Tuesday, June 9, 2026

RTI போட்டு கணவரின் வருமான வரித் தாக்கல் செய்த ரிட்டனை வாங்கலாமா?


"
சட்டம் உரிமைகளை மட்டும் வழங்குவதில்லை; அவற்றைப் பயன்படுத்த வேண்டிய பாதையையும் நிர்ணயிக்கிறது." 

நீதியாளர் வி.ஆர். கிருஷ்ண ஐயர்.

***

ஒரு காலத்தில் வீட்டில் சண்டை வந்தால், "சரி... உங்க சம்பளம் எவ்வளவு?" என்ற கேள்வி மட்டும் வந்தது. இப்போது காலம் மாறிவிட்டது.

 

"நீங்கள் சொல்ல வேண்டாம்... RTI போட்டு வருமான வரித்துறையிடமே கேட்டுத் தெரிந்துகொள்கிறேன்!" என்ற நிலைக்கு சிலர் வந்துவிட்டார்கள்.

 

குறிப்பாக ஜீவனாம்ச வழக்குகள் நடக்கும் போது, இந்த எண்ணம் பலருக்கும் தோன்றுகிறது.

 

"கணவர் உண்மையில் எவ்வளவு சம்பாதிக்கிறார்? வருமான வரி தாக்கலில் என்ன காட்டியிருக்கிறார்? RTI போட்டு வாங்கிவிடலாமே!" என்று நினைக்கலாம்.

 

ஆனால் நீதிமன்றம் சொன்ன பதில் என்ன தெரியுமா?

"அவ்வளவு சுலபம் இல்லை!"

வருமான வரிக் கணக்குகள், வருமான விவரங்கள், சொத்து விவரங்கள் போன்றவை ஒருவரின் தனிப்பட்ட தகவல்கள். அதனால், கணவன்-மனைவி இடையேயான ஜீவனாம்ச வழக்கைக் காரணம் காட்டி, RTI சட்டத்தின் கீழ் அவற்றை நேரடியாக வழங்க முடியாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

 

இதைக் கேட்டவுடன் இன்னொரு கேள்வி எழுகிறது. "அப்படியானால், ஜீவனாம்ச வழக்கில் உண்மையான வருமானத்தை எப்படி நிரூபிப்பது?" அதற்கும் நீதிமன்றம் வழி காட்டியுள்ளது.

 

தேவையான வருமான விவரங்கள், சொத்து விவரங்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களை, குடும்பநல நீதிமன்றம் அல்லது சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் நடைமுறைகள் மூலம் கோரலாம்.

 

அதாவது தகவலைப் பெறும் உரிமை இருக்கலாம். ஆனால் அந்தத் தகவலைப் பெறும் கதவு எது என்பதும் முக்கியம்.

 

சிலர் வீட்டின் முன் கதவு பூட்டியிருந்தால், பக்கத்து ஜன்னல் வழியாக உள்ளே செல்ல முயற்சிப்பார்கள்சட்டம் சொல்வது என்னவென்றால்:

 

"உங்களுக்கு உள்ளே செல்ல உரிமை இருக்கலாம். ஆனால் சரியான கதவு வழியாகத்தான் செல்ல வேண்டும்!"

 

இந்த வழக்கு நமக்கு சொல்லும் பாடமும் அதுதான். சட்டத்தில் உரிமைகள் முக்கியம். ஆனால் அந்த உரிமையைப் பயன்படுத்தும் நடைமுறை அதைவிட முக்கியம்.

 

சரியான உரிமை + சரியான நடைமுறை = சட்டப்படி ஏற்றுக்கொள்ளப்படும் முடிவு. ஒரு வழக்கை வெல்ல சில நேரங்களில் உண்மை மட்டும் போதாது; சரியான நடைமுறையும் அவசியம்.


இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, வருமானவரி, இபிஎப், .எஸ்.ஐ, எல்.ஐ.சி ஆலோசகர்,

GSTPS உறுப்பினர்,

9551291721


(இந்த மாத நமது GSPS  ஜூன் மாத நியூஸ் லெட்டரில் இருந்து…. )

No comments:

Post a Comment