Saturday, June 13, 2026

50+ வயதில் கணக்கு மேலாளர் (Accounts Manager) பதவியில் இருந்து வரி ஆலோசகராக மாறுவது – ஒரு புதிய இன்னிங்ஸ்!

 


வருடத்திற்கு ஒருவராவது அக்கவுண்ட்ஸ் மேனேஜராக இருப்பவர் வரி ஆலோசராக மாறுவதில் என்னென்ன சவால்கள் இருக்கின்றன? மாறலாம் என இருக்கிறேன் என ஆலோசனை கேட்கிறார்கள்.

 

இது சம்பந்தமாக அசை போடும் பொழுது…. என் அனுபவத்தில் தோன்றியவற்றை எழுதியிருக்கிறேன்.  *நமது சொசைட்டியில் நிறைய வரி ஆலோசகர்கள் இருக்கிறீர்கள். உங்கள் அனுபவத்தையும் பகிர்ந்தால் நலம்.* 

 

***

 

பலர் நினைப்பார்கள். "இந்த வயதில் புதியதாக என்ன தொடங்க முடியும்?" ஆனால் உண்மையில் பார்த்தால், 50+ வயதில் Tax Consultant ஆக மாறுபவர்களுக்கு சில தனிப்பட்ட பலங்கள் இருக்கின்றன.

 

இளம் வயதில் கிடைக்காத அனுபவம். நிறுவனங்களின் நடைமுறை செயல்பாடுகள் பற்றிய புரிதல். பணியாளர்கள், வங்கிகள், தணிக்கையாளர்கள், வரித்துறை,  வாடிக்கையாளர்கள் ஆகியோருடன் வேலை செய்த அனுபவம். இவை அனைத்தும் ஒரு பெரிய அடித்தளம். அதன் மீது சில புதிய திறன்களை சேர்த்துக்கொண்டால், ஒரு சிறந்த வரி ஆலோசகராக உருவாக முடியும்.

 

முழுநேர வேலையிலிருந்து படிப்படியாக மாறலாம்

 

பல ஆண்டுகளாக நிலையான வேலை பார்த்தவர்கள், உடனடியாக வேலையை விட்டுவிட வேண்டிய அவசியமில்லை. மாறாக,  பகுதி நேர வேலை  ஆலோசகர் பொறுப்பு,  நெகிழ்வான வேலை நேரம் போன்ற வழிகளைத் தேர்வு செய்யலாம். இதனால் வருமான நிலைத்தன்மையும் இருக்கும். அதே நேரத்தில் புதிய துறையிலும் அனுபவம் சேர்க்க முடியும்.

 

தினமும் கற்றுக்கொள்ளும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளலாம்


கணக்கியல் துறையில் அனுபவம் ஏற்கனவே இருக்கிறது. இப்போது அதனுடன், ஜி.எஸ்.டி சட்டம்,  வருமானவரிச் சட்டம், அறிவிப்புகள் (Notifications ),  சுற்றறிக்கைகள் (Circulars), வழக்கு தீர்ப்புகள் (Case Laws) போன்றவற்றை தொடர்ந்து படிக்கும் பழக்கத்தை இணைத்துக்கொள்ளலாம்.

 

தினமும் ஒரு மணி நேரம் படித்தால்கூட, ஒரு வருடத்தில் ஏற்படும் முன்னேற்றம் ஆச்சரியப்பட வைக்கும்.

 

நோட்டிசுக்கு பதில் (Reply Drafting) திறனை வளர்த்துக்கொள்ளலாம்

 

ஒரு வரி ஆலோசகரின் முக்கியமான திறன்களில் ஒன்று, சரியான பதிலை சரியான முறையில் எழுதுவது. நோட்டிசுககளை படிப்பது, பழைய கடிதங்களை ஆராய்வது, சட்டப்பிரிவுகளை இணைத்து விளக்குவது, போன்றவற்றை தொடர்ந்து பயிற்சி செய்தால் மிகுந்த தன்னம்பிக்கை உருவாகும்.

 

எழுதும் திறன் மிகப்பெரிய பலமாக மாறும்

 

ஒரு நல்ல வரி ஆலோசகர் என்பது சட்டம் தெரிந்தவர் மட்டுமல்ல. சட்டத்தை எளிமையாக விளக்கத் தெரிந்தவரும் ஆவார். அதற்காக, சிறிய கட்டுரைகள்,  சட்ட விளக்கங்கள், குறிப்புகள் , வாடிக்கையாளர் தகவல் செய்திகள் எழுதும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளலாம். ஒரு வருடத்திற்குப் பிறகு அந்த எழுத்துகளே உங்கள் அடையாளமாக மாறலாம்.

 

நேர ஒழுங்கை (Time Management) தனிப்பட்ட முறையில் உருவாக்க வேண்டும்

 

ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும்போது அமைப்பு நம்மை ஒழுங்குபடுத்தும். சொந்தமாக செயல்படும்போது நாம்தான் நம்மை ஒழுங்குபடுத்த வேண்டும். அதற்காக, தினசரி திட்டம்  வார இலக்குகள்  செய்யவேண்டிய வேலை (Follow-up) பட்டியல், படிப்பு நேரம்  ஆகியவற்றை முறையாக அமைத்துக்கொள்ளலாம்.

 

இந்த ஒரு பழக்கம் மட்டுமே பலரை விட முன்னே கொண்டு செல்லும்.

 

மக்களுடன் தொடர்பு கொள்ளும் வட்டாரத்தை விரிவுபடுத்தலாம்

 

வரி ஆலோசகர் தொழிலில் அறிவு முக்கியம். அதே அளவுக்கு தொடர்புகளும் முக்கியம். அதனால்,  தொழில் சங்கங்கள் , வணிக அமைப்புகள், தொழில்முறை கூட்டங்கள், பயிற்சி நிகழ்ச்சிகள் , ஆகியவற்றில் தொடர்ந்து பங்கேற்கலாம்.

இது புதிய வாய்ப்புகளை உருவாக்கும்.

 

தொழில்நுட்பத்தை நண்பனாக மாற்றிக்கொள்ளலாம்

 

இன்றைய காலத்தில்,  செயற்கை நுண்ணறிவு கருவிகள், தேடித் தருகிற கருவிகள் (Research Tools ), சுயமாக வேலை செய்யும் முறை (Automation Systems ) போன்றவை ஒரு ஆலோசகரின் திறனை பல மடங்கு உயர்த்துகின்றன.  பல வருட அனுபவத்துடன் தொழில்நுட்பத்தையும் இணைத்துக்கொண்டால், செயல்திறன் கணிசமாக அதிகரிக்கும்.

 

மிகப்பெரிய பலம்அனுபவம்

 

இளம் வயதில் அறிவு அதிகமாக இருக்கலாம். ஆனால் அனுபவம் காலப்போக்கில்தான் கிடைக்கும். 50+ வயதில் வரி ஆலோசகராக மாறுபவர்களின் மிகப்பெரிய சொத்து, அவர்கள் பார்த்திருக்கும் வாழ்க்கை அனுபவமும், தொழில் அனுபவமும் தான். ஒரு Balance Sheet- மட்டும் அல்ல, ஒரு தொழிலின் பின்னால் இருக்கும் நடைமுறை சிக்கல்களையும் அவர்கள் புரிந்திருப்பார்கள்.

 

அந்த அனுபவம் பல வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையை உருவாக்கும்.

 

இறுதியாக...

 

50+ வயதில் வரி ஆலோசகராக மாறுவது ஒரு தொழில் மாற்றம் மட்டுமல்ல. பல ஆண்டுகள் சேர்த்துக்கொண்ட அனுபவத்தை, மற்றவர்களுக்கு பயனுள்ள ஆலோசனையாக மாற்றும் ஒரு வாய்ப்பு. படிப்படியாகத் திட்டமிட்டு, தொடர்ந்து கற்றுக்கொண்டு, ஒழுங்கை வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றிக்கொண்டால், இந்தப் பயணம் புதிய வருமானத்தையும், புதிய அடையாளத்தையும், புதிய திருப்தியையும் வழங்கக்கூடியதாக இருக்கும்.

 

-    இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, வருமானவரி, இபிஎப், .எஸ்.ஐ, எல்.ஐ.சி ஆலோசகர்,

GSTPS உறுப்பினர்,

9551291721

 

பின்குறிப்பு  - இந்த கட்டுரையை நேர்மறையில் கவனமாய் எழுதியிருக்கிறேன்.  வரி ஆலோசகர் பக்கமெல்லாம் வராதீர்கள். ஏக பதட்டம். வருமானம் நிலையில்லை.  50க்கு மேல் இதையெல்லாம் தாங்கமுடியாது.  என இன்னொருவரும் சொல்லலாம். அதுவும் மறுப்பதற்கில்லை. அதுவும் அனுபவங்கள் தான்.

No comments:

Post a Comment