Thursday, May 21, 2026

நேரடிக் கூட்டத்தில் கலந்துகொள்வது எவ்வளவு அவசியம்?

 


வரி ஆலோசனைத் தொழில் என்றால்... “சட்டப் பிரிவு தெரிந்தால் போதும்என்று நினைப்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள். ஆனால் நடைமுறையில், இந்தத் தொழில் புத்தக அறிவால் மட்டும் ஓடுவதில்லை.

 

ஒரு அறிவிப்பு வந்த பிறகு அலுவலகத்தில் என்ன நடந்தது?
அந்த அறிவிப்பை அதிகாரி எந்த கோணத்தில் பார்த்தார்?
ஒரு வழக்கில் நீதிமன்றம் என்ன சொன்னது மட்டும் அல்ல...
அதை துறை எப்படி நடைமுறையில் எடுத்துக்கொள்கிறது?
வாடிக்கையாளரிடம் எப்படி விளக்குவது?
அபாயம் எங்கு இருக்கிறது?

 

இவை எல்லாம் காணொளியின் முகப்புப் படத்தில் கிடைக்காது. அதனால்தான் ஒரு நல்ல சொசைட்டியின் வலிமை, அதன் உறுப்பினர் எண்ணிக்கையில் இல்லைஅதன் கூட்டத்தில் எழும் கேள்விகளில் இருக்கிறது. சிலர் நினைப்பார்கள்:

 

குறிப்புகள் வந்துவிடுமே...” “வாட்ஸ்அப்பில் தகவல் வந்துவிடுமே...” “பிறகு ஆவணமாக பார்த்துக்கொள்ளலாம்...”  அப்படியென்றால் ஒரு சந்தேகம்.  ஒரு மருத்துவர் காணொளி பார்த்து மட்டும் அறுவை சிகிச்சை செய்வாரா?  அதே மாதிரி தான் இந்தத் தொழிலும். ஒரு நேரடி கலந்துரையாடலில் தான்… “இந்த பிரச்சினை நமக்கு மட்டும் இல்லையா?” என்பது உடையும். மற்றொருவர் சந்தித்த சிக்கல், நாளை நமக்கான பாதுகாப்பாக மாறும்.

 

ஒரு சிறிய விவாதம் கூட, பின்னர் லட்சக்கணக்கான வரி தாக்கத்திலிருந்து ஒரு வாடிக்கையாளரை காப்பாற்றலாம்.

GST...
Income Tax...
ESI...
PF...
தொழிலாளர் சட்டங்கள்...

 

இந்தத் துறைகள் எல்லாம் ஒருமுறை கற்றுக்கொண்டால் போதும்என்ற வகை அல்ல. இன்று தெரிந்தது, ஆறு மாதத்தில் பழையதாகி விடலாம். அதனால் கூட்டங்களில் பங்கேற்பது என்பது வருகைப் பதிவு போடுவது அல்ல. தங்களையே புதுப்பித்து வைத்துக்கொள்வது.

 

தங்களது தொழில்முறை மதிப்பை பாதுகாப்பது. நம் அறிவைக் கூர்மைப்படுத்துவது. “தனியாக போராடும் ஆலோசகர்நிலையிலிருந்து, “தொழில்முறை வட்டாரத்துடன் இணைந்த ஆலோசகர்நிலைக்கு மாறுவது.

 

முக்கியமாக... “இந்த தலைப்பு முக்கியமாக இருக்கிறதே... போய்விடலாம்...” என்று மட்டும் கூட்டத்திற்கு வருவது போதாது.

 

பல நேரங்களில், சாதாரணமாகத் தோன்றிய விவாதம் தான் நடைமுறையில் பெரிய விளைவைத் தரும்.

 

ஒரு நல்ல சொசைட்டி என்பது: மேடையில் சிலர் பேசும் இடம் அல்ல. பின்னால் அமர்ந்திருப்பவரும் கூட சிந்திக்கத் தொடங்கும் இடம்.

 

இறுதியாக...

 

ஒரு தொழில்முறை மனிதரின் வளர்ச்சியை தீர்மானிப்பது, அவர் எத்தனை வருடங்கள் தொழிலில் இருக்கிறார் என்பதல்ல.

 

அவர் இன்னும் கற்றுக்கொள்கிறாரா...
கேள்வி கேட்கிறாரா...
கலந்துகொள்கிறாரா...
விவாதிக்கிறாரா...
என்பது தான்!


இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, வருமானவரி, இபிஎப், .எஸ். ஆலோசகர்,

GSTPS உறுப்பினர்,

9551291721

 

No comments:

Post a Comment