நமது சொசைட்டியின் 50வது நேரடிக் கூட்டம் — ஒரு பயணத்தின் அர்த்தமுள்ள மைல்கல்
2019ஆம் ஆண்டு நமது சொசைட்டி தொடங்கியபோது, ஒரு எண்ணமே இருந்தது — நாமெல்லாம் சேர்ந்து கற்றுக் கொள்ள ஒரு நல்ல மேடை இருக்க வேண்டும். அந்த எண்ணம் மாதந்தோறும் நேரடிக் கூட்டங்களாக நடைமுறைக்கு வந்தது.
ஆரம்பத்தில் இருந்த அந்த ஆர்வமும், ஒருவருக்கொருவர் நெருக்கமாக பழகிய சூழலும் தான் இன்று இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது.
பின்னர் வந்த கொரோனா காலம் எல்லாவற்றையும் தற்காலிகமாக நிறுத்தியது. நேரடிக் கூட்டங்கள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டபோது, ஒரு இடைவெளி வந்தது போல தோன்றியது. ஆனால் அந்த இடைவெளியே நமக்கு ஒரு புதிய வழியைத் திறந்தது.
“கெட்டதில் ஒரு நல்லது” என்பதுபோல, ஜூம் (Zoom) கூட்டங்கள் தொடங்கப்பட்டன. ஆரம்பத்தில் அது ஒரு மாற்றமாக இருந்தாலும், விரைவில் அது நமக்கு இன்னும் பெரிய வாய்ப்பாக மாறியது.
முன்பு நேரில் வர முடியாமல் இருந்த பலர் இப்போது எளிதாக ஜூம் கூட்டத்தில் உறுப்பினர்கள் இணைந்தனர். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பலரும் கலந்து கொள்ளத் தொடங்கியதால், அனுபவங்களும் கணிசமாக அதிகரித்தது.
இன்று, அந்த தொடர்ச்சியான முயற்சியின் விளைவாக
• 50வது நேரடிக் கூட்டம்
• 175வது ஜூம் கூட்டம்
- என்ற நிலைக்கு வளர்ந்து இருக்கிறோம்.
இந்த எண்கள் ஒரு சாதாரண கணக்கு அல்ல. ஒவ்வொரு கூட்டத்திலும் இருந்த பங்கேற்பு, தொடர்ந்து இருந்த முயற்சி, மற்றும் அனைவரின் பங்களிப்பு மிக முக்கியமானவை.
இந்த கூட்டங்களில் பேசப்பட்டவை நமக்கு தொழில்முறையில் தினமும் தொடர்புடைய விஷயங்கள் — ஜி.எஸ்.டி, வருமானவரி, இ.எஸ்.ஐ, பி.எப். போன்றவை.
ஒரு விஷயத்தை சட்டம் என்ன சொல்கிறது, நடைமுறையில் அது எப்படி நடக்கிறது, நீதிமன்றங்கள் அதை எப்படி பார்த்துள்ளன என்பதை இணைத்து புரிந்துகொள்ளும் தன்மை உருவாகியுள்ளது.
அதனால் தான், தொடர்ந்து கலந்து கொண்ட உறுப்பினர்களின் வளர்ச்சியை நாம் தெளிவாக அறியமுடிகிறது. கேட்பவர்களாக இருந்தவர்கள், இன்று விவாதிப்பவர்களாகவும், தீர்வு சொல்லக்கூடியவர்களாகவும் மாறியிருக்கிறார்கள் என்பது எவ்வளவு பெரிய மாற்றம்.
அதே நேரத்தில், இதில் கலந்து கொள்ளாதவர்கள், கலந்து கொள்ள
வாய்ப்பு இல்லாதவர்கள் ஒரு
நல்ல வாய்ப்பை தவறவிட்டிருக்கிறார்கள் என்பதும் உண்மை.
அது அவர்களுக்கு பெரிய இழப்பு தான்.
இந்த அளவுக்கு தொடர்ந்து கூட்டங்களை நடத்துவது எளிதான விஷயம் அல்ல. அதற்குப் பின்னால் நிர்வாகிகளின் உழைப்பு இருக்கிறது.
குறிப்பாக, தலைவர் திரு. செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் கூட்டங்களை நடத்தியே ஆகவேண்டும் என்ற உறுதியும், அவைகளை தரமாகவும் நடத்தவேண்டும் என்ற மெனக்கெடலும் தான் இந்த பயணத்தில் முக்கியமான பங்கு வகிக்கிறது.
பல தொழில்முறை அமைப்புகளோடு தொடர்பில் இருந்து, அந்த உறவுகளை பராமரித்து வந்ததன் மூலம், நமக்கு பல திறமையான நிபுணர்கள்
வந்து பேசியிருக்கிறார்கள்.
அழைத்தால் நேரம் ஒதுக்கி வந்து, தங்களது அனுபவத்தை பகிர்ந்த அந்த பேச்சாளர்களின் பங்களிப்பு நமது மேடையை,
நமது அறிவையும் மேலும்
வளப்படுத்தியுள்ளது என நிச்சயம் சொல்லலாம்.
மேலும், தலைவர் தமிழகம் தழுவிய அளவில் பல
அமைப்புகளின் வாட்சப் குழுக்கள்
மற்றும் தொழில்முறை வட்டாரங்களில் தொடர்ந்து இணைந்திருப்பதன் மூலம், எல்லோருனுடனும் உறவை இணக்கமாக
பராமரித்து வருகிறார்கள். அதுவே இந்த
கூட்டங்களின் தரத்தையும், தொடர்ச்சியையும் உறுதி செய்கிறது என நிச்சயம் சொல்லலாம்.
இந்த 50வது நேரடிக் கூட்டத்தை இன்று அடைந்திருக்கிறோம். இது மென்மேலும் அறிவின் வளர்ச்சிப் பாதை. நாம் அதனுடன் வளர்ந்துகொண்டே இருப்போம்.
இறுதியாக…
இந்த பயணம் வெறும் எண்கள் இல்லை. உறுப்பினர்களின் வளர்ச்சி, அவர்கள் பெற்ற நம்பிக்கை, மற்றும் உருவான உறவுகள் — இவையே இதன் உண்மையான மதிப்பு.
அதனால், வருங்கால கூட்டங்களை தவறவிடாமல் தொடர்ந்து கலந்து கொண்டு, இந்த மேடையின் பயனை முழுமையாகப் பெறுமாறு உறுப்பினர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இரா. முனியசாமி
வரி ஆலோசகர்
GSTPS உறுப்பினர்
📞 95512 91721
-
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987


No comments:
Post a Comment