Friday, January 16, 2026

Section 80-IB(10) : நிலம் யாருடையது என்பது முக்கியமா, திட்டத்தை நடத்தியது யார் என்பது முக்கியமா?


Section 80-IB(10) :
நிலம் யாருடையது என்பது முக்கியமா, திட்டத்தை நடத்தியது யார் என்பது முக்கியமா?

 

வரி சட்டத்தைப் படிக்கும் போது,
பல நேரங்களில் ஒரு எளிய தவறான புரிதல் பெரிய வழக்காக மாறிவிடுகிறது.
அதிலும் வீட்டு கட்டுமான திட்டங்களுக்கான வரிவிலக்குகளில்,
நிலம் யாருடையது?” என்ற கேள்வியே முதலில் முன்வைக்கப்படுகிறது.

ஆனால், வருமானவரி சட்டம் உண்மையில் கேட்கும் கேள்வி அது தானா
என்பதை இந்த உயர்நீதிமன்றத் தீர்ப்பு தெளிவாக நினைவூட்டுகிறது.

 

ஒரு பெண்மணி,
ஒரு நில உரிமையாளருடன் அதிகாரப் பத்திரம் செய்து கொண்டு,
அந்த நிலத்தில் குடியிருப்பு திட்டத்தை முழுமையாக உருவாக்குகிறார்.

அந்த திட்டத்தில்,

  • கட்டிட அனுமதிகள் பெறப்படுகின்றன
  • அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகின்றன
  • விற்பனை செய்யப்படுகிறது
  • வாங்குபவர்களிடமிருந்து பணம் பெறப்படுகிறது
  • திட்டத்தின் லாபம் அல்லது இழப்பு அனைத்தையும் அந்த பெண்மணியே ஏற்றுக்கொள்கிறார்

இந்த திட்டத்தில் கிடைத்த லாபத்திற்கு,
வருமானவரி சட்டம் Section 80-IB(10) கீழ்
வரிவிலக்கு கோரப்படுகிறது.

 

மதிப்பாய்வு அதிகாரி அதனை நிராகரிக்கிறார்.

அதற்குக் கூறப்பட்ட காரணம் ஒன்றே:

இந்த பெண்மணி நிலத்தின் சட்ட உரிமையாளர் அல்ல.
ஆகவே இந்த வரிவிலக்குக்கு தகுதி இல்லை
.”

இந்த இடத்தில் தான் சட்டமும், நடைமுறையும் பிரிகிறது.

 

Section 80-IB(10) என்ற பிரிவை கவனமாக வாசித்தால்,
அதில் எங்கும்
நில உரிமையாளர் இருக்க வேண்டும்
என்ற நிபந்தனை இல்லை.

அந்த பிரிவு பேசுவது,

  • குடியிருப்பு திட்டம்
  • திட்டத்தை உருவாக்கியவர்
  • திட்டத்தின் கட்டுப்பாடு
  • திட்டத்தில் இருந்து உருவான லாபம்

இந்த நான்கு அம்சங்களைப் பற்றித்தான்.

நிலத்தின் பெயர் யாருடையது என்பது
சட்டத்தின் மையக் கேள்வியே அல்ல.

 

இந்த விவகாரம் மேல் முறையீட்டுக்குச் செல்கிறது.
வருமானவரி மேன்முறையீட்டு தீர்ப்பாயம்,
இந்த பெண்மணி Contractor அல்ல,
Developer
என்று தெளிவாகக் கூறுகிறது.

ஏனெனில்,

  • கட்டுமானத்தை மேற்கொண்டது அவரே
  • அனுமதிகளை பெற்றது அவரே
  • விற்பனையை செய்தது அவரே
  • அபாயத்தையும் லாபத்தையும் ஏற்றது அவரே

நில உரிமையாளர் வெறும் நிலத்தை வழங்கியவர் மட்டுமே.

 

வரித்துறை இதனை உயர்நீதிமன்றத்தில் சவால் செய்கிறது.
உயர்நீதிமன்றம் மிகத் தெளிவாக ஒரு விஷயத்தைச் சொல்கிறது:

Section 80-IB(10) யில்,
சட்ட உரிமை அல்ல,
உண்மையான பொருளாதார உரிமை தான் முக்கியம்.

அதாவது,

  • பெயரில் உரிமை இல்லையெனினும்
  • அதிகாரப் பத்திரம் வழியாக
  • முழு திட்டத்தையும் நடத்தி,
  • வணிக அபாயத்தை ஏற்றவரே

இந்த பிரிவின் கீழ் Developer ஆகக் கருதப்படுவார்.

அந்த அடிப்படையில்,
இந்த பெண்மணிக்கு ₹13 கோடி வரையிலான வரிவிலக்கு
சரியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

 

இந்த தீர்ப்பு ஒரு முக்கியமான உண்மையை நினைவூட்டுகிறது.

வரி சட்டம்,
ஆவணங்களின் மேல் மட்டுமே நிற்காது.
வணிகம் உண்மையில் எப்படி நடந்தது
என்பதைத்தான் அது பார்க்கிறது.

ஒரு திட்டத்தில்,

  • யார் முடிவெடுத்தார்கள்
  • யார் செலவு செய்தார்கள்
  • யார் விற்பனை செய்தார்கள்
  • யார் லாபத்தை அனுபவித்தார்கள்

என்பதே வரி சட்டத்தின் பார்வை.

 

தமிழில் : இரா. முனியசாமி, வரி ஆலோசகர்


Source : 

https://economictimes.indiatimes.com/wealth/tax/lady-signs-poa-with-land-owner-builds-flats-on-land-and-sells-claims-rs-13-crore-tax-deduction-i-t-dept-sends-notice-she-fights-back-and-wins-in-hc/articleshow/126544402.cms?from=mdr

No comments:

Post a Comment