GST வழக்குகளில் முரண்பட்ட வாதங்களை முன்வைப்பதைத் தவிர்க்க வேண்டும் – வாடிக்கையாளர்களுக்கு மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் எச்சரிக்கை
GST சட்டத்தின் கீழ் நடைபெறும் விசாரணைகள் மற்றும் தணிக்கை நடவடிக்கைகளில், வாடிக்கையாளர்கள் தங்களது நிலைப்பாட்டில் தெளிவும் ஒருமித்த தன்மையும் காக்க வேண்டும் என்று மெட்ராஸ் உயர்நீதிமன்றம் முக்கியமான எச்சரிக்கையை வழங்கியுள்ளது.
இந்த வழக்கில், GST அதிகாரிகளின் முன் வழங்கப்பட்ட பதில்கள், பின்னர் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்கள், மேலும் மேன்முறையீட்டு நிலைகளில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலைப்பாடுகள் ஆகியவற்றில் முரண்பாடு (inconsistent defences) காணப்பட்டதை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துள்ளது. ஒரே விவகாரத்தில், சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபட்ட வாதங்களை முன்வைப்பது, வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையை பாதிக்கும் என்று நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது.
நீதிமன்றத்தின் முக்கியக் கருத்துப்படி, GST சட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் தங்கள் பதிவுகள், கணக்குப் புத்தகங்கள் மற்றும் ஆதார ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டியது ஒரு அடிப்படை சட்டப் பொறுப்பு. Show Cause Notice-க்கு (காரணம் காட்ட நோட்டீஸ்) பதில் அளிக்கும் போதே, சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களும், விளக்கங்களும் ஒரே நேரத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். பின்னர், வழக்கின் போக்கிற்கு ஏற்ப, முன்பு கூறியவற்றிற்கு முரணான புதிய வாதங்களை முன்வைப்பது அனுமதிக்க முடியாததாகும்.
மேலும், நீதிமன்றம் வலியுறுத்திய இன்னொரு முக்கிய அம்சம், ஒருமுறை எடுத்த நிலைப்பாட்டை வாடிக்கையாளர்கள் தொடர்ந்து காக்க வேண்டும் என்பதாகும். தணிக்கை அல்லது விசாரணை நிலையில் ஒரு விளக்கம், நீதிமன்றத்தில் வேறொரு விளக்கம், மேன்முறையீட்டில் மூன்றாவது விளக்கம் என மாறுபடுவது, சட்ட நடைமுறையில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். இவ்வாறான முரண்பட்ட வாதங்கள் முன்வைக்கப்படும் போது, வரி நிர்ணய அதிகாரிகள் அவற்றிலிருந்து எதிர்மறை முடிவுகளை (adverse inference) எடுக்க உரிமையுள்ளதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த தீர்ப்பு மூலம், GST வழக்குகளில், வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆலோசகர்கள், வழக்கின் ஆரம்ப நிலையிலேயே உண்மை நிலையை முழுமையாக ஆய்வு செய்து, அதற்கேற்ற ஒரே நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டு, அதனை ஆதரிக்கும் ஆவணங்களுடன் பதில்களை சமர்ப்பிக்க வேண்டும் என்பதைக் உயர்நீதிமன்றம் வலியுறுத்துகிறது.
அதே நேரத்தில், பதிவுகள் சரியாக பராமரிக்கப்படாமை, அல்லது தேவையான ஆவணங்களை தாமதமாக சமர்ப்பித்தல், அல்லது மாறுபட்ட விளக்கங்களை முன்வைத்தல் ஆகியவை, வாடிக்கையாளர்களுக்கு சட்ட ரீதியாக பாதகமாக முடியும் என்பதையும் இந்த தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது.
இறுதியாக… GST சட்டத்தின் கீழ் நடைபெறும் தணிக்கை, விசாரணை மற்றும் மேன்முறையீட்டு நடவடிக்கைகளில், பதிவுகள் முறையாக பராமரிக்கப்படுதல், ஆரம்பத்திலேயே தெளிவான மற்றும் ஒருமித்த நிலைப்பாடு எடுத்துக்கொள்ளப்படுதல், மற்றும் முரண்பட்ட வாதங்களைத் தவிர்த்தல் ஆகியவையே வாடிக்கையாளர்களின் சட்டப் பாதுகாப்பிற்கான முக்கியமான அடித்தளமாகும் என்பதை இந்த மெட்ராஸ் உயர்நீதிமன்ற தீர்ப்பு உறுதியாக நினைவூட்டுகிறது.
- தமிழில் - விக்கி.சீ, GSTPS உறுப்பினர்
Source : https://www.jurishour.in/gst/cautions-assessees-inconsistent-defences-gst/

No comments:
Post a Comment