Monday, May 18, 2026

Indistractable : கவனம் சிதறும் காலத்தில், கவனத்தை காப்பது எப்படி?

 


இன்றைய தொழில்முறை வாழ்க்கையில் அறிவு மட்டும் போதுமானதல்ல. அந்த அறிவை எந்த இடையூறும் இல்லாமல், தொடர்ந்து பயன்படுத்தும் திறனும் மிக அவசியமாகியுள்ளது.

 

குறிப்பாக வரி ஆலோசகர்கள், தணிக்கையர்கள், சட்ட ஆலோசகர்கள் போன்ற துறைகளில் பணிபுரிபவர்களுக்கு ஒரு நாள் முழுவதும் தொலைபேசி அழைப்புகள், வாடிக்கையாளர் செய்திகள், மின்னஞ்சல்கள், சமூக ஊடக அறிவிப்புகள், அவசர கோப்புகள் என எண்ணற்ற இடையூறுகள் இருக்கும்.

 

இந்த சூழலில், ஆழமான சிந்தனை (Deep Work) மற்றும் தொடர்ச்சியான கவனம் (Focus) ஆகியவை மெதுவாக குறைந்து கொண்டிருக்கின்றன.  அத்தகைய காலத்தில் மிக முக்கியமாகப் பேசப்படும் நூல்களில் ஒன்று தான்  Indistractable.

 

இந்த நூலை எழுதியவர் Nir Eyal. நடத்தை அறிவியல் (Behavioral Science) மற்றும்மனித கவன மேலாண்மை” குறித்து ஆராய்ந்து வருகிறார்.

 

கவனம் சிதறுவதற்கு தொழில்நுட்பம் மட்டும் காரணமல்ல; நமது உள்ளார்ந்த மனநிலைகளும் முக்கிய காரணம் என்கிறார்.

 

பலர் சமூக ஊடகங்கள், மொபைல், அறிவிப்புகள் ஆகியவற்றை குறை கூறினாலும்,  சலிப்பு, மன அழுத்தம், கவலை, தப்பிக்க நினைக்கும் மனநிலை போன்ற உள்ளார்ந்த தூண்டுதல்களே (Internal Triggers) மனிதர்களை கவனம் சிதறச் செய்கின்றன என்று விளக்குகிறார்.

 

இந்த நூல் வலியுறுத்தும் முக்கியமான அணுகுமுறைகள்

 

1. உள்ளார்ந்த தூண்டுதல்களை அடையாளம் காணுதல்

 

கவனம் சிதறும் தருணங்களை வெறும் பழக்கமாக பார்க்காமல், அதன் பின்னுள்ள மனநிலையை புரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசிரியர் கூறுகிறார்.

 

2. “To-do List” விட “Time Blocking”

 

செய்ய வேண்டிய பணிகளின் பட்டியல் மட்டும் போதாது. எந்த நேரத்தில் எந்தப் பணியை செய்வது என்பதை முன்கூட்டியே நேர அட்டவணையில் நிர்ணயிக்க வேண்டும்.

 

3. வெளிப்புற இடையூறுகளை கட்டுப்படுத்துதல்

 

மொபைல் அறிவிப்புகள், திட்டமிடப்படாத கூட்டங்கள், தொடர்ந்து வரும் செய்திகள் போன்றவை உற்பத்தித்திறனை பாதிக்கின்றன. அவற்றை நிர்வகிக்கும் ஒழுங்கு அவசியம்.

 

4. தன்னாட்சி ஒப்பந்தங்கள்

 

தனக்குத்தானே விதிமுறைகள் அமைத்துக்கொள்வது, பிறரிடம் உறுதி அளிப்பது,  தேவையான தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்துவது போன்ற முறைகள் மூலம் கவனத்தை பாதுகாக்கலாம்.

 

 “Traction” மற்றும் “Distraction”

 

  • இலக்கை நோக்கி நகர்த்தும் செயல்கள்Traction
  • இலக்கிலிருந்து விலக்கும் செயல்கள்Distraction

 

இந்த இரண்டிற்கும் இடையிலான வேறுபாட்டை தெளிவாக அறிதலே, கவன மேலாண்மையின் அடிப்படை என்று ஆசிரியர் விளக்குகிறார்.

வரி ஆலோசகர்கள் போன்ற தொழில்முறை நபர்களுக்கு இந்த நூல் மிகவும் தொடர்புடையதாக இருக்கிறது.

ஒரு கோப்பில் ஆழமாக கவனம் செலுத்த வேண்டிய நேரத்தில் கூட, இடையறாத அழைப்புகள் மற்றும் தகவல் பரிமாற்றங்கள் சிந்தனையை முறித்துவிடுகின்றன.

 

அந்த சூழலில்:

  • நேர பகிர்வு (Time Blocking)
  • கவன பாதுகாப்பு முறைகள்
  • இடையூறு மேலாண்மை
  • மன ஒழுங்கு

போன்ற கருத்துகள் நடைமுறையில் உண்மையான பயனை வழங்கக்கூடியவை.

 

Indistractable நூல், வெறும் உற்பத்தித்திறன் (Productivity) குறித்து மட்டும் பேசும் நூல் அல்ல.
அதுதன்னுடைய கவனத்தை யார் கட்டுப்படுத்துகிறார்கள்?” என்ற அடிப்படை கேள்வியை எழுப்பும் நூல்.

 

இன்றைய டிஜிட்டல் சூழலில், அறிவை விடகவனத்தை பாதுகாக்கும் திறன்தான் மிகப்பெரிய போட்டி திறனாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதை இந்த நூல் கவனப்படுத்துகிறது.

 

இறுதியாக..

தொடர்ந்து கற்றுக்கொண்டு இருக்கும் தொழில்முறை நபர்களுக்கு, எப்படி அதிகமாக வேலை செய்வது?” என்பதை விட, “எப்படி சிதறாமல் வேலை செய்வது?” என்பதே சமகாலத்தில் முக்கியமான கேள்வி. அந்தக் கேள்விக்கான நடைமுறை வழிகாட்டிகளில் முக்கியமான ஒன்றாக இந்த நூலை பார்க்கலாம்.

 

கவனத்தை கட்டுப்படுத்த முடியாதவர், தன் வாழ்க்கையையே கட்டுப்படுத்த முடியாது


-          இரா. முனியசாமி

ஜி.எஸ்.டி, வருமானவரி, இபிஎப், .எஸ். ஆலோசகர்,

GSTPS உறுப்பினர்

📞 95512 91721

 

No comments:

Post a Comment