல்வன் அவர்களும்,  நமது சொசைட்டி உறுப்பினர் சிலரும் கலந்துகொண்டோம்.  அந்த விவாதத்தில் நிறைய மூத்தவர்கள் திரு. பெருமாள், திரு. சேது, நமது தலைவர் என பலரும்  கலந்துகொண்டு, விவாதித்து சிறப்பாக நிறைவேற்றினார்கள். (காலையில் தலைவர் கூட குழுவில் நினைவுப்படுத்தி சொன்னார்.  அப்படி ஒன்றை தான் நேற்று நாம் நமது உறுப்பினர்களுக்காக நடத்தி காட்டினோம்.  நேற்று பாண்டிச்சேரியில் வந்து கலந்துகொண்டு உற்சாகப்படுத்தினார். அவருக்கும் நன்றி.

 


நேற்றைய கூட்டத்தில் திரு. முனியசாமி சொன்னது போல, ”என்னுடைய 20+ வயதுகளில் எங்களுடைய தணிக்கையாளரோடு வருடத்திற்கு ஒருமுறை வங்கி தணிக்கைக்கு செல்வோம்.  ஒவ்வொரு வேலையையும் சொல்லி, எப்படி செய்வது என சொல்லிக்கொடுத்துக்கொண்டே வருவார். தணிக்கை முடியும் பொழுது தான், இது தான் வங்கித் தணிக்கை என நம்மால் ஒரு புரிதலுக்கு வரமுடியும். அந்த உணர்வு தான் எனக்கு நேற்று கிடைத்தது.” என்றார்.  அவரைப்  போலவே பலருக்கும் ஒரு நல்ல புரிதல் கிடைத்ததாக உறுப்பினர்கள் சிலர் தெரிவித்தது நிறைவாக இருந்தது.

 

நன்றி.

 

-     -  GSTPS


தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

No comments:

Post a Comment